எனது ஆசான் வீரபாகுஜி தொடர்..1

எனது ஆசான் வீரபாகுஜி தொடர்..1

Share it if you like it

1978 ஆம் ஆண்டு, சேலம் வித்யாமந்திர் பள்ளியில் நான் இரண்டாம் ஆண்டு சங்க சிக்ஷா வர்க (ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்) முடித்த கையோடு பிரசாரக்காக வந்தேன். அப்போதைய வேலூர் ஜில்லாவில் திருவண்ணாமலை நகர் பிரசாரக் (நகர அமைப்பாளர்) என அறிவிக்கப்பட்டேன். வீரபாகுஜி ஜில்லா பிரசாரக் (மாவட்ட அமைப்பாளர்). அந்த சமயம் டில்லியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக, ஜனதா கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஜனதா கட்சிக்குள் இருந்த சில சுயநல அரசியல்வாதிகள் ‘இரட்டை உறுப்பினர்’ பிரச்னையை எழுப்பினர்; ஜனதா கட்சி ஆட்சியில் அங்கம் வகித்த வாஜ்பாய், அத்வானி போன்ற (ஜனசங்க) ஸ்வயம்சேவகர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் உள்ள தங்கள் தொடர்பை அறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் ஜனதா கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இரண்டு அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்றும் கலகம் செய்தனர். சங்கத்துடனான தொடர்பை அறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஸ்வயம்சேவகர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் ஜனதா கட்சியில் இருந்த சுயநல அரசியல்வாதிகள் மொரார்ஜி தேசாயின் ஆட்சியைக் கவிழ்த்தனர். அரசு கவிழ்ந்ததற்கு ஆர்.எஸ்.எஸ். காரணமாக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது இயற்கையே.

சங்கத்தின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல 1979 ஆகஸ்ட் மாதம் முதல் ‘ஜனஜாக்ரண்’ இயக்கத்தை (மக்கள் தொடர்பு இயக்கம்) நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்கள் தொடர்பு செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை பொதுக்கூட்டத்திற்கு பிராந்த பிரசாரக் (மாநில அமைப்பாளர்) சூரியநாராயண ராவ்ஜி வருவதாக தேதி கொடுத்தார். நானோ ஊருக்கு புதியவன்; நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று எனக்கு உள்ளூரக் கலக்கம். உபஷாகா முக்கிய சிக்ஷக் என்ற பொறுப்பிலிருந்து நேராக பிரசாரக் பணிக்கு வந்தவன் நான். நகர், பாக் அளவில் கூட பணி செய்து அனுபவம் இல்லை. அப்போது வீரபாகுஜி திருவண்ணாமலை வந்தார். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். போலீஸ் அனுமதி, சுவர் எழுத்து வாசகங்கள், துண்டுப் பிரசுர வாசகங்கள், பொதுக்கூட்டத் தலைமை, சவுண்டு சர்வீஸ் என எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்துக் கொடுத்தார். வேலூருக்குச் சென்று சுவரொட்டியை அச்சடித்து ராமஜெயம் பஸ்சில் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். ஒரு தாய் குழந்தையின் கைபிடித்து நடை பழக்குவது போல, பிரசாரகர்களை அவர் வளர்த்தார். எனக்கு மேலே உள்ள அதிகாரி அவர் என்று நான் கருத – என்றும் இடம் கொடுத்ததில்லை. உடன் பிறந்த அண்ணனாகத்தான் பழகினார்.

திருவண்ணாமலையில் பிரபலமான வக்கீல் தாண்டவராயன் தலைமையில் சன்னிதி தெருவில் சூரிஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. முதலில் தலைவர் உரையாற்றினார். அடுத்து குடியாத்தம் பத்மநாபன்ஜியின் உரை இருந்தது. நகர அமைப்பாளர் ஜோதி பேசுவார் என திடீரென்று வீரபாகுஜி அறிவித்தார். எனக்கு குலைநடுங்கியது. இருந்தாலும் மேடை மீது ஏறினேன். ஒரு நிமிடம் மௌனமாக இருந்தேன். சூரிஜி எனும் ஜாம்பவான் முன்னிலையில் என்ன பேசுவது? நான், விக்டோரியா மகாராணி கொண்டாட்டத்தில் இனிப்புகளை டாக்டர்ஜி வீசியெறிந்த கதை, வந்தே மாதரம் முழங்கிய கதைகளைச் சொல்லி, தேசபக்தியை வளர்ப்பது ஆர்.எஸ்.எஸ். என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டேன். கூட்டம் முடிந்த பின், விவஸ்தா எல்லாம் முடித்துவிட்டு சூரிஜி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றேன்.

‘‘என்னப்பா ஜோதி! பொதுக்கூட்டத்தில் டாக்டர்ஜியைப் பற்றி கதை சொல்லுகிறாய்? இதுவென்ன சங்க வர்க என்று நினைத்துக் கொண்டாயா? சங்கத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தானே இந்தப் பிரசார பொதுக்கூட்டம்?’’ என்றார் சூரிஜி.

‘‘ஜி, எனக்கு பொதுக்கூட்டத்தில் பேசி அனுபவம் இல்லை; தயாரிப்பும் இல்லை’’ என்றேன் நான்.

சூரிஜி என்னை அருகில் அழைத்து, ‘‘கூட்டத்தில் வீரபாகு பேசிய பேச்சைக் கேட்டாயா? அவரிடம் பேசக் கற்றுக் கொள்’’ என்று என் கன்னத்தை செல்லமாகத் தட்டிக் கூறினார் சூரிஜி.

1.10.1979 தேதியிட்ட துக்ளக் வார இதழில் ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்’ என்ற தலைப்பில் பிராந்த பிரசாரக் சூரிஜியின் பேட்டி வந்தது. துக்ளக் துணை ஆசிரியர் மதலை என்பவர் பேட்டியை எடுத்தார். பேட்டியின் இறுதிப் பகுதியில் சென்னை ‘சக்தி’ கார்யாலயத்தின் விலாசம் (ஆர்.எஸ்.எஸ். தமிழகத் தலைமை அலுவலகம்) தரப்பட்டது. சூரிஜியின் அற்புதமான அந்தப் பேட்டி, சங்கத்தின்மீது எதிரிகளால் போர்த்தப்பட்டிருந்த பொய்ப் பிரசாரம் எனும் மாய வலையை அறுத்தெறிந்தது. அந்தப் பேட்டியைப் படித்தவர்கள் மத்தியில் மேலும் ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் பொங்கியது. ‘‘எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ். கிளை துவங்க வேண்டும். தேசபக்தி, ஒழுக்கம், கட்டுப்பாடு, எங்கள் ஊர் இளைஞர்களுக்குத் தேவை’’ என்றபடி 600-க்கும் மேற்பட்ட கடிதங்கள் சென்னை ‘சக்தி’ கார்யாலயத்திற்கு வந்து குவிந்தன.

ஜனஜாக்ரண் முடிவடைந்த பிறகு, சென்னை கார்யாலயத்தில் பிரசாரகர்களுக்கான பைட்டக் (ஆலோசனைக் கூட்டம்) இருந்தது. நானும் வீரபாகுஜியும் கலந்து கொண்டோம். வேலூர் ஜில்லாவில் அச்சடிக்கப்பட்ட விதவிதமான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அத்தனையும் மாடலுக்கு ஒன்றாக எடுத்துவந்து சென்னை காரியாலயத்தில் காட்சிப்படுத்தினார் வீரபாகுஜி. மற்றவர்களுக்கு இந்த ஐடியா வரவில்லை. அவற்றை ஒன்றுவிடாமல் பார்வையிட்ட சூரிஜி, ‘‘சபாஷ் வீரபாகு! சபாஷ்!’’ என்று வீரபாகுஜியின் முதுகைத் தட்டிப் பாராட்டிய காட்சி, இன்றும் என் மனக்கண்ணில் அழியாமல் இருக்கிறது.

கார்யாலயத்திற்கு வந்திருந்த கடிதங்களை ஜில்லா வாரியாகப் பிரித்து ‘‘சகோதரர்களே! பைட்டக் முடித்து சென்றவுடன், கடிதங்கள் வந்த ஊர்களுக்கு உடனே தகுந்த நபரை கொண்டு ஷாகாக்கள் ஆரம்பிக்க வேண்டும். காலதாமதம் கூடாது’’ என்று சூரிஜி குறிப்புக் கொடுத்தார். கடிதங்களை ஜில்லா பிரசாரகர்கள் வசம் ஒப்படைத்தார். வேலூர் ஜில்லாவிற்கு சுமார் 25 கடிதங்கள் இருந்தன. அவற்றில் 2 கடிதங்களை வீரபாகுஜி என்னிடம் கொடுத்தார். திருவண்ணாமலை – திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள இறையூர், மாடப்பள்ளி எனும் கிராமங்களிலிருந்து வந்த கடிதங்கள் அவை. இறையூர் பற்றி வேறொரு சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் எழுதுகிறேன்.

**********

(இந்த ஜனஜாகரணின் போது தமிழகத்தில் ஒரு ரூபாய் விலைக்கு சங்க அறிமுகப் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தக காப்பி யாரிடமாவது இருந்தால் அதன் அட்டைப்படத்தை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் (எண்: 94441 29572) அனுப்பவும். இரண்டு காப்பிகள் இருந்தால், என் பெயருக்கு ஒரு காப்பியை சென்னை ‘சக்தி’ கார்யாலய விலாசத்துக்கு ஸ்பீட் போஸ்டில் அனுப்பவும். ஏனெனில், வீரபாகுஜியின் ஆளுமையோடு சம்பந்தப்பட்டது அந்தப் புத்தகம். ).

அன்பர்களே! மாடப்பள்ளியில் ஷாகா உருவான விதம் – திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பு – அதை லாவகமாகவும் சமயோசிதமாகவும் கையாண்ட வீரபாகுஜியின் யுக்தி – அகில பாரத அளவில் மாடப்பள்ளி ஷாகா அறிமுகமான சம்பவம் ஆகியற்றைத் தொகுத்து, அடுத்த சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் சந்திக்கிறேன்.

– சுந்தர.ஜோதி


Share it if you like it