எனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 2

1
366

1979 ஜனஜாக்ரணின் போது வந்த கடிதத்தை சூரிஜி கொடுத்திருந்தார். ‘‘எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். வேண்டும்’’ என்று மூர்த்தி என்பவர் எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு, அவரைத் தேடி திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மாடப்பள்ளிக்குச் சென்றேன்.

சிறிய குடிசை வீடு, மூன்று குழந்தைகள், தினசரி தேங்காயும் சர்க்கரையும் கலந்து பர்பி மிட்டாய் செய்து, சுற்றியுள்ள 20 கிராமங்களிலுள்ள தேநீர்க் கடை, பெட்டிக் கடைகளுக்கு விநியோகம் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனம். அவருடன் பள்ளி மாணவர்கள் பலர் தொடர்பில் இருந்தனர். குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்றவற்றை இலவசமாக வாங்கித் தருவது, பொங்கல், சுதந்திர தினம் வந்தால் மாணவர்களிடையே போட்டி நடத்தி சிறு பரிசுகள் கொடுப்பது என இளைஞர் குழாமுடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்.

எனது வருகை குறித்து ஏற்கனவே நான் கடிதம் எழுதியிருந்ததால், மாலையில் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஊரின் பஸ் நிறுத்தத்தை ஒட்டி உள்ள மைதானத்தில் ஒன்றாகச் சந்தித்தோம். அன்றே ஷாகா (சங்க கிளை) ஆரம்பிக்கப்பட்டது.

என் திட்டப்படி மாடப்பள்ளியில் மூன்று நாட்கள் தங்கி சாயம் ஷாகாவை (மாலை நேர ஷாகா) நடத்தினேன். பிறகு வாரம் ஒருநாள் வருவது என்று முடிவாகி, ஷாகா நிகழ்ச்சிநிரல் தயார் செய்து அதன்படி ஷாகாவை தினசரி நடத்திட மூர்த்திக்கு பயிற்சியும் அளித்துவிட்டு வந்தேன்.

ஒரு மாதம் கழித்து தக்ஷத வர்கா (திறமைப் பயிற்சி வகுப்பு) நடந்தது. கடைசி நாளன்று வீரபாகுஜி கலந்துகொண்டார். அன்றே ஷாகாவிற்கு த்வஜம் (காவிக்கொடி) வழங்கப்பட்டது. தினசரி ஷாகா சங்கப் பிரார்த்தனையுடன் நடந்துகொண்டிருந்தது.

மூர்த்தி சாதாரண மனிதர் என்றாலும், அவரது உள்ளத்தில் சமுதாய அக்கறையும், தேசபக்தி அக்னியும் அதிகமாக இருந்தன. தினசரி 25-க்கும் குறையாமல் சங்க்யா (ஷாகா வருவோர் எண்ணிக்கை) இருக்கும். ஊர்மக்கள் ஷாகாவை வேடிக்கை பார்ப்பார்கள். அதன் பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.

உள்ளூர் திராவிடர் கழகத்தவர்களுக்கு சங்கம் ஆரம்பித்தது எரிச்சலை ஊட்டியது. ஷாகா நடக்கும்போதே தி.க. இளைஞர்கள் ஓரமாக நின்றுகொண்டு சத்தமிடுவது, கேலி செய்வது என தொந்தரவுகள் செய்ய ஆரம்பித்தனர். த்வஜ மண்டலத்தை (காவிக்கொடி ஏற்றுமிடம்) இரவு நேரத்தில் அசிங்கப்படுத்தி வைப்பார்கள்.

மூர்த்தி அந்த வாலிபர்களிடம் சமாதானமாகப் பேசிப் பார்த்தார்; போக்கிரித்தனம் நிற்கவில்லை. மேலும் வீடுவீடாகச் சென்று ‘ஆர்.எஸ்.எஸ். காந்தியைச் சுட்ட இயக்கம். உங்கள் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்’ என்று பெற்றோர்களிடம் பொய்ப் பிரசாரமும் செய்தனர்.

அதன் காரணமாக, பெற்றோர்கள் சிலர் பிள்ளைகளைத் தடுத்தனர். ஆனாலும் மூர்த்தி மீதான அன்பு காரணமாக மாணவர்கள் ஷாகா வருவதை நிறுத்தவில்லை; சங்க்யா சிறிதும் குறையவில்லை.

இந்தப் பிரச்னை குறித்து திருவண்ணாமலை கார்யாலயத்துக்கு மூர்த்தி கடிதம் எழுதினார். ஜில்லா பைட்டக்கில் வீரபாகுஜியிடம் கடிதத்தைக் காட்டினேன். ‘‘ஜோதி! நீங்கள் உடனடியாக மாடப்பள்ளி செல்லுங்கள். மூர்த்தியுடன் சேர்ந்து ஒவ்வொரு ஸ்வயம்சேவகர் வீட்டிற்கும் சென்று பெற்றோர்களைப் பார்த்து சங்கத்தைப்பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஷாகா மெல்ல வளர்ந்து வருகிறது; நாற்றங்கால் நிலையில் உள்ளது. நேரடியாக மோத வேண்டாம். குறிப்பிட்ட தேதியில் நான் மாடப்பள்ளி வருகிறேன். பிறகு யோசிப்போம்’’ என்றார் வீரபாகுஜி.

அதன்படி குறிப்பிட்ட தேதியில் நானும் வீரபாகுஜியும் மாடப்பள்ளியில் இருந்தோம். பஸ் நிறுத்த தெருமுனையில் ‘ஆர்.எஸ்.எஸ். ஜில்லா அமைப்பாளர் ம. அவர்கள் எங்கள் ஷாகா – ஆர்.எஸ்.எஸ். கிளைக்கு வருகிறார். பார்வையிட அனைவரும் வருக’ என்று மூர்த்தி தட்டி போர்டு வைத்திருந்தார்.

அன்று ஷாகாவில் சாரீரிக் (உடற்பயிற்சி), விளையாட்டு என எல்லாவற்றையும் வீரபாகுஜியே எடுத்தார். விளையாடி முடிந்த பிறகு, மண்டலமாக அமர்ந்து, குரு கோவிந்த சிம்மனின் இரு புதல்வர்களின் வீரவரலாற்றை கதையாகச் சொன்னார்; உற்சாகம் கரைபுரண்டோடியது. திரளான மக்கள் சுற்றி நின்று ஷாகாவை வேடிக்கை பார்த்தனர்.

ஷாகா முடிந்த பிறகு பைட்டக் இருந்தது. தி.க.வினர் செய்யும் கலாட்டா குறித்து சர்ச்சை (விவாதம்) நடந்தது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட வீரபாகுஜி, “இந்த ஊர் தி.க. தலைவர் யார்?” என்று கேட்டார். ‘‘பழனி என்று பெயர். பள்ளிக்கூட ஆசிரியர்; மாடப்பள்ளி தி.க கிளையின் செயலாளராக உள்ளார்’’ என்றார் மூர்த்தி. வீரபாகுஜி “நாளை காலை அவர் வீட்டிற்கே சென்று பேசுவோம்” என்றார்.

மறுநாள் காலை – ஞாயிற்றுக்கிழமை – மூவரும் அவரது வீட்டிற்குச் சென்றோம். “அவருடைய அண்ணன் கோபால் வீட்டுக்கு, காளத்தி கிராமத்திற்குச் சென்றுள்ளார்’ என்றனர் வீட்டில் உள்ளவர்கள். நாங்கள் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காளத்தி சென்றோம்.

ஆசிரியர் பழனி எங்களைப் பார்த்ததும் ஆச்சரியம் கலந்த தொனியில் “என்ன விஷயமாக வந்தீர்கள்?” என்று கேட்டார். ‘‘எங்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வந்திருக்கிறார். உங்களோடு பேச வேண்டும்’’ என்றார் மூர்த்தி. “உட்காருங்கள்” என்றார் பழனி.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. வீரபாகுஜி பிரச்னையைப் பற்றிப் பேசாமல் சமுதாயத்தின் சீர்கேடுகள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

பழனி குறிக்கிட்டு ‘‘உங்களது பிராமணர்கள் இயக்கம்தானே?’’ என்றார். அதற்கு வீரபாகுஜி ‘‘இல்லை. ஷாகாவிற்கு வரும் அனைத்து இளைஞர்களும் பிராமணர்கள் என்று கூறுகிறீர்களா? மாடப்பள்ளியில் இரண்டே இரண்டு வீடுகள்தான் பிராமணர் வீடு. சமுதாயத்தின் அனைத்து ஜாதி இளைஞர்களும் தினசரி ஒன்றாய்க் கூடி, ஆடிப் பாடி, ஒரு குடும்பமாய்ப் பழகி வருகிறார்கள். எங்கள் ஷாகாவை வந்து பாருங்கள், பார்த்துவிட்டு இந்தக் குற்றச்சாட்டைக் கூறுங்கள்’’ என்று சொன்னார்.

உடனே பழனி ‘‘நீங்கள் காந்தியைக் கொலை செய்த இயக்கமாச்சே’’ என்றார். ‘‘அப்படிச் சொல்லி காந்தியை அவமானப்படுத்தாதீர்கள்’’ என்றார் வீரபாகுஜி. ‘‘எப்படி?’’ என்று கேட்டார் பழனி.

‘‘ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஏராளமான இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து வருகிறார்கள். அப்படியென்றால் காந்தியைச் சுட்டது நியாயம்தான் என்று மக்கள் எற்றுக்கொண்டதாகக் கருதலாமா? அப்படிக் கருதுவது அபத்தமானதல்லவா? உத்தமர் காந்தியைக் கொலை செய்திருந்தால் இந்த இயக்கம் எப்போதோ அழிந்து போயிருக்கும். இந்த நாட்டு மக்கள் அதை நம்பவில்லை. தயவு செய்து நீங்களும் நம்ப வேண்டாம்.’’ என்றார் வீரபாகுஜி.

‘‘தமிழை விடுத்து, ஏன் ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் பயன்படுத்துகிறீர்கள்?’’ என்று கேட்டார் பழனி.

‘‘தி.க. போன்றதல்ல ஆர்.எஸ்.எஸ். எங்களது அகில பாரத இயக்கம். என்.சி.சி.யியில் கட்டளைகள் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோதான் இருக்கின்றன. ராணுவத்திலும் அப்படித்தானே? ஷாகாவில் உடற்பயிற்சிக் கட்டளைகள், பிரார்த்தனைப் பாடல் மட்டுமே ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் இருக்கிறது. மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் தமிழில்தான் நடைபெறுகின்றன. ஒருநாளாவது எங்கள் ஷாகாவை வந்து பாருங்கள். யாரோ சொல்லியதை வைத்து, எழுதியதை வைத்து இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறீர்கள். ஒருநாளும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியிலோ ஷாகாவிலோ நேரில் கலந்துகொள்ளாமல் கற்பனையாக குற்றம் சாட்டுகிறீர்கள். சரி! இது ஜனநாயக நாடு. உங்கள் கருத்தைச் சொல்லவும், இயக்கம் நடத்தவும் உங்களுக்கு உள்ள உரிமை போன்று எங்களுக்கும் உள்ளது. யார் வழியிலும் யாரும் தடைபோட வேண்டிய அவசியமில்லை’’ என்று தடாலாகக் கூறிவிட்டு வீரபாகுஜி எழுந்துவிட்டார். நாங்கள் அனைவரும் பழனிக்கு வணக்கம் கூறி விடைபெற்றோம்.

‘‘ஜி! பழனி அவர்கள் வாதம் செய்வதைப் பார்த்தால், பிரச்சனை தீராது போல இருக்கிறது’’ என்றார் மூர்த்தி. ‘‘நான் அப்படி நினைக்கவில்லை. அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரும்போது அவர் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்தீர்களா? அவரது உள்மனம் சிந்தனை வயப்படுவதை முகக்குறி காட்டியது. நீங்கள் ஷாகாவை உறுதியுடன் நடத்துங்கள். பிரச்னை மாறிவிடும் என்றே நினைக்கிறேன்’’ என்றார் வீரபாகுஜி.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஷாகாவில் தி.க.வினர் செய்யும் இடையூறுகள் நின்றுபோயின. ஒரு மாதம் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அன்று நானும் ஷாகாவில் இருந்தேன். பழனி அவர்கள் மூன்று இளைஞர்களுடன் கையில் சிறிய டப்பாவுடன் சங்கஸ்தானத்திற்கு வந்தார். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று நினைத்தோம். ஒரு திட்டின் மீது அமர்ந்துகொண்டு ஷாகாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஷாகா ‘வீகிர’ ஆனது (ஷாகா நிறைவுற்றுக் கலைந்தது).

ஸ்வயம்சேவகர்களை நோக்கி விரைந்து வந்த பழனி, “தம்பிகளே! ஒரு நிமிஷம்… இன்று பெரியாரின் பிறந்த தினம். கடந்த சில தினங்களாக உங்கள் பயிற்சியை நான் எதிரில் உள்ள கடையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். பெரியார் கண்ட சமத்துவ சமுதாயத்தை நீங்கள்தான் உண்மையில் உருவாக்கி வருகிறீர்கள். இந்த ஊருக்கு பெரியாரை அழைத்து வந்து கூட்டம் நடத்தியவன் நான். எங்களால் செய்ய முடியாததை நீங்கள் தினசரி செய்து கொண்டிருக்கிறீர்கள். செட்டியார் வீட்டுப் பையன்களும், வெள்ளாளர் வீட்டுப் பையன்களும், வண்ணார் வீட்டுப் பையன்களும், வன்னியர் பிள்ளைகளும், குறும்பர் சமுதாயப் பிள்ளைகளும் ஒன்றுகூடி எந்தப் பாகுபாடும் இல்லாமல் விளையாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உங்கள் தலைவர் வீரபாகு அவர்கள் என் வீடு தேடி வந்து சொன்ன கருத்துக்கள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. இதுவே பெரியார் சொன்ன ஜாதிபேதமற்ற சமுதாய அமைப்பு. இன்றுமுதல் உங்களில் நானும் ஒருவன். என்னைச் சார்ந்த இளைஞர்களையும் இதில் சேர ஊக்கப்படுத்துவேன். இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தை பிராந்திய பைட்டக் ஒன்றில் (பைட்டக் நடந்த ஊர் ஞாபகத்தில் இல்லை) மூர்த்தி அவர்கள் ஜில்லா அறிக்கையின்போது எடுத்துச் சொன்னார். பின்னாட்களில் மானனீய ஹெச்.வி.சேஷாத்ரிஜி தாம் எழுதிய ‘RSS: A VISION IN ACTION’ என்ற புத்தகத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில், திரு.ராம.கோபாலன்ஜி ஹிந்து முன்னணி கிளைகள் அமைப்பதற்காக தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் செய்து வந்தார். அப்போது திருப்பத்தூர் வந்தார். அங்கும் ஹிந்து முன்னணி கிளை அமைக்கப்பட்டது. ஊரில் செல்வாக்குப் பெற்ற குடும்பத்தைச் சார்ந்த பெரியவர் டி.பி.ஜெகன்னாத முதலியார் (ராயல் என்ஃபீல்டு ஏஜென்ட்) திருப்பத்தூர் நகர ஹிந்து முன்னணி கிளைக்கு தலைவரானார். அப்போது, மாடப்பள்ளி ஷாகாவைப் பார்க்க வேண்டும் என்றார் கோபால்ஜி. அதற்காக ஒருநாள் தங்கினார். உடனே ஏற்பாடுகள் நடந்தன. ஹிந்து முன்னணி பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று மாலை கோபால்ஜி, ஜகன்னாத முதலியார், திருப்பத்தூர் நகர் காரியவாஹ் (நகரச் செயலாளர்) ஜெயகுமார் ஆகியோர் காரில் மாடப்பள்ளி வந்தனர். கோபால்ஜி ஷாகாவில் அனைவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஷாகாவுக்குப் பிறகு ஊரில் பொதுக்கூட்டம் நடந்தது. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் பழனி அவர்களே தலைமை தாங்கினார். ஹிந்து முன்னணி கிளையும் அங்கு அமைக்கப்பட்டது.

 

ஓரிரு வருடங்கள் கழித்து மூர்த்தி அந்த ஊரில் சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழுவிலும் பழனி அவர்கள் இடம்பெற்று சங்கப்பணியில் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொண்டார். நாத்திக வாதமும் ஹிந்து எதிர்ப்பும் சங்க கங்கையில் மூழ்கிப் போயின.

ஆசிரியர் பழனி இன்று எங்கு, எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக, திருப்பத்தூரில் உள்ள சங்க கார்யகர்த்தர் ஆதியூர் கேசவனை மாடப்பள்ளிக்குப் போகச் சொன்னேன். பழனியின் அண்ணன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தார். பழனியின் அண்ணி வேதாந்தம் அந்த வீட்டில் தனியாக வசிக்கிறார். வயது 90.

அந்த அம்மையார் ‘‘ஆசிரியர் பழனி என் கணவரின் உடன்பிறந்த தம்பிதான். அவர் காலமாகி 10 ஆண்டுகள் ஆகியிருக்கும். தி.க.வில் தீவிரமாக இருந்தார். சாமி கும்பிட மாட்டார். மாடப்பள்ளியில் ஏதோ சம்பவம் நடந்ததாம், என்ன சம்பவம் என்று இப்போது ஞாபகத்தில் இல்லை. அதன்பிறகு மனம் மாறியிருக்கிறார். எப்போதும் நெற்றியில் சந்தனப் பொட்டுடன் இருப்பார். அவருடைய மனைவியும் ஒரே மகனும் காலமான பிறகு, காளத்தியில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடனேயே தங்கிவிட்டார்’’ என்று கேசவனிடம் கூறினார்.

மாடப்பள்ளியை அடுத்து, மடவாளம், வெங்களாபுரம் கிராமங்களில் ஷாகாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மூர்த்தி அப்பகுதியில் மண்டல் கார்யவாஹ் ஆனார்.

பல வருடங்கள் கழித்து மூர்த்தி குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றினார். மகன் கோபுவுக்கும் மகள் காயத்ரிக்கும் அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்தார். தன் இளைய மகள் கோமதிக்கு திருமண வாழ்க்கையில் நாட்டமில்லை என்று அறிந்தபின், முசிறியை அடுத்துள்ள திருஈங்கோய் மலை என்னும் ஊரில் இருக்கும் பெண்கள் ஆசிரமத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தார். கோமதி சன்யாசம் ஏற்று, இன்றும் மடத்தில் சேவை செய்து வருகிறார். மூர்த்தியும் துறவறம் மேற்கொண்டார். வாணியம்பாடிக்கு அருகில் ஒரு மடத்தில் தங்கி சேவைப்பணிகள் ஆற்றிவந்தார். சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார்!

அன்பர்களே! வீரபாகுஜி கையாண்ட சமயோசித யுக்தி, மூர்த்தியின் சங்க பக்தி – இவை இரண்டும் சோதனையை சாதனையாக மாற்றின.
தமிழக சங்க வரலாற்றில் மாடப்பள்ளி ஷாகா ஒரு மைல்கல்;
வெற்றிகரமான நமது ஷாகா வேலைமுறைக்கு ஒரு சான்று.

அன்பர்களே!

வீரபாகுஜிக்கு பாலர்கள் என்றால் அலாதிப் பிரியம். அவர் வந்துவிட்டால் பாலர்கள் சூழ்ந்துகொண்டு அரட்டை அடிப்பார்கள். ஊரைவிட்டுக் கிளம்பும் வரை அவரையே சுற்றிச் சுற்றி வருவார்கள். அப்படி ஒரு நல்ல பாலர் ஷாகா இருந்தது. அந்த பாலர் சேனையைக் கொண்டு எதிரிகளின் கொட்டத்தைத் தவிடுபொடியாக்கிய வீரபாகுஜியின் வழிகாட்டுதலை அடுத்து வரும் சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் விவரங்களோடு சந்திக்கிறேன்.

– சுந்தர.ஜோதி

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here