அந்நிய பெயருக்கு கட் அவுட்..! தமிழ் பெயருக்கு கெட் அவுட்டா..!

அந்நிய பெயருக்கு கட் அவுட்..! தமிழ் பெயருக்கு கெட் அவுட்டா..!

Share it if you like it

திருநெல்வேலி அருகே உள்ள தென்காசி மாவட்டத்தில், சுரண்டை என்ற ஊரில், 1935 ஆம் ஆண்டு, ஜுலை 1 அன்று பிறந்த, துரைசாமி ஜெஃப்ரி சாம்யூல் தினகரன் – Duraisamy Geoffrey Samuel Dinakaran, DGS தினகரன், தனது வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு, 1962 ஆம் ஆண்டு “இயேசு அழைக்கிறார்” (Jesus Calls) என்ற அமைப்பைத் தொடங்கி, 24 வருடங்களில், கோயம்புத்தூரில் நிலம் வாங்கி, “காருண்யா கல்வி நிலையம்” (Karunya University) அமைத்தார்.

1972 முதல், தன்னுடைய கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை வானொலியில் தொடங்கினார். பிறகு, 1990 ஆம் ஆண்டு முதல், தொலைக்காட்சியில் தன்னுடைய கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வந்தார்.

“இயேசு அழைக்கிறார்” (Jesus Calls) அமைப்பிற்கு, வெளி நாடுகளில் 14 இடத்திலும், இந்தியாவில் 121 இடத்திலும், ஜெபக் கோபுரங்கள் (Prayer Tower) உள்ளது.  தமிழகத்தில் மட்டும் 34 இடங்களில், ஜெபக் கோபுரங்கள் உள்ளது. இவை அனைத்தும், அந்தந்த நகரின், முக்கிய நகரங்களில் உள்ளது.

கோயம்புத்தூர் என்றால் “அவிநாசி” என்ற பிரதான பகுதி, என எல்லா முக்கிய இடத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் அமைத்து உள்ளனர்.

காருண்யா பல்கலைக்கழகம் (Karunya University):

கோயம்புத்தூரில் 720 ஏக்கர் பரப்பளவில், 8000 மாணவர்கள் படிக்கும், , காருண்யா பல்கலைக்கழகம் (Karunya University) அமைத்து உள்ளனர். 13 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும், ரெயின்போ டிவி (Rainbow TV) என்ற தொலைக்காட்சி சேனலும் உள்ளது. DGS குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு  5 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது, என தகவல் வெளி வருகின்றது.

வெளிநாட்டில் இருந்து வந்த நிதியை, தவறாக பயன்படுத்தியது, வரி ஏய்ப்பு  என புகார் எழுந்ததை அடுத்து, அவருக்கு சொந்தமான 28 இடத்தில், வருமான வரித் துறையினர், ஜனவரி 20, 2021 அன்று, சோதனையில் ஈடுபட்டனர்.

வருமான வரி சோதனை:

சென்னையில் மட்டும், பாரிமுனையில் உள்ள பிரச்சார அரங்கம், அடையாறு, ஜீவ ரத்தினம் நகர் வீடு, ஆர்.ஏ.புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதே போல, கோவையில், சிறுவாணி சாலை, காருண்யா பல்கலைகழகம் மற்றும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு, அருகே உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும், சோதனை நடந்தது. மேலும், பல்கலைகழக வளாகம், மைய அலுவலகம், ஊழியர்களின் குடியிருப்புகளிலும் சோதனை நடந்தது.அங்கு கைப்பற்றப்பட்ட ரசீது, ஆவணங்கள் குறித்து, நிறுவனம் மற்றும் பல்கலைகழக அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: அறக்கட்டளைக்கு என, தனி வரி விலக்கு உண்டு. அந்த வரி விலக்கில், விதி மீறல்கள் நடந்து இருந்தால், அதுவும், வரி ஏய்ப்பாகவே கருதப் படும். “இயேசு அழைக்கிறார்” அமைப்பில், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் தான் சோதனை நடக்கிறது. வரி சலுகைகள், தவறாக பயன் படுத்தப் படுவதாக, புகார் வந்தது. மேலும், அறக்கட்டளைக்கு வந்த நிதியை விட, செலவு செய்த தொகைக்கு, அதிகம் கணக்கு காட்டப் படுவதாகவும், புகார்கள் வந்தன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும், 25 இடங்களில் சோதனை நடத்தப் படுகிறது. இதில், 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அறக்கட்டளைக்கு வந்த நிதிக்கு, முறையான கணக்குகள் காட்டப் படவில்லை. அறக் கட்டளைக்காக வழங்கப்பட்ட நிதியை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்ததும், சோதனையில் தெரிய வந்துள்ளது.அது தொடர்பான ஆவணங்களும், பரிவர்த்தனை ரசீதுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன.

இது தொடர்பாக, ‘ஹார்டு டிஸ்க், பென்டிரைவ்’ மற்றும் வங்கி தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வாயிலாக, 1,000 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்துள்ளது. அதற்கான அனைத்து ஆவணங்களும்  சிக்கி உள்ளன. உண்மையான மதிப்பு, சோதனை முடிந்த பின்னரே, தெரிய வரும். இது தொடர்பாக, பால் தினகரனிடமும், அவரது ஆடிட்டர்களிடமும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம். பால் தினகரன், வெளிநாட்டில் இருப்பதால், அவரை சென்னைக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர் சென்னை வந்ததும், அவரிடம் விசாரணை நடைபெறும்; சோதனை தொடரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பணம் பரிமாற்றம்:

கொரோனா காலகட்டத்தில், 600 கோடி ரூபாய் வரை “காருண்யா கல்வி அறக்கட்டளை” வங்கி கணக்கிற்கு பணம் பரிமாறப்பட்டு இருக்கின்றது. அந்த தொகை, ஒரு திராவிட கட்சியை சேர்ந்த முக்கியமான சில வி.வி.ஐ.பி.க்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் செலவுக்காக, வெளிநாட்டில் இருந்து, மெகா நிதியை பெற்று, ஒரு திராவிட கட்சி VVIP வங்கி கணக்கிற்கு கைமாற்றி இருக்கின்றனர்.

கோவையில் ஒரு குட்டி வாடிகன்:

அன்று – நல்லூர் வயல்…

இன்று – காருண்யா நகர்…

காருண்யா நிர்வாகத்தினர் “நல்லூர் வயல்” பகுதியை, தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பெரிய அளவில் மதமாற்றத்திற்கு திட்டமிட்டு இருந்தனர். மற்ற ஊர்களில் இருந்து வந்து, காருண்யா பல்கலைக் கழகத்தில் தங்கிப் படிக்கும் 1,000 மாணவர்களை நல்லூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளனர். “மத்துவராயபுரம்” ஊராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, காருண்யா பல்கலைக் கழகத்தினர், தங்கள் வேட்பாளரை வெற்றி பெற செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

இயேசுவின் பெயரால், “குருடர்கள் பார்க்கின்றனர்”, “செவிடர்கள் கேட்கின்றனர்”, “முடவர்கள் நடக்கின்றனர்” என பொய் பிரச்சாரம் செய்து, ஆங்காங்கே பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டி, மக்களுடைய மனதை திசை திருப்பி, மதமாற்றம் செய்தும் வருகின்றனர்.

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று:

மாணவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தினற்கும் ஏற்பட்ட மோதலால், காருண்யா பல்கலைக் கழகத்தின் வேட்பாளர் தோல்வி அடைந்தார். நீதி மன்றத்தில் வழக்கு பதியப் பட்டதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் இருந்த வெளியூர் மாணவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. மத்துவராயபுரம் ஊராட்சியும், கருண்யா பல்கலைக்கழகம் பிடியிலிருந்து தப்பியது. பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள முறைகேடுகள் கண்டு பிடிக்கப் பட்டது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருவதால், வழக்கமாக பழங்குடியினரே வார்டு உறுப்பினர்கள், பொறுப்பிற்கு வருவார்கள்.

தற்போது ஆராய்ந்த போது, 100 க்கும் குறைவாக மட்டுமே, ஆதிவாசிகள்  இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. உடனே, பழங்குடி மக்கள் இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.  பின்னர் தான் பிரச்சினை தீர்ந்து, பழங்குடியினர் ஒருவர் தலைவராக உள்ளார்.

நல்லூர் வயலில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பை அகற்ற காருண்யா நிர்வாகம் முயன்றது. “நல்லூர் வயல்” என்ற பெயரை நீக்கி, “காருண்யா நகர்” என அழைக்கப்பட பெரும் முயற்சி செய்தது.

தற்போது “காருண்யா காவல் நிலையம்”, “காருண்யா தபால் அலுவலகம்”, “காருண்யா டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்”  என அரசு நிறுவனங்களும், “காருண்யா” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் இதர அரசாங்க சான்றிதழ்கள் அனைத்திலும், “காருண்யா நகர்” என்றே இடம் பெற்று இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த, “நல்லூர் வயல் பாதுகாப்பு குழு”வினை சேர்ந்தவர்கள்,  போராட்டம் செய்தனர். வங்கி, காவல் நிலையம், தபால் நிலையம், போக்குவரத்து நிலையம் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பெயர்களை, “காருண்யா நகரில்” இருந்து, மீண்டும் “நல்லூர் வயலுக்கு” மாற்ற போராடினர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், தங்களின் வசதிக்கு ஏற்ப, தங்கள் வாயில் எந்த வார்த்தை நுழையுமோ, அதற்கு ஏற்றார் போல, பெயரை மாற்றி விட்டனர். உதாரணத்திற்கு, “திருவல்லிக்கேணி” என்ற ஊரின் பெயரை அவர்கள் வசதிக்கு ஏற்ப “டிரிப்ளிகேன்” எனவும், “தூத்துக்குடி” என்ற ஊரின் பெயரை “டுட்டுகோரின்” எனவும், “பிரம்பூர்” என்ற பெயரை “பெரம்பூர்” எனவும், “உதகமண்டலம்” என்ற பெயரை “உட்டகாமனுட்” எனவும்,  நமது மாநிலத்தில் உள்ள பல ஊரின் பெயர்களை, அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி வைத்து விட்டனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள “அலகாபாத்” என்ற பெயர் “பிரயாக்ராஜ்”  என அந்த மாநில அரசால் மாற்றப் பட்டது. “தமிழை வளர்க்கின்றோம்” எனக் கூறிக் கொள்ளும் திராவிட கட்சிகள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தற்போது தமிழ்நாடு எங்கும் பரவியிருக்கும், அந்நியர்களின் பெயரை அகற்றி, தமிழுக்காகவும், தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் போராடிய, தமிழரின் பெயர்களை, தமிழகம் எங்கும் வைப்பார்களா? என்பதே தமிழர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

இந்த கோரிக்கையை, எந்த கட்சி தங்களின் தேர்தல் வாக்குறுதியாக வைக்கும் எனவும், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள், அதை செயல் படுத்துமா? எனவும் தமிழக வாக்காளர்களின் எதிர் பார்ப்பாக இருந்து வருகின்றது.

  • அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

https://www.youtube.com/watch?v=sxu8j3yNiYc

https://www.dinamalar.com/news_detail.asp?id=2694054

https://www.dinamalar.com/news_detail.asp?id=2697442

 

 

 


Share it if you like it