கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர்.
அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர். நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சிறு உதவிகளை செய்து வந்தாலும்,
உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டாலும். அது போதுமானதாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் சென்றடையவில்லை.
ஆகவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எத்தகைய உதவிகளை தமிழக அரசு செய்ததோ, அதே போல பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நல உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த நேரத்தில் பல தொழில்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இதே நிலை நீடித்தால் பசியின் கொடுமையால் பல இழப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை தாங்கள் கருத்தில் கொண்டு நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அக்கடிதத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.