இலக்குகளே கிழக்கு!

இலக்குகளே கிழக்கு!

Share it if you like it

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை நோக்கி செல்பவர்களுக்கு தான் கிழக்கு வெளுக்கிறது. இலக்கு இல்லாதவர்களுக்கு கிழக்கு விடிவதே இல்லை. லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பவர்கள், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதனை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள் வெற்றியின் சிகரத்தில்  கொடி நாட்டுகிறார்கள்.

மற்றவர்கள் அவர்களை கீழே இருந்து வேடிக்கை பார்த்து கைதட்டுகிறார்கள்.

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி ஒரு பெரிய குழப்பத்தில் இருந்தான். ‘தான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் தன்னால் பெரிய பணக்காரன் ஆக முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. எனவே ஒரு குருவிடம் சென்று ஆலோசனையும் ஆசிர்வாதமும் பெறலாம் என்று முடிவு செய்து கொண்டு அருகில் இருந்த ஆசிரமத்திற்குச் சென்றான்.

‘குருவே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன், மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், ஆனால் என்னால் வாழ்க்கையில் பெரிய பணக்காரன் ஆக முடியவில்லை, நான் வாழ்க்கையில் வெற்றி பெற தாங்கள் தான் ஏதேனும் ஒரு ஆலோசனை சொல்ல வேண்டும்’ என்று கேட்டான்.

அதற்கு குரு அந்த விவசாயியை நோக்கி ‘உன்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கும் வைத்திருக்கிறாயா? அதைத்தொடர்ந்து கடைபிடிக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு விவசாயி ‘குருவே எனக்கு இலட்சியம் குறிக்கோள் அப்படியெல்லாம் எதுவும் தெரியாது என்றான்.

‘சரி இனிமேலாவது ஒரு குறிக்கோளை வைத்துக்கொள், அந்த குறிக்கோளை அடைய வேண்டும் என்ற  நம்பிக்கையுடன் தினசரி செயலாற்ற வேண்டும். அந்த குறிக்கோளை அடையும்வரை அதே நினைப்பில் இருக்க வேண்டும்.அந்த குறிக்கோளை நோக்கியே செயல்பட வேண்டும் என்றார். அப்படி இருந்தால் நிச்சயமாக நீ வெற்றி பெற்று விடலாம் என்றார் குரு.

குருவுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியில் வந்தான் விவசாயி.  ஆசிரமத்துக்கு வெளியே சில குயவர்கள் பானை செய்து கொண்டிருப்பதை பார்த்தான். உடனே அவனுக்கு ஒரு லட்சியம் வந்துவிட்டது. இன்று முதல் நான் காலையில் எழுந்து யாரேனும் ஒரு பானை செய்யும் குயவனைப் பார்த்துவிட்டுதான் காலை உணவு உண்பேன் என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டான்.

இந்த குறிக்கோளால் என்ன பயன்? ஆனாலும் அந்த விவசாயி தொடர்ந்து அந்த குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்தான். தினசரி காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இறைவனை வணங்குவான். பிறகு அந்த ஊரில் குயவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு  வந்துதான் சாப்பிடுவான்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவன் தன் லட்சியத்தை விடுவதாக இல்லை.

குரு சொல்லியிருக்கிறார் ‘இலட்சியத்தை அடையும்வரை உன் பாதையில் இருந்து தவறி விடக்கூடாது. ஒருநாள்கூட இடைவிடாமல் தவம் போல செய்தால்தான் உன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்  என்று சொல்லியிருந்தார் குரு.

எனவே அந்த விவசாயி ஒரு நாளும் குருவைப்  பார்க்க தவறியதே இல்லை. தினசரி சென்று ஒரு குயவனை பார்த்து வணக்கம் சொல்லி விட்டு வந்துதான் காலை உணவு சாப்பிடுவான்.

ஆனால் இகற்கும் ஒரு நாள் சோதனை வந்து விட்டது.  அன்று குயவனை பார்ப்பதற்காக காலையில் வெளியில் சென்றான். ஆனால் அந்த ஊரில் குயவர்கள் யாரையும் காணவில்லை. எல்லோரும் எங்கோ வெளியூர் சென்று விட்டார்கள். விவசாயி இங்குமங்கும் தேடி அலைந்தான். எங்குமே குயவர்களை பார்க்க முடியவில்லை. காலை பதினோரு மணி ஆகிவிட்டது. பசி மயக்கம் கண்களை சுழற்றியது. இருந்தாலும் உங்கள் லட்சியத்தை விடுவதாக இல்லை. பானை செய்பவரை பார்த்துவிட்டு வந்துதான் சாப்பிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தான்.

அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகிலிருந்த காட்டிற்குச் சென்றால், அங்கே யாரேனும் குயவர்கள் மண்வெட்டி கொண்டிருக்கலாம்.  அவர்களைப் பார்த்து  விடலாம் என்று நினைத்து அருகில் இருந்த காட்டுக்கு சென்றான். அவன் நினைத்தது போலவே தூரத்தில் யாரோ  மண் வெட்டும் சப்தம் கேட்டது. விவசாயிக்கு மகிழ்ச்சி காலை மணி 12யைக்கடந்துவிட்டது. பசி மயக்கம் வேறு. அந்த குயவன் அருகில் சென்றான் விவசாயி. அந்த குயவன் பூமியிலிருந்து மண்ணை வெட்டிக் கொண்டிருந்தான். மண்வெட்டியால் மண்ணை வெட்டிக் கொண்டிருந்த  போது திடீரென்று  அவனுக்கு பூமியிலிருந்து வைரங்கள் கிடைத்தது. வைரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட படியே வைரங்களை வெட்டி மேலே போட்டுக் கொண்டிருந்தான்.

விவசாயிக்கு குயவனை பார்த்த மகிழ்ச்சி. இவனை பார்த்துவிட்டு காலை சாப்பாடு சாப்பிட்டு விடலாம் என்ற மகிழ்ச்சி! அவனை பார்த்த சந்தோஷத்தில் “நான் பார்த்து விட்டேன், நான் பார்த்துவிட்டேன்” என்று கத்தினான். மண்பானை செய்யும் குயவனுக்கோ அதிர்ச்சி, தான் வெட்டி எடுக்கும் வைரங்களை பார்த்துவிட்டான் என்று அவன் நினைத்தான்.

உடனே அந்த விவசாயியின் வாயை பொத்தி அழைத்துவந்தான். ‘இதோ பார்! இந்த வைரக்கற்களை பார்த்தது நாம் இரண்டு பேர் மட்டும்தான், எனவே நீ வெளியில் சொல்ல வேண்டாம் .நாம் இருவரும் இந்த வைரங்களை பிரித்துக் கொள்ளலாம். என்று சொல்லி அந்த வைரக்கற்களை அந்த இருவரும் பிரித்துக் கொண்டார்கள். விவசாயி பெரிய பணக்காரன் ஆகிவிட்டான்.

இந்த கதையின் நீதி:  ஒரு உப்பு சப்பில்லாத ஒரு குறிக்கோளை தொடர்ந்து கடைப்பிடித்தால் கூட மிகப்பெரிய வெற்றி அடைய முடிகிற போது, ஒரு உயர்ந்த குறிக்கோளை வைத்துக் கொண்டு அதில் தொடர்ந்து நடை போட்டால்  நாம் எவ்வளவு பெரிய வெற்றியை அடைய முடியும்?

வைராக்கியத்தை வைத்திருப்பவர்களுக்கு பூமி வைர புதையல்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கிறது. லட்சிய நடைபோடுங்கள்!  வெற்றி விடை கிடைக்கும்!


Share it if you like it