ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் சம்பவ இடத்திலே பலியாகினர்.
விமானம் நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறால் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனால் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்ப முயற்சித்தப்போது விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால், உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், “ பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.