எனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 3

எனது ஆசான் வீரபாகுஜி தொடர் – 3

Share it if you like it

வேலூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள நகரம் போளூர். நகரை ஒட்டி செங்குத்தான மலைக்குன்று. மலையுச்சியில் நரசிம்மர் ஆலயம். பார்க்கவே கம்பீரமாக இருக்கும். உச்சியில் இருந்து பார்த்தால் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள் போளூரைச் சூழ்ந்திருக்கும். ஊரின் மையப்பகுதியில் பெருமாள் கோயில். வெளிப்பிரகாரத்தில் முழுவதும் பாலர்களால் நிறைந்த மாலை நேர ஷாகா; சங்க்யா 20 இருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் 30-ஐத் தொடும். துருதுருவென இயங்கும் பாலர்குழாம்.
பஜார் வீதியில் ‘வெல்டன் மெடிக்கல் ஸ்டோர்’ உரிமையாளரும், அரசு சித்தா மருத்துவருமான டாக்டர் கண்ணன் தன் தொடர்பில் உள்ள பள்ளி மாணவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி, ஷாகாவுக்கு அனுப்பி வைப்பார். அன்னாரது இல்லம் சங்க அன்பர்களுக்கு ஆதரவாக அந்நாளில் இருந்தது.
பெருமாள் கோயிலுக்கு எதிரில் இரண்டு கட்டடங்கள் தள்ளி, காஞ்சி சங்கர மடத்தின் வேத பாடசாலை இருந்தது. வேலூர் ஆடிட்டர் ஆத்மநாபன் அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான கட்டடம். (ஆடிட்டர் ஆத்மநாபனுடன் வீரபாகுஜிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அவருடன் நேர்ந்த ஓர் அனுபவம் பற்றி வேறொரு புஷ்பத்தில் சொல்கிறேன்). பாடசாலையில் இருந்த கனபாடிகள், ஆர்.எஸ்.எஸ். மீது மிகுந்த அபிமானமுடையவர். அந்தி சாயும் மாலைப் பொழுதில், வேத பாடசாலை வித்யார்த்திகள் அத்யயனம் செய்யும் வேத ஒலியும், பெருமாள் கோயில் ஷாகா பாலர்களின் விளையாட்டு மகிழ்வொலியும் அந்தத் தெருவையே ரம்யமாக்கும்.
நானும் வீரபாகுஜியும் போளூருக்கு வரும்போது வேத பாடசாலையில் தங்குவோம். அப்படி ஒருநாள் தங்கியிருக்கும்போது, பாடசாலையின் கனபாடிகள் “வீரபாகு சார்! சாயந்திரம் கோயிலில் ஷாகா நடத்துகிறீர்கள்; நல்லது. காலைப் பொழுதில் இந்த வித்யார்த்திகளுக்கு சூரிய நமஸ்காரம், யோகாசனம் கற்றுத் தரலாமே?’’ என்றார்.
மறுநாள் காலை, பாடசாலையின் முற்றத்தில் அனைவரும் கூடினர். வீரபாகுஜி வித்யார்த்திகளுக்கு பயிற்சிகள் அளித்தார். எப்பொழுதெல்லாம் வீரபாகுஜி போளூருக்கு வருகிறாரோ, பாடசாலையில் தங்க நேரிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் வித்யார்த்திகளுக்கு யோகாசனப் பயிற்சி எடுப்பார். குட்டிக் கதைகளும் சொல்வார். அந்தப் பாடசாலையில் கிட்டத்தட்ட 15 பால வித்யார்த்திகள் இருந்தனர்.
வேத பாடசாலையின் மாடியில் சங்கத்தின் குருபூஜா விழா (1979) நடந்தது. பிராந்த பிரசாரக் சூரிஜி பௌதிக்; விழாவில் 50 சங்க்யா இருந்தது. பெரும்பாலும் பாலர்கள் இருந்தனர். வேத பாடசாலை வித்யார்த்திகள் அனைவரையும் கனபாடிகள் விழாவில் கலந்துகொள்ளச் செய்தார். விழாவின் ஆரம்பத்தில் வித்யார்த்திகளின் வேத கோஷம் இருந்தது. அன்று அந்த வேத பாடசாலை வித்யார்த்திக் குழுவில் இருந்த சிறு வயது பாலர்தான் – இன்று காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருக்கும் பூஜனீய விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
(2018 ஜூன் மாதம் காஞ்சிபுரத்தில் பிரசாரகர்கள் பைட்டக் இருந்தது. காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகளைத் தரிசித்து அனைவரும் ஆசி பெற்றனர். வீரபாகுஜி ஆசி பெறும்போது, போளூர் ஷாகா பற்றியும் வேத பாடசாலை பற்றியும் இருவரும் நினைவுகூர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது).
1979-இல் வேலூர் ஜில்லாவில் நடைபெற்ற ஜனஜாகரண் பொதுக் கூட்டங்களில் கடைசிக் கூட்டம் போளூரில் இருந்தது. சிறப்புரை நிகழ்த்த வீரபாகுஜி தேதி கொடுத்தார். பாலர்களும் சுறுசுறுப்பாக இயங்கினர். போளூர் முக்கிய வீதிகளில் சுவரெழுத்து வாசகங்களை எழுதினர். ஆங்காங்கே அட்டை போர்டுகள் வைத்தனர். மாலை ஷாகா முடிந்ததும், கையில் நோட்டீஸ்களை எடுத்துக்கொண்டு, மூன்று குழுக்களாகப் பிரிந்து, பஜாரிலுள்ள கடைகள், வீடுகளுக்கு விநியோகம் செய்தனர். தங்களுக்குப் பரிச்சயமான கடைக்காரர்கள், பெரியோர்களிடம் நன்கொடையும் பெற்று வந்தனர். மேடை அமைப்பதற்கும், மைக் செட்டுக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. பாலர்கள் செய்த விளம்பரத்தால் ஊரில் பரபரப்பு ஏற்பட்டது.
போளூர் ஏபிடி பார்சல் சர்வீஸ் ஏஜென்ட் ரங்கராமானுஜம் – காதில் கடுக்கண் அணிந்து, நெற்றியிலும் மார்பிலும் திருமண் இட்டிருப்பார் – அவருடைய நான்கு புதல்வர்களும் ஷாகா வந்து கொண்டிருந்தனர். தலைப்பையன் அழகிய மணவாளன் (9-ஆம் வகுப்பு). ஷாகா முக்ய சிக்ஷக். நானும் ரங்கராமானுஜமும், அவருடைய நண்பர் எவரெஸ்ட் தேநீர்க் கடை துரையும் போலீஸ் நிலையம் சென்று பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி மனு கொடுத்தோம்.
ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கத்தின் மீது தவறான எண்ணம் கொண்டவராக இருந்தார். “இது காந்தியைக் கொலை செய்த வன்முறை இயக்கம்’’ என்றார். “மனுவை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்புவோம். அங்கிருந்து அனுமதி வரும்வரை நீங்கள் எதுவும் செய்யக் கூடாது’’ என்றார். நான் “பொதுக்கூட்ட ஏற்பாடுகளைத் துவக்கி விட்டோம். நிச்சயம் அனுமதி கிடைக்கும் சார்’’ என்றேன்.
இதனிடையே திராவிடர் கழகத்தினர் சங்கத்தைப் பற்றி அவதூறாக சுவர்களில் எழுதி வைத்தனர். அவர்கள் எழுதிய சுவரெழுத்து வாசகங்களின் மீது நம் பாலர்கள் இரவில் சென்று சாணியைப் பூசிவிட்டு வந்து விடுவர். தி.க.வினருக்கு கோபம். ஆனால் யாரிடம் சண்டை போடுவது? எல்லோரும் சிறு வயது பாலகர்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் கூட்டம் போடுவதாக தி.க.வினர் தட்டி போர்டு எழுதி வைத்தனர். மக்கள் மத்தியில் மேலும் பரபரப்புக் கூடியது.
பொதுக்கூட்ட நாளன்று பந்தல்காரர் மேடை அமைக்க வந்தார். சவுண்ட் சர்வீஸ்காரரும் வந்தார். “பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இங்கு எதுவும் செய்யக் கூடாது’’ என்று போலீஸ் தடுத்தது. இருவரும் கொண்டுவந்த சாமான்களை எடுத்துக்கொண்டு திரும்பிப் போய்விட்டனர்.
எனக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பொழுதெல்லாம் டிரங்க் கால் புக் செய்துதான் போன் பேச வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் சண்முக செட்டியாரின் அரிசி மண்டிக்குச் சென்று, வேலூர், தென்னமரத் தெருவிலுள்ள சங்க கார்யாலயத்திற்கு அடுத்த கட்டடமான ‘ரங்கா லாட்ஜு’க்கு போன் செய்தேன். ரங்கா லாட்ஜ் மேனேஜர் வீரபாகுஜிக்கு நன்கு அறிமுகமானவர். அவரிடம் “அவசரமாகப் பேச வேண்டும். வீரபாகுஜியை உடனே அழைத்து வாருங்கள்’’ என்றேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் டிரங்க் கால் பேசினேன். மறுமுனையில் வீரபாகுஜி, ‘நமஸ்தே’ என்றார். வீரபாகுஜியிடம் நிலவரத்தை கடகடவென முழுமையாகச் சொன்னேன்.
அதற்கு அவர், “தைரியமாக இருங்கள். நான் வேலூரில் போலீஸ் எஸ்.பி.யை (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) பார்த்து எப்படியாவது அனுமதி வாங்கி விடுகிறேன். எதற்கும் நீங்கள் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டும் உயரமான மேஜையும் தயாராக வைத்திருங்கள். அனுமதி கிடைத்தால் மைக் செட்டுடன் பொதுக்கூட்டம்; இல்லையென்றால், மேஜை மீது ஏறி நின்று தெருமுனைப் பிரசாரம் செய்வோம். ஒரு காரியம் செய்யுங்கள். பாலர்களை ஷாகா வேஷில் (ஷாகா உடை) அணிவகுத்து, ‘ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நிச்சயம் நடக்கும். அனைவரும் அவசியம் வருக’ என்று கோஷமிட்டபடி பஜார் வீதியில் அழைத்துச் செல்லுங்கள். நம்பிக்கை ஏற்படுத்துங்கள். ஊரில் ஒருவித பரபரப்பு உண்டாகட்டும்’’ என்றார்.
நான் உடனே கடைக்குச் சென்று காவிநிறத் துணி வாங்கி, நீளவாக்கில் துண்டுகளாகக் கத்தரித்து, சவுக்கு மரச்சுள்ளிகளில் கட்டினேன். சங்கஸ்தானத்தில் பாலர்கள் ஒன்று சேர்ந்தனர். காவிக்கொடிக் குச்சிகளை கையில் ஏந்திய வண்ணம் இருவரிசைகளாக அணிவகுத்துச் சென்றனர். “பாரத் மாதா கி ஜெய்! ஆர்.எஸ்.எஸ். வாழ்க! இன்று ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடந்தே தீரும்! அனைவரும் வருக!’’ என்று கோஷமிட்டபடியே அவர்கள் ஊருக்குள் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை கடைக்காரர்களும் பொதுமக்களும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். சிலர் “பலே பசங்களா!’’ என்று சொல்லி, கையசைத்து ஆமோதித்தனர்.
போளூர், பஜார் வீதியில் சாதாரணமாக இரவு 7 மணிக்கே கடைகள் அடைக்கப்பட்டுவிடும். மாலை 6.30 மணிக்கெல்லாம் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மக்கள் வரத் தொடங்கினர். பாலர்கள் வட்டமாக நின்று சங்கப்பாடல் பாடிக் கொண்டிருந்தனர். மக்கள் சூழ்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.
வீரபாகுஜி 7 மணிக்கு வந்தார். “வெற்றி! வெற்றி! எஸ்.பி. அவர்கள் அனுமதி கொடுத்துவிட்டார். அவருக்கு சங்கம் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கிறது. பொதுக்கூட்ட அனுமதிச்சீட்டை ஜோல்னா பையில் வைத்திருக்கிறேன். போளூர் காவல் நிலையத்துக்கு எஸ்.பி. ஆபீஸிலிருந்து தகவல் வந்திருக்கும். கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்றார்.
“ஜோதி! நீங்கள் போன் செய்த பிறகு, காலையிலிருந்தே எஸ்.பி.யைச் சந்திக்க முயற்சி செய்தேன். மாலை 4 மணிக்குத்தான் சந்திக்க முடிந்தது. அனுமதி கிடைத்தவுடன், கார்யாலயம் சென்று உடை மாற்றிக் கொண்டு பஸ் பிடித்து வந்துவிட்டேன்” என்றார்.
சவுண்ட் சர்வீஸ்காரருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. மேடை அமைக்கும் பந்தல்காரரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருந்த மண்ணெண்ணெய்க் கடை சத்தியநாராயண நாயுடு அவர்கள், “சார்! என் கடையில் காலி மண்ணெண்ணெய் பேரல்கள் இருக்கின்றன. அதை பயன்படுத்தி மேடை அமைக்கலாம். நான் உதவி செய்கிறேன்” என்றார்.
உடனே பாலர்கள், 4 பேரல்களை உருட்டி வந்தனர். அவற்றைக் கயிற்றால் கட்டினர். கடையில் இருந்த மரக்கதவுகளைக் கொண்டுவந்து மேலே கிடத்தி, அவற்றையும் கயிற்றால் கட்டினர். அதன் மீது போர்வை ஒன்று போர்த்தினர். இரண்டு நாற்காலிகள் கொண்டுவந்து வைத்தனர். கடையின் பின்பக்கம் புழக்கடையில் இருந்த மூங்கில் கழிகள் இரண்டைக் கொண்டு வந்து, மேடையின் இருபுறமும் நட்டனர். மேலே அவற்றின் இரு முனைகளையும் கயிற்றால் இணைத்தனர். கடையிலுள்ள இரண்டு குண்டு பல்புகளைக் கொண்டுவந்து கயிற்றில் தொங்க விட்டனர். சவுண்ட் சர்வீஸ்காரர் மைக் செட்டைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார். கடையிலிருந்து மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. மைக் ரெடி! பல்புகள் எரிந்தன. மேடை தயார்!
ஓரமாக ஒரு பழ வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைக் கொண்டு வந்து மேடைக்கு எதிரே இருந்த மரத்தின் கீழே நிறுத்தி, அதன்மீது போர்வை ஒன்றை விரித்தனர் பாலர்கள். பெட்ரோமாக்ஸ் லைட் வைக்கப்பட்டது. எப்பொழுதும் வீரபாகுஜி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, கையோடு சங்கப் பிரசுரங்கள், வெளியீடுகளைக் கொண்டு வருவார். அவர் கொண்டுவந்த சங்கப் புத்தகங்கள் வண்டியின்மீது விற்பனைக்கு வைக்கப்பட்டன. இப்போது புக் ஸ்டாலும் ரெடி!
ராமபிரானின் வானர சேனைகள்போல, பாலர்கள் இங்கும் அங்குமாக ஓடியாடி வேலை செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர் “ஆஹா! ஆஹா!” என்று பெருமிதக் குரல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். வீரபாகுஜி “கூட்டத்திற்கு தலைமை யார்?” என்று கேட்டார். நான், “ஜி! நகரில் மூன்று வக்கீல்களைச் சந்தித்து தலைமை தாங்க அழைத்தேன். தி.க. எதிர்ப்புக் காரணமாக, மூவரும் தயக்கம் காட்டினர்” என்றேன். பக்கத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஏபிடி ரங்கராமானுஜம் அவர்கள், “வீரபாகுஜி! ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் தலைமை தாங்குகிறேன்” என்றார். இருவரும் மேடையின் மீது அமர்ந்தனர். பொதுக்கூட்டத்தில் நல்ல எண்ணிக்கையில் மக்கள் கூடியிருந்தனர். ரங்கராமானுஜம் அவர்கள், தன் வீட்டுப் பிள்ளைகள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்குச் செல்வதால் அவர்களிடம் ஏற்பட்டுள்ள நல்ல பழக்கவழக்கங்களையும் முன்னேற்றங்களையும் எடுத்துக் கூறி, இளைஞர்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஆர்.எஸ்.எஸ். ஒன்றுதான் சிறந்த வழி என்று சொல்லி, பத்து நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார்.
வீரபாகுஜி பேச எழுந்தார். பாலர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்!’ என கோஷமிட, சூழ்ந்திருந்த பொதுமக்களும் சேர்ந்து கோஷமிட்டனர். அவர் பேசிய முதல் அரை மணி நேரத்தில், திராவிடர் கழகத்தைக் கிழிகிழியென்று கிழித்தார். இந்து மதத்தின் பெருமைகள், மதமாற்ற அபாயம், இளைஞர்களிடையே நல்ல பண்புகளை உருவாக்குதல் என்றெல்லாம் பேசினார். பொதுமக்களின் கரகோஷத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபாகுஜியிடம் வந்து “உங்கள் பேச்சு அருமையாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ். பற்றித் தவறாக நினைத்திருந்தேன். அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றார். நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்த வாணி பிரஸ் ராதாகிருஷ்ணன் “இதுபோன்ற நல்ல இயக்கம் நாட்டில் வளர வேண்டும்” என்று பாராட்டி, அச்சுக்கூலி பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல வருடங்கள் பாலர் ஷாகா நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது.
ரங்கராமானுஜத்தின் மூத்தமகன் (ஷாகா முக்ய சிக்ஷக்) அழகிய மணவாளன் தற்போது சென்னை- மகாலிங்கபுரத்தில் வசிக்கிறார். இந்தியப் பண்டங்களை ஏற்றுமதி செய்து வருகிறார். இன்னொரு மகன் ஹரி, லண்டனில் தொழில் செய்து வருகிறார். அடுத்த மகன் சீனு, சித்தூரில் அரிசி மண்டி வியாபாரம் செய்கிறார்.
அரசு வேளாண் துறை அதிகாரி சங்கர் அவர்களின் மூன்று பிள்ளைகளும் ஷாகா வந்து கொண்டிருந்தனர். மூத்த மகன் ராஜேஷ் (அன்று 4-ஆம் வகுப்பு மாணவர்) பின்னாட்களில் தெள்ளாறில் சங்க சிக்ஷா வர்க முடித்த பின்பு சங்க பிரசாரக்காக வந்தார்; தாராபுரம், கரூர் பகுதிகளில் பிரசாரக்காகப் பணியாற்றினார். தற்போது இந்து முன்னணியில் முழுநேர ஊழியராகவும், திருப்பூர் பாரதியார் குருகுலம் நிர்வாகியாகவும், இந்து முன்னணியின் மாநில துணை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் சுப்பிரமணி, மத்திய அரசுத் துறையில் உயரதிகாரியாக சென்னையில் வசிக்கிறார். கடைசி மகன் ஆனந்த், நெல்லையில் மதுரா கோட்ஸில் பணி புரிகிறார்.
பின்னாட்களில் கரூர் வைஸ்யா வங்கிக்கு மேனேஜராக கரூர் ராமகிருஷ்ணன் வந்தார். அவர் ஸ்வயம்சேவகர். அவரின் இரு புதல்வர்களும் ஷாகா வந்து கொண்டிருந்தனர். மூத்தவன் லட்சுமிநரசிம்மன் தற்போது அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணிபுரிகிறார். இளைய மகன் ராம்மோகன் சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரிந்துகொண்டு, மாம்பலம் பகுதி சம்பர்க பிரமுக்காக (மக்கள் தொடர்பு பொறுப்பாளர்) சங்கப்பணி ஆற்றி வருகிறார்.
அன்பர்களே!
நாக ரத்தினம் போன்று வீரபாகுஜி!
ஆனி முத்துக்கள் போன்று பாலர்குழாம்!
பெருமாள் கோயில் பாலர் ஷாகா – போளூர் வரலாற்றில் ஒரு பொன் ஏடு.
*****************************************
அன்பர்களே!
நம் அன்பிற்குரிய வீரபாகுஜி விற்பனைக்கலையில் நிபுணர் (மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட்) என்பதை நாம் அனைவரும் இன்று அறிவோம். ஆனால், அந்தக் காலத்திலேயே , 1980-களில் இந்தத் திறமை அவரிடம் தனிச் சிறப்பாக இருந்ததைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். என் நினைவில் இருக்கும் சில சம்பவங்களின் தொகுப்புடன் அடுத்த சிரத்தாஞ்சலி புஷ்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்.
வணக்கம்!
– சுந்தர.ஜோதி

Share it if you like it