ஐயப்ப பக்தர்களின் ‘ஐ அம் சாரி’ எதிர்ப் பாட்டு ஏன் பிரபலம் ஆகிறது?

ஐயப்ப பக்தர்களின் ‘ஐ அம் சாரி’ எதிர்ப் பாட்டு ஏன் பிரபலம் ஆகிறது?

Share it if you like it

ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா’ என்று தொடங்குகிறது ஒரு வம்புப் பாடல். அது சில வருடங்களுக்கு முன் கிளம்பியது.

அந்த வம்புப் பாடலுக்கும், தமிழகத்தில் ஒரு கூட்டம் வெளிப்படுத்தும் குரூரமான ஹிந்து மத துவேஷத்திற்கும் பதிலடியாக, ஒரு புதிய வீடியோ பாடல் யூ டியூப்பில் தற்போது வந்திருக்கிறது. ‘ஐ அம் சாரி’ என்ற அதே மூன்று சொற்களுடன் தொடங்கும் இந்தப் புதிய பாடல் ஆச்சரியமாகப் படு வேகமாகப் பிரபலம் ஆகிறது. என்ன காரணம்?

ஹிந்துக்களின் மத நம்பிக்கைகளை இழிப்பது, பழிப்பது, ஏளனம் செய்வது தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தினரின் விஷம வழக்கம். இதற்குப் பிதாமகராக இருந்தவர் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த ஈ. வெ. ராமசாமி. ‘பெரியார்’, ‘தந்தை பெரியார்’, ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்றும் அவரது அபிமானிகளால் அவர் போற்றப் படுகிறார்.

ஈ.வெ.ரா-வுக்கு மதம், கடவுள் என்ற நம்பிக்கைகள் கிடையாது. ஹிந்துத் தாய்-தந்தையருக்குப் பிறந்தாலும், அவர் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளம் செய்து கொண்டதில்லை. அதாவது அவர் ஒரு மதமற்ற மனிதன் என்றிருந்தார். ஆனால் அவரும் அவரது அபிமானிகளும் ஹிந்து மதத்தை, ஹிந்துக் கடவுள்களை, ஹிந்துப் பழக்க வழக்கங்களை மட்டும் இழித்தும் பழித்தும் நிராகரித்தும் இருந்தனர், இருக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கும் திமுக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. அந்தக் கூட்டத்தினரின் வெறுப்பும் சிறுமையும் அவர்களின் கொஞ்ச நஞ்சப் பகுத்தறிவையும் குப்புறத் தள்ளுகிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ஹிந்துக்கள் வெறுப்பதில்லை, அவர்களுக்குக் குறுக்கே நிற்பதுமில்லை. நம்பிக்கை இல்லாதவர்களை அவர்கள் வழியில் போகவிட்டு, ஹிந்துக்கள் தம் வழிபாட்டை, தம் மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். இது உயர்ந்த பண்பு.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடமும் இது போன்ற சிறந்த பண்பு இருக்க முடியும். அதாவது, கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஹிந்துக்களையோ மற்ற மதத்தினரையோ இழிக்காமல் பழிக்காமல் அவர்களையும் சக மனிதர்களாகப் பாவித்து, தாங்கள் பாட்டுக்கு எந்தக் கடவுளையும் வணங்காமல், வழிபாடுத் தலங்களுக்குச் செல்லாமல், அமைதியாக பண்பாக இருக்க முடியும். அப்படி மிகப் பலர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பண்பு திராவிட-பிராண்ட் பகுத்தறிவுவாதிகளிடம் இல்லை.

தமிழகத்தின் துரதிர்ஷ்டம், இந்தப் பண்பற்ற ஈ.வெ.ரா அபிமானிகளின் எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்தாலும், திராவிட அரசியல் சக்தியால் அவர்கள் குரல் பொதுவெளியில் ஓங்கி ஒலிக்கிறது. கடவுள் நம்பிக்கையுள்ள ஹிந்துக்களின் எதிர்ப்புக் குரல் மிக மெலிதாகத் தான் எழ முடிகிறது, விரைவில் அடங்கியும் விடுகிறது. ஹிந்துக்கள் தங்களின் வேதனையை ஓட்டுக்களிலும் காண்பிப்பதில்லை. அவர்களின் இயற்கையான சாந்தமே இன்றைய உலகில் அவர்களின் பலவீனமும் கூட.

தமிழகத்தில் உள்ள ஹிந்து நம்பிக்கையாளர்கள் பலருக்கு ஒரு பெரிய வருத்தமும், வெளியில் சொல்ல முடியாத மனச் சங்கடமும் உண்டு. என்னவென்றால்: ஹிந்து மத நம்பிக்கைகளை ஏளனம் செய்பவர்களுக்கு எதிராக, என்ன காரணத்தாலோ தாம் குரல் எழுப்ப முடியவில்லை. அந்த வருத்தத்தையும் மனச் சங்கடத்தையும் தடாலடியாகக் குறைக்க வந்திருக்கிறது, இந்தப் புதிய ‘ஐ அம் சாரி’ பதிலடிப் பாடல். அப்படி என்ன இருக்கிறது இந்த பதிலடிப் பாடலில்?

ஹிந்து மதத்தில், சபரிமலை ஐயப்பன் ஒரு பிரிம்மச்சாரிக் கடவுளாக இருக்கிறார். இனப் பெருக்க வயதுடைய பெண்கள் சபரி மலைக்குச் செல்வதில்லை என்ற வழக்கம் ஹிந்து மக்களிடையே இருக்கிறது. ஆண், பெண் இரு பாலருமே இந்தக் கோட்பாட்டை காலம் காலமாக மதிக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘ஐ அம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா’ என்ற பாட்டை நம்பிக்கையற்றவர்கள் எழுதி, இசையமைத்து, ஒரு இளம் பெண் மேடைகளில் பாடி அதை வீடியோவாகவும் வெளியிட்டது, அவர்களின் அடாவடித் திமிரைக் காண்பிக்கிறது.

இந்தத் திமிர்ப் பாட்டு, நம்பிக்கையுள்ள ஹிந்துக்களுக்கு, குறிப்பாக ஐயப்ப பக்தர்களுக்கு, மன வேதனை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு ஹிந்துக்களின் எதிர்ப்புக் குரலை தைரியமாக ஒருமுகப்படுத்தி அழுத்தமாக வெளிப்படுத்தும் ஒரு ஆற்றல் – அதுவும் திராவிட அரசியல் சூழ்நிலையில் அப்படியான ஆற்றல் – இதுவரை ஹிந்துக்களுக்கு வழக்கம் போல் கிடைக்காமல் இருந்தது. இப்போது ஒரு வகையில் அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது, இந்தப் புதிய பதிலடிப் பாடல் மூலமாக.

இந்தப் புதிய பாடலில் ஐயப்ப சாமியைப் போற்றி வணங்கும் வரிகள் இருக்கின்றன. அதே சமயம், இந்தப் பாடலின் சில வரிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிட மைந்தர்களின் போலிப் பகுத்தறிவுக்கு, பண்பற்ற நடத்தைக்கு, நிர்தாட்சண்யமாக சுரீரென்று சூடு கொடுக்கிறது. ஹிந்து நம்பிக்கையாளர்களுக்கு இது புளகாங்கிதம் தருகிறது. இந்த நிமிடம் வரை, நான்கே நாட்களில் யூ டியூப்பில் இந்தப் பாடல் பத்து லட்சம் பார்வைகளை நெருங்குகிறது, நாற்பத்தி இரண்டாயிரம் வரவேற்பு வாசகங்களைத் தாண்டுகிறது.

இந்த பதிலடிப் பாடல் எண்ணற்ற ஹிந்துக்களின் மன வலிக்கு ஒரு சந்தோஷ நிவாரணம் அளிக்கிறது. அதுதான் இந்தப் பாடலின் உடனடி வெற்றிக்குப் பெரும் காரணம். இதன் மெட்டும், இசையும், அற்புதக் குரலும், வீடியோ சிறப்பும் மற்ற முக்கிய காரணங்கள்.

இந்தப் பதிலடிப் பாடல், ஹிந்துக்கள் வாங்கிய அடியை விடப் பெரிய அடியாகவும் திருப்பித் தருகிறது. அவ்வாறு திருப்பித் தரும் பாடலில் சில வரிகள், சில காதுகளுக்கு அதீதமாகப் பட்டாலும், சற்று எங்கோ போவது போல் இருந்தாலும், சில பயங்கரவாதிகளைப் போடு போடென்று திருப்பி அடித்தால்தான் – ஒன்றிரண்டு குண்டுகள் விலகிப் போனாலும் – அந்த பயங்கரவாதக் கும்பல் அடங்க வழி உண்டு என்பது மாதிரியானவை.

இந்தப் பதிலடிப் பாடலுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் – இந்தப் பாடல் சட்ட மீறலாகத் தெரியவில்லை. இதுபற்றி அப்போது கோர்ட் என்ன சொல்லும் என்பது ஒருபுறம் இருக்கட்டும் – அது தமிழக ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பார்க்கப் படும். ஏனென்றால், சபரிமலை ஐயப்ப சாமி வழிபாட்டு நடைமுறையை எதிர்த்து இளக்காரம் செய்த ஒரு பாட்டுக்குப் பதிலடியாக இந்தப் புதிய பாடல் வந்திருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் ஓட்டுக்கள் முக்கியமானவை என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.

பல வருடங்கள் முன்பு காஞ்சி மகா பெரியவர் பேசியது இது: “கேரளத்தில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்நாடு, மற்ற ராஜ்யங்கள், மீதெல்லாம் கூடத் தன் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்! இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.” (பார்க்க; oruthuliaanmeegam.in)

சாமியே சரணம் ஐயப்பா! திராவிடமே போகணும் ஐயப்பா!


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *