கேரள மாநிலம் கொச்சியில் நவீன கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பல் கட்டும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது.
2021-ம் ஆண்டு இந்த போர் கப்பல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் டன் எடையுடன் நவீன போர் விமானங்கள் கப்பலில் இறங்கும் அளவுக்கு உயர் தொழில் நுட்பத்துடன் இக்கப்பல் கட்டுமான பணி நடந்து வருகிறது. உலகில் 4 நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தில் கப்பல் கட்டும் திறனை பெற்றுள்ளது. இந்தியாவில் இத்தகைய கப்பல் கட்டப்பட்டு வருவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கட்டப்படும் தளத்திற்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. ஊழியர்களும் பலத்த சோதனைக்கு பிறகே பணிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் கப்பலில் உள்ள பொருட்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் கப்பலில் இருந்த 4 கம்ப்யூட்டர்கள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மேலும் கம்ப்யூட்டர்களின் ஹார்டிஸ்க் உள்ளிட்ட சில முக்கிய டிவைஸ்களையும் காணவில்லை.
காணாமல் போன கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டிஸ்குகளில் போர் கப்பலின் வடிவமைப்பு, விமானங்கள் எந்தெந்த பகுதிகளில் இறங்க வேண்டும், எங்கு எரிபொருள் நிரப்ப வேண்டும், எந்த பகுதிகளில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற யுத்த ரகசியங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
போர் கப்பலில் கம்ப்யூட்டர் பொருட்கள் மாயமானது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டது. மேலும் மாநில போலீஸ் டி.ஜி.பி.யும் தனிப்படை அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தார்.
இது பற்றி கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறும் போது, விசாரணை தொடங்கி விட்டது, முழுமையான தகவல்கள் கிடைத்த பிறகே போர் கப்பலில் பொருட்கள் மாயமானது எப்படி? என்பது தெரிய வரும் என்றார்.
இதற்கிடையே மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கொச்சி வருகிறார். ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலுக்குச் சென்று அங்கு பொருட்கள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.
மேலும் கப்பல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலில் இப்போது நடந்து இருக்கும் திருட்டு 2-வது சம்பவமாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு நீர் மூழ்கி கப்பலில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டிஸ்குகள் திருடப்பட்டதால் ஐ.என்.எஸ்.விக்ராந்த் போர் கப்பல் குறிப்பிட்ட காலத்தில் கப்பல் படையிடம் சேர்க்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.