கூவத்தை தூய்மைபடுத்தும் மத்திய படை..!

கூவத்தை தூய்மைபடுத்தும் மத்திய படை..!

Share it if you like it

கூவத்தில், கழிவுகளை அகற்றி துாய்மைப்படுத்தும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கி உள்ளது.வெள்ள பாதிப்பிலிருந்து கரையோர மக்களை பாதுகாக்கும் வகையில், கூவம் ஆற்றின் கழிவுகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணியை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்றுதுவக்கினர்.

பணியை, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில், ராணுவம், எல்லை காவல்படை உள்ளிட்டவற்றுடன், தேசிய பேரிடர் மீட்பு படையும் ஈடுபடுகிறது.தேசிய பேரிடர் மீட்புப்படை, இதுவரை, 3,040 மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மிகவும் ஆபத்தான வகையில், உயிருக்குப் போராடிய, 6.7 லட்சம் பேரை, பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்பு பணியில் மட்டு மல்லாது, பொதுமக்களுக்கு, பேரிடர் காலங்களில், என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதையும், எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்என்றும் பயிற்சி அளிக்கின்றனர்.

இவ்வாறு, சமூக பொறுப்புடன் ஈடுபடும், தேசிய மீட்பு படையினர், கூவம் ஆற்றை துாய்மைப்படுத்தி, வெள்ளம் வரும் முன் காக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்கு உரியது.இவ்வாறு அவர்பேசினார்.நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் செயல்பாடுகளை விளக்கும் வகையில், கருவிகளின் கண்காட்சி நடைபெற்றது.அதில், பெரிய கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர், உயிருடன் இருக்கின்றனரா என கண்காணிக்கும் கருவி, சிறிய துளை வழியாக, படம் பிடிக்கும் சக்தி வாய்ந்த கேமராக்கள், கட்டுமானங்களை அறுக்கும் கருவிகள் என, பல்வேறு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து, தேசிய பேரிடர் மீட்பு படையின், அரக்கோணம் பகுதி மூத்த கமாண்டர் ரேகா நம்பியார் கூறியதாவது:கூவத்தை சுத்தப்படுத்தும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., பெருநகர சென்னை மாநகராட்சி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், என்.சி.சி., சவீதா மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட, அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்பைச் சேர்ந்த, 1,500 பேர் பங்கேற்றுள்ளனர்.ரப்பர் படகில் சென்று, வலை வீசி, குப்பையை கரையில் சேர்க்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.குப்பையை அகற்றும் பணியில், மாநகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணி, கூவம் ஆற்றின், கோயம்பேடு அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மேத்தா நகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட, 11 இடங்களில், மாதம் இருமுறை என, சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்க உள்ளது.இதன் வழியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களையும், இப்பணியில் இணைக்க உள்ளோம். ஆர்வமுள்ளோர்,எங்களை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர்கூறினார்.


Share it if you like it