கொரோனா பயமும் பாதிப்பும்!

கொரோனா பயமும் பாதிப்பும்!

Share it if you like it

கண்ணுக்கு தெரியாத மறைபொருளாக இருந்து இன்று உலகையே அச்சுறுத்தும் சின்னஞ்சிறிய  உயிரினம் கொரோனா, அது கொன்றதோ சிலரை, பயமுறுத்துவதோ பலரை. உலக பொருளாதாரத்தையே சரித்து உலக நாடுகள் அனைத்தையும் மாஸ்க் போட வைத்தது கோரோனா.  கொரோனா கண்காணிப்பை விட ஊடகங்கள் தங்கள் டி ஆர் பி’ஐ கூட்ட வெளியிடும்  அதைப் பற்றிய  செய்திகள் தான் பீதி யூட்டுகின்றன.  உண்மைகளை விட கட்டுக்கதைகள் தான்  ‘இறக்கை கட்டிப் பறக்கின்றன.

சமூகவலைத்தளங்களிலும், இதர ஊடகங்களிலும் ஏதோ கொரோனாவை பற்றி நன்கு அறிந்தவர்கள் போல செயல்படும் திடீர் டாக்டர்களும், அவர்கள் சொல்லும் லாஜிக்  இல்லா வைத்தியங்களும் தான் கோலோச்சுகின்றன!!!. இவர்கள் அறிந்தோ, அறியாமலோ ஏற்கனவே தகிக்கும் பயம் எனும் தீயில் மேற்கொண்டு எண்ணெய் வார்க்கின்றனர்.

கொரோனாவை விட மற்ற நோய்களின் தாக்கம் மற்றும் பல காரணிகளின் தாக்கத்தினால் இறப்பவர்கள் அதிகம் என்பதுதான் உண்மை .  பிப்ரவரி-10 அன்று மட்டும், கோரோனாவால் 108 பேர் சீனாவில் பலியாயினர்.  ஆனால் உலகில் அன்று மட்டும் கேன்சரால் மரணமடைந்தோர் 26283 பேர்,  இதய நோயால் இறந்தவர்கள் 24641 பேர்,  நீரிழிவினால் 4,300  பேர், தற்கொலையினால் உயிரை விட்டவர்கள் கொரோனாவைப் போல், 27.7 மடங்கு, இதை தவிர விபத்துகள், மூப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் இறந்தோர் எண்ணிக்கையை எல்லாம் மொத்தமாக கூட்டினால் நமக்கு தலை சுற்றும்.

எனவே சுத்தம், சுகாதாரம், முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு போன்றவை தேவைதான் என்றாலும் தேவையற்ற பீதி வேண்டாம்.  நோயைவிட நோய் பற்றிய பயமும், எதிர்மறை சிந்தனைகளும் மிகவும் ஆபத்தானது, அவை நம்மை சத்தமில்லாமல் கொல்லும் திறனுடையது.

கோரோனா மட்டும் அல்ல அனைத்து வகை பாக்டீரியா வைரஸ் சார்ந்த நோய்களையும் வெல்லும் ஆற்றல் இயற்கையாகவே நம் உடலுக்கு உண்டு அதற்கு தேவை எல்லாம் நமது சிறிய ஒத்துழைப்புதான். எனவே தேவையற்ற பயங்களை விடுத்து நம் உடலில் இயற்கையாக உள்ள நோயெதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்வது ஒன்றே நமக்கு நீண்டகால அளவில் பயனளிக்கும். வரலாற்றில் இதை போன்ற கொள்ளை நோய்கள் பல முறை நம்மை தாக்கியுள்ளன.

அதில் இருந்து ஒவ்வொரு முறையும் மனித இனம் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளன. சில காலம் முன்புகூட ஆந்திராகஸ், எபொலோ, போன்ற பல புதிய நோய்கள் நம்மை தாக்கின, அது பலரை பாதித்தது, சிலரை கொன்றது என்றாலும் அந்த கிருமிகள் பாதித்த பகுதிகளில் இருந்த அனைவருக்கும் இந்த நோய் வரவில்லை, நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டுமே இதில் எளிதாக பாதிக்கப்பட்டனர்.

பூகோள ரீதியாக இயற்கையாகவே பலமான நோயெதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள் நாம், அதனுடன் நம் பாரம்பரிய உணவு முறையில் சுக்கு, மிளகு, தனியா, இஞ்சி, பூண்டு, சீரகம் என பல நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் அன்றாடம் பயன்படுத்தப்படு கின்றன அதனால் தேவையற்ற பயம் வேண்டாம். தேவைபட்டால் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று  நம் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுவோம் கோரோனாவை விரட்டுவோம்.

எந்த பிரச்சனையும் நமக்கு அனுபவமே தவிர முடிவு அல்ல,  அனுபவமே சிறந்த ஆசான். புத்திசாலி எந்த ஒரு அனுபவத்தில் இருந்தும் பாடம் கற்றுகொள்வான். சுத்தம், சுகாதாரம், சரியான உணவு பழக்க, வழக்கம் மற்ற உயிரினங்களிடமும் அன்பு, ஒற்றுமை, உதவும் மனப்பான்மை, பாதுகாப்பு என கோரோனா நமக்கு கற்று தந்துள்ள பாடங்கள் ஏராளம். இதை கொண்டு இனியாவது நம் மனித இனம் சரியான பாதையில் செல்லட்டும், உலகம் வாழட்டும்.

(ஆக்கம்)
ஜே.எஸ். சரவணகுமார்  –  ஆரோக்கியபாரதி


Share it if you like it