சட் சூத்திரர் என்ற ஆங்கிலேயனின் சதியை நம்பவேண்டாம்!

சட் சூத்திரர் என்ற ஆங்கிலேயனின் சதியை நம்பவேண்டாம்!

Share it if you like it

ஆங்கிலேயர்கள் பாரதத்திற்கு வந்த பிறகு மக்களை முட்டாளாகவும் அவர்களை பிரித்தாள்வதற்கு பலவிதமான சூழ்ச்சியை மேற்கொண்டனர் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் பாரதத்தைச் சார்ந்த மக்களை இரு சார்பாக பிரித்து வைத்தார்கள். பாரதத்தில் வர்ணாசிரமம் என்கிற  முறையை காலம் காலமாக பின்பற்றி வந்துள்ளோம்.

கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியதன் படி குணத்தின் அடிப்படையில் வர்ணம் நான்கு விதமான பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. இதில் எந்த விதமான ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருந்தது. ஹிந்து மதத்தில் பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே ஒருவர் எந்த வர்ணம், போக வேண்டும் என்று அவரும் அவரின்  பெற்றோரும், குருவும், சேர்ந்து முடிவு செய்வார்கள். ஒருமுறை வர்ணத்தை  தேர்ந்தெடுத்து விட்டால், பிறகு வாழ்க்கை முழுவதும் அந்த வர்ண தர்மத்தை  காப்பாற்றி அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி தங்களது வாழ்க்கையை வாழ்ந்து முக்தி அடைவார்கள்.

ஆனால்  வெள்ளையன் பாரதத்தில் இருந்த மக்களை இரண்டு விதமாக பிரித்து வைத்தார்கள். ஒன்று பிராமணர்கள் மற்றொன்று பிராமணர் அல்லாதவர் என்று. பிராமணர் அல்லாதவர்களுக்கு சூத்திரர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். யாரெல்லாம் பிராமணர்கள் என அவனே தீர்மானம் செய்து சட்டத்தையும்  இயற்றி விட்டார்கள்.

பாரதத்தில் குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பல சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் படை வீரர்களாகவும் போர்களில் கலந்து கொண்டு எதிரிகளிடம் யுத்தம் செய்து நாட்டையும், தர்மத்தையும் காத்தவர்கள், மற்றும் மன்னர்களாக இருந்து வந்தனர். அதில் சில சமுதாயத்தினர், ஆங்கிலயர்களின்  ஆதிக்கத்தை எதிர்த்து, கொடுமைகளை எதிர்த்து, சதி திட்டங்களை எதிர்த்து, யுத்தம் மற்றும் கிளர்ச்சி  செய்தனர். ஆனால் ஆயுத பலத்தினாலும், சதிகள் நிறைந்த சூழ்ச்சிகளினாலும் நமது வீரர்களையும், மன்னர்களையும் ஆங்கிலேயர்கள் வீழ்த்தி விட்டனர். பின்னர் அந்த சமுதாயத்தை சார்ந்த எவருமே ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த காலத்திலும் கிளர்ச்சியோ, யுத்தமோ செய்ய கூடாது என்பதற்காக, அவர்களின் மனதைரியத்தையும், வீரம் நிறைந்த வரலாறுகளையும், அவர்களிடம் இருந்தே மறைப்பதற்கு அந்த அனைத்து சமுதாயத்திற்கும் சட் சூத்திரர்கள் என்கிற முத்திரையை தந்திரமாக உருவாக்கினார்கள் வெள்ளையர்கள்.

இன்றைய கம்யூனிஸ்டுகளும், திராவிட இயக்கத்தினரும், கிறிஸ்துவ மிஷனரிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் மதமாற்றத்திற்காக இந்த கட்டு கதைகளையும், புரளிகளையும் பரப்பி வருகிறார்கள்.

ஹிந்து மதத்தில் எங்கேயும் சட் சூத்திரர் என்கிற வார்த்தை இடம் பெறவில்லை என்பது வரலாற்று உண்மை. வர்ணாஸ்ரம தர்மத்தை பற்றி பேசும் மனுஸ்மிருதி, வேதம், பகவத் கீதை, எதிலும் இந்த வார்த்தை குறிப்பிடவுமில்லை, பயன்படுத்தவுமில்லை, அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்பதே உண்மை.

ஆனால் வெள்ளைக்கார்கள் தனது சூழ்ச்சியினால் இந்த வார்த்தைகளை திணித்து  இன்று பல சமுதாய மக்கள் தங்கள் முன்னோர்களின் பெருமைகள், வரலாறு  அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியாத வகையில் தனது எண்ணத்தை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றி விட்டனர். சட் சூத்திரர் என்று குறிப்பிட்ட அனைத்து சமுதாயத்தினரும், மன்னர்கள், படைவீரர்கள், போர்களில் யுத்தம் செய்தவர்களாக வரலாறு கொண்டவர்களே.

பாரதத்தில் இருக்கும் அனைத்து சாதியிலும் நான்கு வருணத்தாரும் இருந்தார்கள் என்பது வரலாறு கூறுகிறது. காலப்போக்கில் அதன் எண்ணிக்கை படிப் படியாக குறைந்து. கடந்த நூற்றாண்டில் ஒரு சில சமுதாயம், தவிர மற்ற அனைத்து சமுதாயத்தினரும் ஒரு வர்ணத்திற்குள் அடங்கி விட்டனர் என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. அனைவரும் ஒன்றாக இனணந்து ஹிந்து என்கின்ற, ஒற்றை குடையின் கீழ் நமது முன்னோர்கள் கடைபிடித்த தர்மத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

எந்த விதமான ஏற்றத்தாழ்வும் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். சூத்திரனாக இருப்பதில் எந்த விதமான தவறும், அவமானமும் இல்லை. ஆனால் வெள்ளைக்கார்கள் திணித்த சட் சூத்திரன் என்பது தேவையற்ற ஆணி. அதை நாம் நம்பவும் கூடாது அதை தூக்கி குப்பையில் எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நாம் உணர வேண்டும்.

ஆனந்த் T பிரசாத்


Share it if you like it