தனது கனவு திட்டத்தை சாதித்து விட்டு மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான்..!

தனது கனவு திட்டத்தை சாதித்து விட்டு மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான்..!

Share it if you like it

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் – One Nation One Ration Card (ONORC)

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை” எனில் ஜகத்தினை அழித்திடுவோம், என கூறினார் பாரதியார். அதற்கு ஏற்றார் போல், இன்றும் நமது நாட்டில் உணவு பஞ்சம் இருந்து வருகின்றது. குறிப்பாக, பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறி செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு, உருவாக்கப் பட்டதே, “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம்”.

சமீபத்தில் மறைந்த மத்திய அமைச்சர் திரு ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களின் கனவு திட்டமான, “ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்” புலம்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை 2019ஆம் ஆண்டு தொடங்கி வைத்த போது, அவர் பேசுகையில், தினக்கூலி ஊழியர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும் என கூறி இருந்தார்.

மேலும் ஜூலை 1,  2020 முதல் எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த அவர் விரும்பினார். அவர் நினைத்தது போலவே, பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறைக்கு வந்து உள்ளது, இந்த திட்டம்.

கொரோனாவால் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டாலும், அவர் உயிருடன் இருக்கும் வரையில், அவருடைய கனவு திட்டம், அதிக மாநிலங்களில் நிறைவேறியதை கண்கூடாகப் பார்த்தார். வடகிழக்கு மாநிலங்களில், இணைய வசதி சரியாக இல்லாத காரணத்தினால், அதற்கு உண்டான மத்திய அமைச்சரை சந்தித்து, அம்மாநிலங்களுக்கு இணைய வசதியை நன்றாக ஏற்படுத்தி,  இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய பெரும்பங்கு ஆற்றினார்.

24 மாநிலங்களில் உள்ள ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம்:

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம், எந்த மாநிலத்திலும் பயன்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் 2019 ல் 4 மாநிலங்களில் தொடங்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப் பட்டு, நாட்டின் எந்தப் பகுதிக்கும் மாற்றத்தக்க வகையில் ஒருங்கிணைக்கப் பட்டு உள்ளன.

ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன், டையூ, பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிஹார், ஜார்கண்ட், சிக்கிம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் நடை முறைக்கு வந்து உள்ளது.

தற்போது, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல் படுத்தி முடிக்கப் பட்டு, 24 மாநிலங்களில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ், நாட்டின் எந்தப் பகுதிக்கும், விரைவில் மாற்றத்தக்க விதமாக வழி வகை செய்யப் பட்டு உள்ளது.

இதுதவிர, மாநிலங்களிடையே மாற்றிக் கொள்ளத் தேவையான இணையதள சேவைகளும் உருவாக்கப்பட்டு, தேசிய அளவிலான கட்டுப்பாட்டு வசதி வாயிலாக கண்காணிப்பதற்கான வசதியும், இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டிற்கு வந்து உள்ளன.

குடும்ப அட்டையில், பெயர் இடம் பெற்று உள்ள, ஆதார் எண் வசதியுடைய, குடும்ப உறுப்பினர், யார் வேண்டுமானாலும், தமது அடையாளத்தை உறுதி செய்து, ரேசன் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம்.

தமிழகத்தில் செயல்பாடு:

ஜனவரி 1, 2020 முதல் பிப்ரவரி 29, 2020 வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதற்கட்ட சோதனை நடை பெற்றது. இந்த இரண்டு மாவட்டங்களில் மொத்தம் ஒன்பது லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருந்தனர். இதில் புலம் பெயர் தொழிலாளர்கள், 9 ஆயிரம் பேர். இந்த முயற்சியில், வெற்றியைக் கண்ட தமிழக அரசு, இந்தத் திட்டத்தை தமிழ் நாட்டில் அமல்படுத்தி இருக்கின்றது.

அக்டோபர் 1, 2020 முதல் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் “ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்” அமலுக்கு வந்து உள்ளது. முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,  தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். தமிழகத்தில், தற்போது 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில்,  35,233 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

குடும்ப அட்டையில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே, கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படும். குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், எந்த மாவட்டத்திற்கும் சென்று, ரேஷன் கடைகளில் பொருள் வாங்கலாம். அதுபோல, பிற மாநிலத்தவர்களும், தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, இந்த திட்டத்தின் மூலம் பொருள் வாங்க முடியும். எனினும் , ஒரு பயனாளி இரண்டு இடத்தில் பொருட்களை வாங்க முடியாது.

இந்த திட்டத்தை மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில் முன் வைக்கப்பட்டு, தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அமைப்பால் கண்காணிக்கப் படுகிறது.

ரேஷன் அட்டைகள், “ஸ்மார்ட் கார்டுகளாக” தமிழகத்தில் மாற்றப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த கார்டை பயன்படுத்தி, எங்கு பொருள் வாங்கினாலும், அது மையமாக இருக்கும், ஒரு பொது தளத்தில், சேர்க்கப் படும். அதன் படி ஒரு கார்டில், ஒரு மாதம், ஒரு முறை மட்டுமே, பொருள் வாங்க முடியும், அதற்காக, அனைத்து ரேஷன் கடைகளும், கணினி மயம் ஆக்கப்பட்டு, எல்லாம் இணைக்கப் பட்டு உள்ளன.

ஏன் தேவை ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்:

இந்திய அரசு வருடத்திற்கு, கோதுமை, அரிசி போன்ற தானியங்களை, அனைத்து மாநிலத்திற்கும் 2590 கோடி கிலோ ஒதுக்கீடு செய்கின்றது. இதில், 46.7 சதவீதம் கள்ள சந்தைக்கு சென்று விடும். இதற்காக மத்திய அரசு வருடத்திற்கு 1.6 லட்சம் கோடி செலவு செய்கின்றது. கள்ள சந்தையில் விற்பதன் மூலம், வருடத்திற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கோடி, அரசுக்கு இழப்பு ஏற்படுகின்றது. எனவே தான், மத்திய அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், போலி குடும்ப அட்டையை முற்றிலும் நீக்க, மக்கள் ஒத்துழைக்குமாறு, வேண்டுகோள் விடுத்தது.

2.75 கோடி போலி குடும்ப அட்டைகள், நமது நாட்டில் இருப்பதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள், கடந்த ஆண்டு தெரிவித்தார்.

போலி குடும்ப அட்டைகளை முற்றிலும் ஒழிக்க, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், கை கொடுக்கும். ஒரு ஊரில் இருந்து, இன்னொரு ஊருக்கு செல்பவர்கள், போலி குடும்ப அட்டைகளை தயாரிக்க யாரையும் அணுக வேண்டி இருக்காது. தாங்களே, நேரடியாக சென்று, குடும்ப அட்டையை வைத்து, பொருட்கள் வாங்க முடியும். இதன் மூலம், போலி குடும்ப அட்டைகள் அறவே நீக்கப் படுகின்றது.

இந்த திட்டத்தினால் கிடைக்க இருக்கும் நன்மைகள்…

 – தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு, தொழிலாளர்கள் இடம் மாறி இருப்பார்கள். அவர்கள் குடும்ப அட்டையை, மாற்றிக் கொண்டு இருக்க முடியாது. எனவே தங்களிடம் உள்ள, குடும்ப அட்டைகளை வைத்து, அவர்கள் இருக்கக் கூடிய இடத்தில், பொருட்களை வாங்கிக்  கொள்ளலாம். உணவு வழங்கும் முறையில், வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்படும்.

போலி குடும்ப அட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அறவே நீக்கப் படும். அதன் மூலம், உண்மையிலேயே கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் சென்று அடையும். பணி நிமித்தமாக, வெளியூர் செல்லும் புலம் பெயர் தமிழர்களுக்கு, உணவு பொருட்கள் உறுதியாக கிடைக்கும். அனைவரும் பசியில்லாமல் வாழ இந்த திட்டம் உதவி புரியும்.

உலக அரங்கில் நமது நாடு, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. பலரும் தங்களுடைய தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. தங்களுடைய ரேஷன் அட்டையை மாற்றுவது, நீண்ட நெடிய வேலை. இந்த திட்டத்தின் மூலம், நீண்ட நெடிய அலைக்கழிப்பு இல்லாமல், நேரக்குறைவும், மன உளைச்சலும், பண விரையமும் குறையும். இந்தத் திட்டத்தின் மூலம் 65 கோடி இந்திய மக்களுக்கு,  உணவு உறுதி செய்யப் படுகின்றது.

அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it