மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த சனிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை என 702 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை யானைக்கவுனி பகுதியில் நேற்று முன்தினம், சோதனையின்போது 1கோடி 43 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கடலூர் மாவட்டம் வேப்பூரில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், நாகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவடியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகள் சிக்கின.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று வரை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.