தாய் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கும் தேசிய கல்வி கொள்கை

தாய் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் முன்னுரிமை கொடுக்கும் தேசிய கல்வி கொள்கை

Share it if you like it

தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, மாணவர்களுக்கு வாய்ப்புகளையும், ஆசிரியர்களுக்கு சற்றே சுதந்திரமும் வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மூன்றாவது கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான குழு, இஸ்ரோ விஞ்ஞானி திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் தலைமையில், 2017 ல் அமைக்கப்பட்டது. அதன் வரைவு அறிக்கை 2019 மே 31 அன்று வெளியிடப்பட்டது. அதன் பிறகு அதன் மீதான பல ஆலோசனைகள் பெறப்பட்டு தற்போது திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவும், பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பிறகு தான் நடைமுறைக்கு வரும்.

ஆனால் அதற்குள் பல விமர்சனங்கள், வியாக்கியானங்கள் முழுமையாக புரிந்து கொள்ளாமல் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது. கல்வியில், விஞ்ஞான வளர்ச்சியில், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி ரீதியாக கிடைக்கும் வாய்ப்புகளை நமது நாட்டில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சியாக இந்த கல்வி கொள்கை அமைந்துள்ளது.

கல்வி கற்கும் காலகட்டங்களில் சில மாற்றங்களை உருவாக்கி உள்ளது. LKG, UKG + 10 + 2 என்ற முறையில் உள்ளதை 5 + 3 + 3 + 4 என்பதாக கட்டமைக்கப்படுகிறது. அங்கன்வாடிதனில் துவங்கி ஐந்தாம் வகுப்பு முடிய தாய் மொழிக்கல்வி கட்டாயமாகிறது. பயிற்று மொழி, பிராந்திய மொழி அல்லது தாய் மொழியாக இருக்கும். ஆங்கிலம் ஒரு மொழியாக கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
இதுதான் கல்வி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவர்களது பின்புலத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினை. காரணம் தமிழ்நாட்டில் மட்டுமே தாய்மொழி தமிழில் எழுத படிக்கக் கூட தெரியாமலேயே அனைத்து உயர்கல்வியும் கற்று எல்லாவிதமான உயர் பதவிகளிலும் அமரமுடியும். அப்படி அல்லாது தாய்மொழிக்கல்வி இந்த கொள்கையின் மூலம் உறுதியாகிறது.

ஆறாம் வகுப்பிற்கு பிறகு ஏதேனும் ஒரு தேசிய மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. அது ஹிந்தி தான் என்று இல்லை. எந்தவொரு தேசிய மொழியினை வேண்டுமானாலும் கற்க முடியும். அதுவும், அதற்காக முடிவெடுக்கும் வாய்ப்பு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அந்தந்த மாநில அரசிற்கும் வழங்கப்பட்டுள்ளது.


Share it if you like it