நேர்மையாக இருப்பது குற்றமா? – M.K. சூரப்பாவை தூற்றும் சில்லறை போராளிகள்..!

நேர்மையாக இருப்பது குற்றமா? – M.K. சூரப்பாவை தூற்றும் சில்லறை போராளிகள்..!

Share it if you like it

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த M.K. சூரப்பா அவர்கள் ஏப்ரல் 5, 2018 அன்று அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப் பட்டார். ஏப்ரல் 13, 2018  அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற நாளில் இருந்தே, எதிர்க் கட்சிகள் M.K.  சூரப்பா அவர்களை,  பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் நியமித்தது தவறு, என குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், இங்கு எப்படி பொறுப்பு ஏற்றுக் கொள்ளலாம், என எதிர்க் கட்சிகள் குற்றம் சொல்லியது.

M.K. சூரப்பா அவர்கள் உலோகவியல் பொறியியல் துறையில் (Metallurgical Engineering) பட்டம் பெற்றவர். 30 வருடம் பேராசிரியராக பணி புரிந்தவர். அதிலும், 24 வருடம், ஐ.ஐ.டி.யில் பணி புரிந்தார். இதுவரை 150 ஆராய்ச்சி கட்டுரைகளை, வெளியிட்டு இருக்கின்றார். நான்கு காப்புரிமைகள் (Patent) பெற்று இருக்கின்றார். அனைத்து பெருமைகளும் பெற்ற ஒருவரை, பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமித்த பெருமை மத்திய அரசையும், தமிழக ஆளுநரையுமே சாரும். அவர் மீது, இதுவரை பணியாற்றிய, எந்த வேலைகளிலும், எந்த இடத்திலும், எவ்வித குற்றச்சாட்டும் இல்லாதது, M.K. சூரப்பா அவர்களின் தனிச் சிறப்பு.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், அவர் மீது குற்றம் சுமத்துவது, அரிதும் அரிதான செயல். இதற்கு முன்னர், சிலை கடத்தல் வழக்குகளில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேல் அவர்களுக்கும், நிறைய அவமானங்கள் ஏற்பட்டது, நம் நினைவில் இருக்கும். “அலுவலகம் இன்றி, தெருவில் நிற்கிறோம்” என உயர் நீதி மன்றத்தில் பொன். மாணிக்கவேல் அவர்கள், ஜனவரி மாதம் 7ம் தேதி,  2019 அன்று கண் கலங்கினார் என்ற செய்தி, நம் அனைவரின் மனதிலும் நிச்சயம்  இருக்கும்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், “அரசுத் துறையை அரசே முடக்குவது, எந்த விதத்தில் நியாயம்” எனக் கேள்வி எழுப்பியதுடன், “நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல் பட்டால், தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும், பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு, ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய நேரிடும் எனவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

நேர்மையாய் இருக்கும் அதிகாரிகள் மீது, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவதும், அவர்களை விமர்சிப்பதும் ஏன்? என தமிழக மக்கள் தங்களின் மனதில் நினைத்துக் கொண்டு வருகின்றனர்.

கோபம் ஏன்?

தமிழக அரசு M.K. சூரப்பா மீது விசாரணை கமிஷன் அமைத்து இருக்கின்றது. தமிழக அரசுக்கு எதிராக, “அரியர்ஸ் தேர்வு” விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் M.K. சூரப்பாவின் தன்னிச்சையான செயல்பாடு தான், பிரச்சனையாக அமைந்தது. பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரம், நாடெங்கிலும் சர்ச்சையானது.

பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியை நாங்களே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றும், மாநில அரசின் தயவு தேவை இல்லை எனவும், கடிதம் எழுதி இருந்தார். மேலும், விதிப்படி தனக்கு அதிகாரம் உள்ளது எனவும், அதை செயல்படுத்த முனைகிறேன் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் தமிழக அரசு, அவர் மீது மிகுந்த ‌கோபம் கொண்டது என பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

பொறுப்பு ஏற்ற பின் செய்த சீர் திருத்தங்கள்:

  • தேவையில்லாத செலவை அறவே ஒழித்தது.
  •  பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்படும் செலவுகளை 70 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைத்தது.
  • உண்மையான தங்க மூலாம் பூசப் பட்ட தங்கப் பதக்கத்தை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கியது.
  • தவறு செய்தவர்களைக் கண்டித்தது.
  •  ஆராய்ச்சி படிப்பு நுழைவுத் தேர்விற்கு குறைந்த பட்ச மதிப் பெண் நிர்ணயம் செய்தது.
  • பதவி உயர்வுக்கு, அதற்கு உண்டான படிப்பை ஏற்படுத்தியது.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகள் 15% அதிகப் படுத்தியது.

புகாருக்கு பதில்:

M.K. சூரப்பா அவர்கள், தமிழக அரசு அமைத்து  இருக்கும், விசாரணைக் குழுவை வரவேற்று இருக்கின்றார். மேலும், இதுவரை தான் வகித்த எந்த ஒரு பதவியிலும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது என்றும், எந்த தவறும் செய்தது கிடையாது என்றும், தனக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்து உள்ளதை வரவேற்பதாகவும், விசாரணை ஆணையத்தை எதிர் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்றும், எதையும் சந்திக்க தயாராகவே இருப்பதாகவும், வங்கி விவரங்களை காட்டுவதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார். தன்னுடைய மகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பணி புரிய வில்லை என்றும், இலவசமாக சேவை செய்து வருகிறார் எனவும் கருத்து தெரிவித்து உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் குழு தலைவரான அருள் அறம் அவர்கள், M.K. சூரப்பா பதவி ஏற்ற பின், நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறார் என்றும், அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் வைப்பது தவறான செயல் எனவும் கூறி இருக்கின்றார்.  சரியான நபர்கள் மீது விசாரணைக் குழு அமைப்பதால், பல்கலைக்கழகத்திற்கு தவறான அவப்பெயர் ஏற்படும் எனவும் தனது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏன் இந்த பாகுபாடு:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து (IOE – Institute of Eminence) கோரி மத்திய அரசுக்கு கடிதம்  எழுதினார். அதற்கு தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளுமே கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  ஒரு பல்கலைக்‌ கழகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என நினைப்பது தானே, துணை வேந்தரின் பிரதான நோக்கமாக இருக்கும். இதுவரையில், யாரும் செய்யாததை, இவர் எப்படி செய்யலாம் என எதிர்க் கட்சிகள் அறிக்கை விடுவது, மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. இது வரை யாருமே செய்யாத, நல்ல செயல்களை, ஒருவர் செய்தால், அவரை பாராட்டி ஊக்குவிக்க வேண்டுமா?அல்லது எதிர்த்து அறிக்கை விட வேண்டுமா?நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

M.K. சூரப்பா மீது விசாரணை குழுவை அமைத்து இருந்தாலும், தமிழக அரசிடம் எதிர்க் கட்சிகள், அவரை  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்ட உடனேயே,  அவரை பதவி நீக்கம் செய்ய பட வேண்டும் என்றால், தமிழகத்தில் எதிர்க் கட்சி தலைவர் முதற் கொண்டு, பலரின் மீதும், ஏதேனும் ஒரு குற்றம் அல்லது நீதிமன்ற வழக்கு இருக்கத் தானே செய்கின்றது.‌ அவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப் பட்டார்களா? அல்லது அவர்களாகவே பதவி விலக தான் துணிவார்களா?

இதற்கு முன் எத்தனையோ வழக்குகளில், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டு இருந்தாலும், அதை நிரூபிக்கும் வரையில்,  பதவியில் இருக்கத் தானே செய்தார்கள்.

தமிழனின் கடமை:

வெளி மாநிலத்தில் இருந்து ஒருவர், இங்கு வந்து, சரியாக, முறையாக செயல் படக் கூடாது என்றால், மற்ற மாநிலத்தில் எத்தனையோ தமிழர்கள் பணி புரிந்து வருகிறார்களே! வெளி நாட்டிலும் நிறைய தமிழர்கள் பணி புரிந்து வருகின்றனரே! அவர்களுக்கு எதிராக, யாரேனும் இது போல், செயல்பட்டு இருக்கின்றார்களா? “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற தமிழ் சான்றோரின் வாக்கிற்கு ஏற்ப செயல் பட வேண்டியது தானே ஒவ்வொரு தமிழனின் கடமை.

“வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில்” இது போல் குற்றம் சுமத்துவது சரியான செயல் அல்ல என்பதே, பலரின் எண்ணமாக இருக்கின்றது. தவறு இருந்தால் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் பொய்யாக குற்றம் சொல்வது, எந்த வகையில் நியாயம்? ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப் பட்டு உள்ள விசாரணைக் குழுவிற்கு, “எத்தனை பேர், குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்களை தருவார்கள், என்பதை காண தமிழகமே ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றது.

தவறு செய்பவர்கள் யார்?

தவறுக்கு துணை போகிறவர்கள் யார்?

தவறை மறைக்க துணை போகிறவர்கள் யார்?

செய்யாத தவறை செய்ததாக மற்றவர்களை நம்ப வைப்பது யார்?

என்பதனை நாம் அடையாளம் கொள்ள வேண்டும்.

– அ.ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai


Share it if you like it

2 thoughts on “நேர்மையாக இருப்பது குற்றமா? – M.K. சூரப்பாவை தூற்றும் சில்லறை போராளிகள்..!

  1. MK சூரப்பா போன்ற திறம் வாய்ந்த நிர்வாகம் தேவை தமிழக மக்களுக்கு.
    வாழ்த்துக்கள்
    வணக்கம்.

Comments are closed.