இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியவை :-
- நமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பல விஷங்களை பற்றி நாம் விவாதித்துள்ளோம். இருப்பினும் இன்று நம் நாடு மற்றும் உலகின் மனதை ஆக்கிரமித்துள்ள ஒரே கவலை கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடி என்றால் அது மிகையாகாது. இந்த சூழ்நிலையில் வேறு எதை பற்றியும் பேசுவது சரியானதாக இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் என் நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நீங்கள் நிச்சயமாக மன்னிப்பீர்கள் என்று என் மனசாட்சி என்னிடம் கூறுகிறது. நாட்டு மக்களின் நலனுக்காக நான் சில திடீர் முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அந்த முடிவு உங்களை சிரமத்திற்குள்ளாகியிருக்கலாம். இதனால் நான் மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். பலர் தங்கள் வீடுகளில் அடைக்கப்படவேண்டிய சூழலை ஏற்படுத்தியதற்காக என்மீது கோபப்பட்டிருப்பார்கள். உங்கள் கஷ்டங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் கொரோனாவுக்கு எதிராக போரை நடத்த இதை தவிர வேறு வழி இல்லை.
- 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு இது வாழ்வா சாவா என்ற போர். இதில் நாம் நிச்சயமாக வெல்ல வேண்டும். எனவே இத்தகைய வலுவான நடவடிக்கைகள் நிச்சயம் அவசியமாகும். இத்தகைய வலுவான நடவடிக்கைகளை எடுக்க யாரும் விரும்புவதில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் இருக்கும் நிலைமையை பார்க்கும்போது இது ஒரு வழி மட்டுமே இருக்கிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் சந்தித்த அனைத்து இன்னல்களுக்கும் நான் மீண்டும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.நண்பர்களே ஒரு பழமொழி உண்டு, ஒரு நோயை ஆரம்பத்திலேயே கையாள வேண்டும். ஏனெனில் நமது தாமதத்தினால் அதனை குணப்படுத்த முடியாது. இன்று முழு இந்தியாவும் அவ்வாறே செய்து வருகிறது. கொரோனா வைரஸானது உலகம் முழுவதையும் ஊரடுங்கு உத்தரவில் வைத்துள்ளது.
- அறிவியல் மற்றும் அறிவு பணக்காரன் மற்றும் ஏழை பலசாலி மற்றும் பலவீனன் என அனைவருக்கும் இது ஒரு சவாலாகும். இது ஒரு நாட்டையோ அல்லது ஒரு மதத்தையோ கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வைரஸானது மனிதர்களிடம் விரைவாக பரவுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நோய் கிருமியை அழிக்க வேண்டும். ஊரடங்கிற்கு கீழ்படிவதன் மூலம் தாங்கள் மற்றவர்களுக்கு உதவுகிறோம் என்று சிலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடுங்கு உத்தரவு உங்களுக்காக உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புக்காக மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் பல நாட்களுக்கு நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நண்பர்களே யாரும் சட்டத்தை மீற மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு சிலர் மட்டும் அவ்வாறு செய்கிறார்கள். ஏனென்றால் சூழ்நிலையின் தாக்கம் பற்றி அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அத்தகையவர்களுக்கு எனது ஒரே வேண்டுகோள் ஊரடங்கை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அவர்களை காப்பாற்றுவது கடினமாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் சட்டத்தை மீறுபவர்கள் தற்போது வருத்தப்படுகிறார்கள்.
- நண்பர்களே ஒரு பழமொழி உண்டு, உலகில் உள்ள எல்லா இன்பங்களுக்கும் முக்கிய ஆதாரம் ஆரோக்கியம் மட்டுமே. சட்டத்தை மீறுபவர்கள் உண்மையில் அவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். நண்பர்களே பல போர் வீரர்கள் தங்கள் வீடுகளிலிருந்து அல்ல, வெளியில் இருந்து வைரஸை எதிர்த்து போராடி கொண்டிருக்கின்றனர். அனைத்து முன்னணி வீரர்களும் குறிப்பாக நம் செவிலிய சகோதர சகோதரிகள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள்,துப்புரவு தூய்மை ஊழியர்கள் போன்றவர்கள் எல்லாம் இரவு பகல் பாராமல் கொரோனா வைரஸை அகற்றுவதற்காக போராடி கொண்டிருக்கின்றனர். நாம் உத்வேகத்தை அவர்களிடமிருந்து எடுத்து கொள்ள வேண்டும். சமீபத்தில் நான் இதுபோன்ற சில நண்பர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களின் மன உறுதியை உயற்றினேன். ஆனால் இந்த செயல்பாட்டில் என்னுடைய மன உறுதியும் கூடவே உயர்ந்தது. நான் நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அந்த நண்பர்கள் மூலம் நான் பெற்ற அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் ராமகம்பா தேஜாவை கேட்போம். இவர் ஒரு தொழில் நிறுவனர்.
மோடி : நமஸ்தே
அவர் : நமஸ்தே ஜி
மோடி : கொரோனா வைரஸின் தீவிர தன்மையிலிருந்து தாங்கள் மீண்டு வந்ததாக கேள்விப்பட்டேன். இந்த நெருக்கடியிலிருந்து தாங்கள் எப்படி வெளியே வந்தீர்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
அவர் : நான் என் பணியின் காரணமாக துபாய் சென்றிருந்தேன். நான் திரும்பி வரும்போது எனக்கு காய்ச்சல் இருந்தது.ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பின் எனக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். நான் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 14 நாட்களுக்கு பிறகு நான் டிஸ்சார்ஜ் ஆனேன்.
மோடி : இந்த வைரஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை பற்றி உங்களுக்கு தகவல் கிடைத்ததும் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது ?
அவர் : நான் ஆரம்பத்தில் மிகவும் பயந்துவிட்டேன். வைரஸ் எனக்கிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது இந்தியாவில் 2 அல்லது 3 நபர்களுக்கு மட்டுமே நிகழ்ந்ததால் ,அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவுடன் தனிமைப்படுத்தப்பட்டேன். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள்,செவிலியர்கள் மிக நன்றாக என்னை கவனித்தனர். அதனால் சிறிது சிறிதாக அந்த நோயிலிருந்து மீண்டு வருவதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் நான் உறுதியாக மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு தோன்றியது.
மோடி : இந்த வைரஸினால் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது ?
அவர் : எல்லோரும் ஆரம்பத்தில் பெரிதும் மன உளைச்சலில் இருந்தனர். முதலில் அவர்கள் அனைவரையும் பரிசோதித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு யார்க்கும் கோவிட் -19 இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது எங்களுக்கும் எங்கள் குடும்பத்திருக்கும் கடவுளின் ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் எனது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவர்கள் என்னுடனும் என் குடும்பத்தினரிடமும் எப்பொழுதும் தொடர்பில் இருந்தனர்.
மோடி : நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் ?
அவர் : ஆரம்பத்தில் இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் நான் தனிமைபடுத்தபட்டேன். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஒரு அறையில் 14 நாட்கள் இருந்தேன். பிறகு நான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் எனது வீட்டில் நான் சுய தனிமைபடுத்திக்கொண்டேன். நான் எப்போதும் எனது முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்வேன். சாப்பிடுவதற்கு முன்னாள் கைகளை அடிக்கடி கழுவி கொள்வேன்.
மோடி : நோயிலிருந்து மீண்டு வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் அனுபவங்களின் ஆடியோவை நீங்கள் பதிவு செய்து அதை ஊடகங்ககளில் பகிர வேண்டும். இது மக்கள் மனதில் உள்ள அச்சத்தை நீக்கும். அதுபோல் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி உங்களை சுற்றியுள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
அவர் : நிச்சயமாக நீங்கள் சொல்வதை செய்கிறேன். நன்றி ஐயா.