பா.ஜ.க வுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்- ராம்மாதவ் பளீர்

பா.ஜ.க வுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்- ராம்மாதவ் பளீர்

Share it if you like it

காஷ்மீர் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டது குறித்து நாடு முழுவதும் தேச ஒற்றுமை பிரசாரம் மேற்கொள்ளவும், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தவும் பா.ஜ.க. தலைமை திட்டமிட்டது. அதன்படி தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ், தெலுங்கு போன்று இந்தியும் நமது தேசிய மொழி. அனைத்து தேசிய மொழிகளுக்கும் மரியாதை கொடுத்து கவுரப்படுத்தவேண்டியது நம்முடைய கடமை. நமது நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளும் தேசிய அந்தஸ்தை பெற்றுள்ளன. செய்தித்தாள்களில் தலைப்பு செய்திகளாக வரவேண்டும் என்பதற்காகவும், மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் சில அரசியல்வாதிகள் உண்மைகளை புரிந்துகொள்ள முடியாமல் செயல்படுகிறார்கள்.

காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை மேலும் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா அரசின் முடிவு சரியானது. சாதி, மொழி, மதம், மாநிலங்களை கடந்து அனைவரும் இதனை வரவேற்கிறார்கள். ஆனால் சிலர் இதனை வரவேற்காமல், புகார் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளார். இதேபோல காங்கிரஸ் கட்சியினரும், பிற கட்சிகளை சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு பேசுவதில்லை. மு.க.ஸ்டாலின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஜனநாயக விரோதமானது என கூறியிருக்கிறார். ஜனநாயகம் குறித்து நீங்கள் பா.ஜனதாவுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

சட்டமன்றத்தில் உள்ள 100 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மக்களிடம் எதையும் கேட்டு செய்தது உண்டா? பொதுமக்களிடம் விவாதிக்கிறார்களா? யாருடன் ஆலோசித்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என்று கேள்வி எழுப்புகிறாரே, தி.மு.க.வோடு ஆலோசித்து தான் 370 சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டதா? காஷ்மீர் பற்றி மிகவும் அக்கறைகொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மகாராஜவுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கேட்காதது ஏன்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது நம்முடைய காஷ்மீர் தான். ஒட்டுமொத்த தேசமே ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களோடு ஒரு குடும்பமாக நிற்பார்கள். அடுத்த பயணத்தை ஜம்மு-காஷ்மீருக்கு திட்டமிடுங்கள்.

ஆன்மிக பயணம் செல்ல அமர்நாத் யாத்திரைக்கு செல்ல திட்டமிடுங்கள். விடுமுறையை கழிப்பதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு செல்லுங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் மீட்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுக பொறுப்பு கழக முன்னாள் தலைவர் வி.செல்வராஜ், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தமிழ் மாநில கட்சி தலைவர் பால் கனகராஜ், நடிகை குட்டி பத்மினி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்


Share it if you like it