தொன்மையும், மேன்மையும் பொருந்திய ஆன்மீக பூமியாகிய தமிழகத்தில் புண்ணிய ஆலயங்களும், பல மகான்களும், வாழ்ந்து மக்களிடம் நற்கருத்துக்களை பரப்பி சமூக ஒற்றுமைக்கும், அதன் வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து விட்டு இன்றும் நம்மிடையே அவர்களின் கருத்துக்கள் மூலமாக வாழ்ந்து வருகின்றனர்.
என்பது அனைவரும் அறிந்ததே அப்படிபட்ட தமிழகத்தில் மெல்ல மெல்ல நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷங்களான விக்கிரகங்கள் நம் ஆலயத்தில் இருந்து பேராசை எண்ணம் கொண்ட நபர்கள் களவாடி அந்நிய நாடுகளுக்கு விற்றுவிடுகின்றனர் என்பது வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை ஆகும் .
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் சவுந்தர ராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோக சிலை காணமல் போனதாக அக்கோவிலின் செயல் அலுவலர் ராஜா, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ஆலயத்தில் காணாமல் போன சிலையின் புகைப்படத்தை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது இறுதியில் அச்சிலை லண்டனில் உள்ள ‘அஸ்மோலியன் மியூசியத்தில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலையை மீட்கவும் குற்றச்செயலில் ஈடுப்பட்ட நபரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.