நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கிருஷ்ணகிரி நகரில் மூன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டது. இதற்காக அதிகாலை 12 மணியளவில் பல்வேறு பகுதிகளில் இருந்த விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா அருகே குவிய தொடங்கினர். ரவுண்டானா பகுதியை சுற்றியே மூன்று திரையரங்குகளும் இருப்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடினர்.
திரைப்படம் 1 மணிக்கு வெளியாவதாக தகவல் வந்ததையெடுத்து ரசிகர்கள் முண்டியடித்தப்படி, திரையரங்குகளுக்குள் புகுந்து காத்திருந்தனர். ஆனால் அதிகாலை 3 மணி ஆகியும் திரைப்படம் வெளியாகாததால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள தடுப்பு கம்பிகள், போர்டுகள், கடை விளம்பர பேனர்கள் என அனைத்தையும் சாலையில் போட்டு உடைத்தனர்.
மேலும், சாலையில் கற்களையும் வீசி எறிந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு அட்டகாசம் செய்து கொண்டிருந்த ரசிகர்களை விரட்டி அடித்தனர். அப்போது போலீஸார் வாகனம் அருகிலேயே பட்டாசு வைத்து விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா போர்க்களம் போல் காட்சியளித்தது