ஹவுடி மோடி – பாகிஸ்தான் வயிற்றெரிச்சல்

ஹவுடி மோடி – பாகிஸ்தான் வயிற்றெரிச்சல்

Share it if you like it

7 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக, டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து பங்கேற்றார்.

சுமார் 50,000-க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடி – ட்ரம்ப் இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில், காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மோடி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாகிஸ்தான் அறிவியல் துறை மந்திரி ஃபவாத் ஹுசைன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல் துறை மந்திரி ஃபவாத் ஹுசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கையில்லாத நிகழ்ச்சி… கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தை மட்டுமே திரட்ட முடிந்திருக்கிறது. பணத்தின் மூலம் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதை இது காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஃபவாத்தின் இந்த விமர்சனத்திற்கு இந்தியர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். சந்திரயான் 2 தோல்வியின்போது ஃபவாத் இந்தியப் பிரதமர் மோடியையும், இஸ்ரோவையும் விமர்சித்து வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it