ஹிந்து பண்டிகையான தீபாவளியை முடக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்..!

ஹிந்து பண்டிகையான தீபாவளியை முடக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்..!

Share it if you like it

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, பட்டாசு, இனிப்பு போன்றவை தான் நமது நினைவிற்கு வரும். தீபாவளி அன்று நம் உற்றார், உறவினர்களுடன் ஒன்று கூடி சந்தோஷமாக கொண்டாடுவது நமது இயல்பு. பட்டாசு வெடிக்கும் நேரத்தை, காலை 6 மணி முதல் 7 மணி வரை எனவும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை எனவும், தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அதனை குழந்தைகளிடம் எப்படி புரிய வைப்பது என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.

காலங்காலமாக கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகை:

பட்டாசு வெடிக்கும் பழக்கம், இன்று, நேற்று தோன்றியது அல்ல. காலங் காலமாகவே, நமது நாட்டில், கிபி 1400 ஆம் ஆண்டு முதல், பட்டாசு வெடிக்கும் நடைமுறை, தொன்று தொட்டு இருந்து வருகின்றது என வரலாற்று ஆய்வாளர் PK கோடே (Gode) எழுதி 1950 ஆம் ஆண்டு வெளி வந்த, “History of Fireworks in India between 1400 and 1900” என்ற புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றது.

கிபி 16 ஆம் நூற்றாண்டு முதலே, தமிழ் நாட்டில் தீபாவளி கொண்டாடப் பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள், கோயில் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படுகின்றது.

கிபி 1542 ஆம் ஆண்டு பொறிக்கப் பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில் “திருப்பதி பெருமாளுக்கு தீபாவளி அன்று அதிரசப் படி இரண்டு” என உள்ளது. இதன் மூலம், தீபாவளி பண்டிகை அன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப் பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

திருவாரூர் அருகே உள்ள சித்தாய்மூர் கோவிலில் உள்ள செப்பேட்டில், தமிழர்கள் தீபாவளி கொண்டாடியதற்கான சான்றுகள், கிபி 1753, டிசம்பர் 7 ஆம் தேதி பொறிக்கப் பட்ட கல்வெட்டில்  உள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

16 ஆம் நூற்றாண்டில், பிரபல மராத்தி எழுத்தாளர் ஏக்நாத் எழுதிய “ருக்மணி சுயம்வரம்” என்ற நூலில், பட்டாசு உபயோகம் பற்றியும், ராக்கெட் வெடி மற்றும் புஸ்வானம் வெடியை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பட்டாசு தொழிற்சாலை சிவகாசியில் இருபதாம் நூற்றாண்டு முதலே இருந்து வருகின்றது.  ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் (Standard Fire Works), காளீஸ்வரி  ஃபயர் ஒர்க்ஸ் (Kaliswari Fire Works),  நேஷனல் பயர்‌ ஒர்க்ஸ் (National Fire Works) என்ற மூன்று நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பாரத நாடெங்கிலும் விற்பனை செய்தது.

சிவகாசியில் மட்டும் 1070 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. பாரத நாட்டில் தயாரிக்கப் படும் பட்டாசுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவைகள், சிவகாசியில் மட்டுமே தயாரிக்கப் படுகின்றது. வருடத்திற்கு 6000 கோடி அளவில், சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. நேரடியாக 3 லட்சம் பேர், பட்டாசு தொழிற் சாலைகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெறுகின்றனர். மறை முகமாக 5 லட்சம் பேர், வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மொத்தத்தில் பட்டாசு தொழிற்சாலை மூலமாக, எட்டு லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புகள் கிடைக்கப் படுகின்றது.

 பசியாறும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கலாமா?:

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாள் தோறும் வேலை செய்து, அந்த பணத்தை பெற்று, பசியாறும் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது போல, பட்டாசு வெடிப்பதற்கு தடை கேட்டு, நீதிமன்றம் செல்வது, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உலா வரும்  சி(ப)லரின் வேலையாக, சமீப காலத்தில் இருந்து வருகின்றது.

சமீபத்தில் கூட, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும், ஆம் ஆத்மி ஆளும் தில்லியிலும், பட்டாசு வெடிப்பதற்கு, அந்த மாநில அரசாங்கம், தடை விதித்து இருப்பது, மிகவும் வருத்தமான செயல் ஆகும்.

கர்நாடகாவில் பட்டாசு வெடிப்பதற்கு தடை என, அந்த மாநில அரசு கூறிய உடனே, சிவகாசி மக்களின் துயரை, முதல்வருக்கு சிலர் எடுத்து உரைத்தனர். உடனே, பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ஆணை பிறப்பித்து உள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று, உலகில் உள்ள பல மரங்கள்  வெட்டப் படும். அப்போது, எந்த சமூக ஆர்வலர்களும், குரல் கொடுக்க மாட்டார்கள். தீபாவளி அன்று மட்டும், மாசு கட்டுப்பாடு என ஒரு புது விளக்கத்தை அறிவிப்பார்கள். ஆங்கில புத்தாண்டு அன்று, பட்டாசு வெடிப்பதற்கு, எந்த தடையையும், எந்த சமூக ஆர்வலரும், கோர மாட்டார்கள். ஆனால், தீபாவளி வந்து விட்டாலே, பட்டாசு வெடிக்க தடை கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார்கள்.

தமிழர்களுக்கு புத்தாண்டு என்றாலே, அது சித்திரை – 1 தான்.  திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ் புத்தாண்டை மாற்றி, திருவள்ளுவர் தினம் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று, சட்டம் இயற்றினார்கள். எனினும், தமிழக மக்கள் அதை முற்றிலும் புறக்கணித்து விட்டு, சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பதை மனதில் வைத்து, அந்த நாளையே தமிழ்ப் புத்தாண்டாக, கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தமிழர்களுக்கு, எந்தவித சம்பந்தமும் இல்லாத, ஆங்கிலப் புத்தாண்டு அன்று வெடிக்கப் படும் பட்டாசுகளுக்கு ஏனோ, எந்த சமூக ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அதற்கு தடை கோரி ஏன் நீதிமன்ற செல்ல வில்லை என்பது, பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கின்றது.

மார்ச் 13, 2019 அன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான S.A. பாப்டே அவர்களும்,  S.A. நாசிர் அவர்களும் கூறிய தீர்ப்பில்,  “சாலைகளில் செல்லும் வாகனங்களை விட, பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் ஏற்படும் காற்று மாசின் அளவு மிகவும் குறைவு எனவும், பட்டாசு வெடிப்பதற்கு தடைப் போடுவதன் மூலமாக, ஏழைகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் எனவும், வேலை வாய்ப்புகள் நசுக்கப் படும் எனவும்  கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

சுதேசி:

நமது மக்களுக்கு ஆதரவு தர வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கின்றது. நம் நாட்டில் தயாரிக்கப் படும் பட்டாசுகளை, நாம் வாங்கி வெடிப்பதன் மூலமாக, நமது உறவினர்களோ, நண்பர்களோ, தெரிந்தவர்களோ அல்லது இந்த மண்ணின் மைந்தர்களோ தான் லாபம் அடைவார்கள். பட்டாசு வெடிக்க தடை கேட்பதன் மூலம், அவர்களுடைய வேலை வாய்ப்புகள் பறிக்கப் படுவதுடன், நமது நாட்டின் மண்ணின் மைந்தர்கள், பெரிதும் பாதிக்கப் படுவார்கள் என்பதே நிதர்சனம்.

நமது நாட்டில் தயாரிக்கப் பட்ட பட்டாசுகளை வாங்கி வெடிப்போம்…

நமது மக்களின் வீட்டில் விளக்கேற்றி வைப்போம்…

உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடுவோம்…

மகிழ்ச்சியுடன் வாழ்வோம்…

   – அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

 

 


Share it if you like it