கொடைக்கானலில் 107 வயதிலும் உற்சாகமுடன் உழைத்து வாழும் தேவராஜன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் தேவராஜன் 107. கேரள மாநிலம் பாலக்காட்டில் 1912ம் ஆண்டு ஆக.,22ல் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 9 பேர். பெற்றோருக்கு மூன்றாவது மகன். இவருக்கு தற்போது 7 ஆண், 7 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூலம் 38 பேரப்பிள்ளைகள், 18 கொள்ளுப் பேரன், பேத்திகள் என 70 வாரிசுகள் உள்ளனர். 12 வயதில் கொடைக்கானல் வந்தவர், தற்போது தனியார் பள்ளி விடுதியில் சமையல் மேற்பார்வையாளராக உள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 92 வயதான மனைவி அந்தோணியம்மாள் இறந்து விட்டார். அதன் பின் தனக்கான பணிகளை தானே மேற்கொள்கிறார். தினமும் அதிகாலை 4:00 மணிக்கே எழுந்து 2 கி.மீ., துாரம் நடந்து பள்ளியை அடைகிறார்.அங்கு விடுதி மாணவர்களுக்கான உணவின் தரம், சுவையை சோதனை செய்கிறார். கடந்தாண்டு பள்ளியில் 106வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.சுறுசுறுப்புக்கு காரணம்இவரது வாரிசுகள் பொருளாதார உதவிகள் செய்ய முன்வந்த போதும் அதனை மறுத்துவிடும் தேவராஜன், சொந்தமாக உழைத்து வாழவேண்டும் எனவும், அதன்மூலம் தான் உற்சாகம் பெறுவதாகவும் கூறுகிறார். தனது வாழ்வியல் ரகசியமாக அவர் கூறியதாவது: 107 ஆண்டு காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரேஒரு முறைதான் உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெற்றேன். அசைவ உணவை உண்டதில்லை. சிறுவயது முதலே அதிகாலை 4:00 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது. அதுவே தனது சுறுசுறுப்பின் ரகசியம். அத்துடன் இறைவனின் அருள், நல்ல சிந்தனைகள், உற்சாகமுடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வதும் முக்கியம்.இன்றைய தலைமுறையினர் மரபு சார்ந்த உணவு பழக்கங்களை கையாண்டு, தீய பழக்கங்களை புறம் தள்ளி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.’பிட் இந்தியா திட்டத்தில் ஆர்வம் காட்டும் இவர், அதற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறாராம்.
பள்ளித் தாளாளர் குரியன் ஆபிரகாம் கூறுகையில், ”25 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் பணியாற்றுகிறார். கடந்த மூன்றாண்டுக்கு முன் ஓய்வு எடுக்க பழநி காப்பகத்தில் தங்கியிருந்தார். பின் மீண்டும் பள்ளியிலேயே வேலை பார்க்க விருப்பம் தெரிவித்தார். இருந்தாலும் அதீத நினைவாற்றலுடன் ஓய்வில்லாமல் பணியில் ஈடுபாடு காட்டுகிறார். இங்கு பயிலும் மாணவர்களுக்கு அவர் வாழ்வியல் அறிவுப் பெட்டகமாக உள்ளார், என்றார்.