கடந்த 203 நாட்களாக சிறையில்உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 180 நாட்களுக்கும் மேலாக சிறைக்குள் உள்ளேன். இருதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறேன்.
நீண்ட நேரம் நிற்கவோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவோ கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையும் வழக்கில் கைப்பற்றியுள்ள ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த சூழலில் சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலைக்க எந்த வாய்ப்பும் கிடையாது. நானோ அல்லது எனது குடும்பத்தினரோ சாட்சிகளை மிரட்டியதாகவோ அல்லது அவர்களுக்கு நிர்பந்தம் கொடுத்ததாகவோ இதுவரையிலும் எந்த புகாரும் இல்லை. கூடுதல் விசாரணை தேவை என அமலாக்கத்துறையும் கோரவில்லை. நான் ஒரு அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டுமென உருக்கமாக கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த கோரிக்கை எதுவும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 22 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்கில் 15 வது முறையாக முதன்மை நீதிமன்றம் காவலை நீட்டிப்பு செய்துள்ளது.