ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு 397 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 26 பேர் சரணடைந்திருப்பதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசின் 4ம் ஆண்டு நிறைவை ஒட்டி அம்மாநில காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு 397 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 26 பேர் சரணடைந்துள்ளனர். தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) அமைப்பின் பகுதி குழு உறுப்பினர், பிராந்திய குழு உறுப்பினர், 5 ஜோனல் கமாண்டர்ஸ், 11 துணை ஜோனல் கமாண்டர்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவர்களின் தலைக்கு மொத்தமாக ரூ. 1.01 கோடி வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களிடம் இருந்து 27 காவல்துறை ஆயுதங்கள் உள்பட 152 ஆயுதங்கள், 10,350 வெடிமருந்துகள், 244 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
2020ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் 1,617 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். 158 காவல்துறை ஆயுதங்கள் உள்பட 792 ஆயுதங்கள், 1,882 மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 40 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரூ. 160.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.