ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், ரயில்வே காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு ரயில் விஜயநகரத்திலிருந்து ஒடிசா மாநிலம், ராய்கடாவுக்கு இயக்கப்பட்டதாகவும், அதேசமயம் விசாகப்பட்டினத்திலிருந்து ஆந்திர மாநிலம், பலாசாவுக்கு மற்றொரு ரயில் சென்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இரண்டு ரயில்களும் மோதிக்கொண்டிருக்கின்றன. சம்பவ இடத்திற்கு நிவாரண ரயிலும் விரைந்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், மருத்துவ சிகிச்சைக்கு தேவையானவற்றை உடனடியாக ஏற்பாடு செய்திடவும், மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ₹2.5 லட்சமும், சிறிய காயம் அடைந்த பயணிகளுக்கு ₹50,000ம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை மதிப்பாய்வு செய்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.