அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தற்காப்பு கலை குறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் 6 ஆயிரத்து 941 அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கும், 6 ஆயிரத்து 267 உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் 2023-24-ம் கல்வியாண்டில் 3 மாதங்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்க ரூ.19 கோடியே 81 லட்ச ரூபாய் தமிழக அரசு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு கலை பயிற்சியாளர்களை பள்ளி மேலாண்மை குழுக்களே தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட அளவிலோ பயிற்சிக்கு பெண் பயிற்றுனர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். பெண் பயிற்றுனர்கள் இல்லாத நிலையில் ஆண் பயிற்றுனரை தேர்ந்தெடுக்கலாம். பெண் ஆசிரியைகள் மேற்பார்வையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கராத்தே,ஜூடோ,சிலம்பம் இவற்றில் ஏதேனும் ஒன்றை முடிவு செய்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் அதிகபட்சம் 200 மாணவிகள் மிகாமலும், குறைந்தபட்சம் 10 மாணவிகள் குறையாமலும்
தற்காப்பு கலைப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை
பயிற்சி அளிப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும். துப்பட்டா, பென்சில், பென், நோட்புக், புத்தகப்பை, கீ செயின் ஆகிய கருவிகளை கொண்டு ஆபத்து காலங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.