தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக பெண்கள் மதுக்கடை வேண்டாம் என்று தான் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீரென 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரண்டு தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்த போது ’நாங்கள் எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என்று எங்களுக்கு தெரியாது, தலைக்கு 300 ரூபாய் கொடுத்து போராட்டத்துக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகம் சென்ற பின்னர் தான் மதுக்கடை வேண்டும் என்ற போராட்டம் என்பது தெரிய வந்ததாகவும், இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் எங்களுக்கு மதுக்கடை வேண்டாம் என்றும் அவர்கள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே திட்டமிட்டு பணம் கொடுத்து பெண்களை மது கடை வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட வைத்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பாமக நிர்வாகியும், நடிகருமான தங்கர் பச்சான் அவருடைய எக்ஸ் பதிவில், போராட்டங்களுக்கு கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து அரசியல் பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட கேவலமான வேலையைச் செய்பவர்கள் குறித்து என்ன சொல்ல? அரசியல் என்பதை ஒரு வருமானம் தரும் தொழிலாக மாற்றி மக்களிடம் மதுவைத் திணிப்பதையே முதல் பணியாக செய்பவர்கள் பெரியார் அண்ணா குறித்துப் பேசலாமா? இவ்வாறு திமுக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.