நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவு : காவல்துறை , ராணுவம் , கடற்படையை சேர்ந்த 3400 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு 49 ,707 நபர்கள் மீட்கப்பட்டனர்”
35 மனித உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ளன : பசு , எருமை உள்ளிட்ட 318 கால்நடைகள் , 2587 ஆடுகள் , 41, 500 கோழிகள் உயிரிழப்பு . 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் , சேதங்களை கணக்கெடுக்கும் பணி இன்று காலை தொடங்கியது : சென்னையைப் போல் 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரணத் தொகை விரைந்து வழங்கப்படும். தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்படும் 120 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களில் புயலால் பாதிப்படைந்த 45 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. லாரிகள் மூலம் 1200 டன் உணவுப் பொருள்களும் , ஹெலிகாப்டர் மூலமாக 81 டன் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன : பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அளித்த பேட்டி :
அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நிறைவு பெற்றுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 49707 பேர் மீட்கப்பட்டனர். மாநில அரசின் அனைத்து நிறுவனங்கள் , தேசிய , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் , தீயணைப்பு , காவல்துறை , ராணுவம் , கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையில் 1, 500 பேர் , ராணுவம் , கடற்படை 167 பேர் என 3400 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 323 படகுகள் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
நேற்று 43 பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது , நேற்று இரவு அந்த பகுதிக்கும் சென்று மீட்பு பணியை மேற்கொண்டோம். மீட்கப்பட்ட 49 , 707 நபர்களில் , 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 67 முகாம்களில் தற்போது இருக்கின்றனர். 5 பெரிய சமையல் கூடம் மற்றும் 43 இடங்களில் உணவு சமையல் கூடம் அமைக்கப்பட்டது . 75 ஆயிரம் நபர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டது. இதுவரை 5 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு சேவைகளும் விரைவில் சரிசெய்யப்படும் , இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். 249 லோடு லாரிகளில் 1200 மெட்ரிக் டன் உணவுப் பொருள்களும் , 81 டன் உணவுப் பொருள்கள் ஹெலிகாப்டர் மூலமும் வழங்கப்பட்டது.
தெல்லை குமரி தென்காசி மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது. தூத்துக்குடியில் 21 ஆயிரம் டன் பால் இன்று விநியோகம் செய்யப்பட்டது , இது வழக்கமான அளவில் 80 விழுக்காடு விநியோகம். பால் பவுடரும் வழங்கப்பட்டுள்ளது .
வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரம் தாமிரபரணி ஆறுதான். 120 க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் 64 திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.. 23 திட்டங்கள் சரிசெய்யப்பட்டு ,தற்போது 45 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 235 நியாயவிலைக் விலைக்கடைகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் 3038 நியாய விலைக்கடைகள் உள்ளன..
தூத்துக்குடியில் ஏரல் உள்ளிட்ட பகுதியில் 68 கடைகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. நெல்லையில் 26 கடைகள் சீர் செய்யப்பட்டு வருகின்றன. குமரி, தென்காசியில் அனைத்து நியாய விலைக் கடைகளும் சரிசெய்யப்பட்டு இயங்கி வருகின்றன. 95 சதவீத நியாய விலைக்கடைகள் சரிசெய்யப்பட்டு விட்டன.173 இடங்களில் நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டது . அவற்றில் 136 இடங்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டன. 37 இடங்களில் பணிகள் நடைபெறுகிறது. 69 சிறுபாலங்கள் பாதிப்பு , 56 சிறுபாலங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. 13 பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
152 சாலைகள் தண்ணீரில் மூழ்கின , அவற்றில் 35 இடங்கள் சரிசெய்யப்பட உள்ளன. 600 இடங்களில் நீர்நிலைகளில் உடப்பு ஏற்பட்டு, 500 இடங்களில் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. 100 இடங்களில் சரிசெய்யப்பட்டு விட்டது.
5 ஆயிரம் பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வந்து பணி செய்கின்றனர் . 35 மனித உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ளன. 3700 குடிசைகள் இதுவரை பாதிப்பு. 318 பசு , எருமை உள்ளிட்ட கால்நடைகள் , 2587 ஆடுகள் உயிரிழப்பு …41, 500 கோழிகள் உயிரிழப்பு. 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின. சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை விரைந்து மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்கள் வருவாய் , வேளாண் , கால்நடை , மீன்வளதுறையில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.. இன்று காலை முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. சேதங்கள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும். போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் நடக்கிறது.சென்னையை போல் 4 மாவட்டங்களிலும் நிவாரணம் விரைந்து வழங்கப்படும் என்று கூறினார்.