இந்திய வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு கடந்த நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் அதிகரித்து ரூ.42,270 கோடியாக உள்ளது என மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாக்வத் கே.கராத் அளித்த எழுத்துபூர்வ பதிலில், ‘நாட்டின் வங்கி கணக்குகளில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகை குறித்து தகவல்களை ரிசர்வ் வங்கி சேகரித்து, அத்தொகையை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
90 சதவீத உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ள 31 வங்கிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 அதிகபட்ச அளவிலான வைப்புத் தொகைகளைத் தேர்ந்தெடுத்து உரியவர்களிடம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 100 நாள்களில் செலுத்த, ‘100 நாள்கள்; 100 தவணைகள்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1432.68 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மதிப்பு ரூ.42,270 கோடியாக இருக்கிறது. அதில் ரூ.36,185 கோடி பொதுத் துறை வங்கிகளிலும், ரூ.6,087 கோடி தனியார் துறை வங்கிகளிலும் உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.32,934 கோடியை விட 28 சதவீதம் ஆகும்’ எனத் தெரிவித்தார்.