லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். முன்னதாக லே மற்றும் கார்கில் என இரு மாவட்டங்கள் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையானது 7 ஆகக் உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் பதிவில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டமைக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. புதிய மாவட்டங்களான சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அவர்களின் வீட்டு வாசலில் கொண்டு செல்லும். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாவட்டங்களால், நிர்வாகத்தை மேம்படுத்தி, மக்களுக்கு மிகவும் தேவையான சேவைகளைக் கொண்டு வருவதன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் முன்னேற்றம் மற்றும் மாற்றத்தின் புதிய விடியலைக் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி அரசினால் ஆகஸ்ட் 5, 2019 அன்று, மாநிலமாக இருந்த ஜம்மு & காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. லடாக் உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஜம்மு & காஷ்மீரில் உள்ள 90 இடங்களுக்கும் முதல் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18 மற்றும் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
புதிய மாவட்டங்களை உருவாக்கிய காரணத்தை விளக்கிய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியதாவது : -“லடாக் பரப்பளவில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். தற்போது உள்ள மாவட்ட நிர்வாகத்தினால் அங்குள்ள மக்களை சந்திக்க முடியாமல் மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் பல சிரமங்களைச் சந்தித்து வருகிறது.
இதனால் புதிய மாவட்டங்கள் உருவான பிறகு, மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் மக்களை எளிதில் சென்றடையும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “MHA இன் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அந்த அறிக்கையானது கூறுகிறது.