இன்று பெண்கள் எல்லாத்துறையிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதும் எந்தவிதமான சவாலையும் சந்திக்கும் ஆற்றல்களை உடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தாய், தங்கை, தோழி, மகள், மனைவி என அனைத்து உறவிலும் பாசத்தையும், அன்பையும் பொழிவதில் அவர்களுக்கு நிகர் எவர் எனும் சொல்லுக்கு உரியவர்களான பெண்களை நம் பாரததேசத்தில் பெருமையாக போற்றி வருகிறோம் என்பது அனைவருக்குமே பெருமை தரும் நிகழ்வாகும்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தை சேர்ந்த சீதா(32) என்னும் பெண்மணி 5,000த்துக்கும் மேற்பட்ட பிணங்களை தன்னந்தனியாக நல்லடக்கம் செய்து உள்ளார். அடக்கம் செய்ய வருபவர்கள் தரும் பணத்தைக்கொண்டு தனது பாட்டி ராஜாம்மாளுக்கு தேவையான உதவிகளையும் தனது புனித சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
எப்பொழுதும் சேலம் பெரமனூரில் உள்ள டி.வி.எஸ் சுடுகாடே கதி என்று வாழ்ந்து வரும் இவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வு, இத்தொழிலுக்கு வர முக்கிய காரணம் என சோகத்துடன் கூறியுள்ளார். தான் சிறுமியாக இருக்கும்பொழுது என் தாயின் உடலில் தீ வைத்து விட்டு என் தந்தை ஊரை விட்டே ஓடிவிட்டார்.
ஒரு மாதம் வரை வீடு,மருத்துவமனை என்று போராடி அவரை காக்க முயன்றோம் இறுதியில் சிகிச்சைபலனின்றி அவர் இறந்து விட்டார். நான் இத்தொழிலுக்கு 12 வயதில் வந்தேன், ஆண்கள் மீது ஏற்பட்ட கோபத்தின் விளைவாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன்.
பிணங்களை அடக்கம் செய்வது ஆண்டவனுக்கு செய்யும் சேவை என்று உறுதியாக நம்புகிறேன். பெண்களை மதியுங்கள் மிதித்து விடாதீர்கள் என்று அவர் கூறியிருப்பது பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் ஆண்களுக்கு சாட்டையடி என்பது திண்ணம்.
(பி.கு) காஞ்சி மகா பெரியவரின் நூலான தெய்வத்தின் குரலில் அனாதை பிணங்களை அடக்கம் செய்பவர்களின் தியாகத்தையும், சேவையையும் மகா பெரியவர் போற்றி கூறியிருப்பதை. சீதா அவரின் புத்தகத்தை படிக்காமலே அம்மகானின் ஆசியையும் புண்ணியத்தையும் நிரம்ப பெற்றுள்ளார் என்பதை நாம் உணர முடிகிறது என்பது உறுதி.