திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவரும் திமுக அரசுக்கு கண்டனம். முதல்வர் ஸ்டாலின், தன்னை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார்.
திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாக கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதும் கண்கூடாக தெரிகிறது.
இந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரியில் 80 கொலைகள், பிப்ரவரியில் 64 கொலைகளும், மார்ச்சில் 53 கொலைகளும், ஏப்ரலில் 76 கொலைகளும், மே மாதத்தில் 130 கொலைகளும், ஜூனில் 104 கொலைகளும், ஜூலை 17 வரை 88 கொலைகளும் என 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து போலீஸை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்தினால், ‘அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்’ என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.