குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள், பாரதப் பிரதமராக 10 ஆண்டுகள் என 24 ஆண்டுகளில், நமது பிரதமரின் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள், 1990களில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின்போது, காஷ்மீர் தீவிரவாதிகள் அச்சுறுத்தலுக்குப் பயப்படாமல், காஷ்மீரில் தேசியக் கொடியேற்றிவிட்டு, குஜராத் திரும்பிய போதும், பிரதமர் மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது, தமது ஆசிரியப் பெருமக்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு ஆகிய இரண்டு முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
நமது பிரதமர் அவர்களின் முழு கவனமும் நாட்டின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமரின் டெல்லி அதிகாரப் பூர்வ இல்லத்தில் தங்காமல், தனது இறுதிக் காலம் வரை குஜராத்திலேயே தங்கியிருந்த தன்னலமற்ற தாய் ஹீராபென் அம்மையார் பெற்றெடுத்த தவப் புதல்வன் இன்று நமது நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்.
நமது பிரதமர் திரு.மோடி அவர்கள் அரசில், பெண் குழந்தைகள் நமது நாட்டின் சொத்துக்கள் என்று பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்தவுடன் அவர்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000, ஆறாவது மாதம் ரூ.2,000, குழந்தை பிறந்தவுடன் ரூ.2,000 என கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வரை, 64% வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு இருந்தது. சமையல் செய்யும் தாய்மார்கள் குறித்த சிந்தனை, அதற்கு முன்பாக பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. தற்போது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் 100% வீடுகளில் புகையில்லா சமையலுக்காக, ரூ.300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, நம் தாய்மார்கள், சகோதர சகோதரிகளின் கண்ணியத்தைக் காத்திருக்கிறார் நமது பிரதமர். தமிழகத்தில் மட்டும் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 8.5 லட்சம் கோடி ரூபாய், மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. திமுகவினரைப் போல, கட்சிக்காரர்களிடம் டோக்கன் வாங்க அலைக்கழிக்கும் செயலில் பாஜக ஈடுபடுவதில்லை. இந்தியா முழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும்போது, தமிழத்தில் மட்டும், மத்திய அரசு வழங்கும் அந்தப் பணத்தைக் கொடுக்காமல், ஊட்டச்சத்து பொருள் என்ற பெயரில் திமுக ஊழல் செய்துகொண்டிருக்கிறது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியில், ரூ.32 மத்திய அரசு வழங்குகிறது. ரூ.2 மட்டுமே மாநில அரசு வழங்குகிறது. சென்னை வெள்ளத்தின் போது கொடுத்த ரூ.6,000 மத்திய அரசு வழங்கிய பணம். இப்படி மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும், திமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
திமுகவில் இருப்பதைப் போல, குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல பாஜக. எளிய குடும்பப் பின்னணியில் இருக்கும் சகோதரிகளும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் கட்சி. அதற்காகவே தேர்தல்களில் 33% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார் நமது பிரதமர் அவர்கள். சாமானிய மனிதருக்கே சாமானியர்களின் வலி தெரியும். 67 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஆட்சியில், அதன் கூட்டணியில் இருந்து திமுக உள்ளிட்ட கட்சிகள், பெண்களுக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. சாமானிய மக்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.
இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களும் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன. ஆனால், சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் மழை வந்தால் வெள்ளம், மறுபுறம் பல ஆயிரம் கோடி ரூபாய் மேம்பாட்டு நிதி எங்கே சென்றது என்றே தெரியாமல் மாநகரத்தின் உட்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இவற்றை எல்லாம் சரி செய்ய, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பக்கம் தமிழகம் நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிப்போம்.