சத்தீஸ்கரின், பஸ்தார் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒன்பது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, நேற்று காலை 10.30 மணியளவில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. அதில், ஒன்பது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) கூட்டாக இணைந்து நக்சலைட்டுகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இந்த என்கவுண்டர் குறித்து தண்டேவாடா எஸ்பி கவுரவ் ராய் கூறுகையில், “பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா எல்லையில் உள்ள கிரண்டுல் காவல் நிலையப் பகுதியில், மேற்கு பஸ்தார் பிரிவு, தர்பா பிரிவு மற்றும் பிஎல்ஜிஏ கம்பெனி எண் 2 ஆகிய பிரிவுகளை சேர்ந்த நக்சல்கள் நடமாட்டம் குறித்து நேற்று (செப் 2) தகவல் கிடைத்தது.
அதன் பேரில், தண்டேவாடாவில் இருந்து டிஆர்ஜி மற்றும் சிஆர்பிஎஃப் குழுவினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், நேற்று நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பதிலுக்கு பாதுகாப்பு வீரர்கள் சுட்டனர். அதில், சீருடை அணிந்த 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை மீட்டுள்ளோம் என்றார்.
மேலும், நக்சலைட்டுகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. நக்சல்களிடம் இருந்து ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில், இன்னும் பிற நக்சலைட்டுகள் இருக்கிறார்களா என்று தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த் ஆபரேஷன் முடிந்த பின் விரிவான அறிக்கை வெளியிடப்படும்” என்று கவுரவ் ராய் கூறினார்.