நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள், துறை வல்லுநர்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமானோரின் கருத்துக்களை பரிசீலனை செய்த பின்னர், புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. தாய்மொழிக்கு முக்கியத்துவம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் சாராம்சம்
5ம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது அந்த மாநிலத்தின் பிராந்திய / வட்டார மொழியில் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படுவதுடன், தாய்மொழியை எழுத, படிக்க தெரியாத அவலம் நீங்கும்.
மாணவர்கள் தங்கள் தாய்மொழியின் இலக்கியம், பாரம்பரியம் ஆகியவைகளை அறிய இது உதவும்.
படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் கல்வியை தொடர, திறந்தவெளி கல்வி ஊக்குவிக்கப்படும். இதனால் 2 கோடி பேர் கல்வியை தொடர முடியும்
பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கும்
இதற்கு முன் மழலையர் கல்வி அரசின் வரம்பில் கொண்டு வரப்படவில்லை. மழலையர் பள்ளிகளும் கண்காணிக்கப்பட்டு தரமான கல்வி உறுதி செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது
தற்போதைய உலகளாவிய சூழல் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். பெருநகரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் அதே தரமான கல்வி ஒரு குக்கிராமத்தில் கல்வி பயிலும் மாணவருக்கும் கிடைக்கும்.
பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த மொழிகள் என்று சம்மந்தப்பட்ட மாநிலங்களே முடிவெடுக்கலாம். இதனால் ஆந்திராவில் இருக்கும் ஒரு மாணவர், 3வது மொழியாக தமிழை கூட எடுத்து படிக்கலாம், அதே போல தமிழகத்தில் உள்ள மாணவர் மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட எந்த இந்திய மொழியையும் மூன்றாவது பாடமாக படிக்கலாம்
கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டு அவைகளுக்கு 15 ஆண்டுகளில் தன்னாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
பட்டியிலினத்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்
கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கு வழி வகை செய்யப்படும்
தமிழ், பாலி, சமஸ்க்ரிதம் உள்ளிட்ட தொன்மையான மொழிகளின் வளர்ச்சிக்கு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
கல்வியறிவு குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும்