நமது ஓட்டு – நமது உரிமை

நமது ஓட்டு – நமது உரிமை

Share it if you like it

வாக்கு என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், நமது நாட்டின் அரசியல் சாசனம் அமைப்பினால், கொடுக்கப்பட்ட உரிமை. தங்களுடைய வாக்கை முறையாக, தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு செலுத்தி, அவர்களை பதவியில் ஏற்ற, ஒவ்வொரு வாக்கும், முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க,  88,947 வாக்குச் சாவடிகளை, தேர்தல் ஆணையம், தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைத்து உள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளன.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில்

பயன் படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் – 1,55,102

பயன் படுத்தப் பட உள்ள மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் – 1,14,205

பயன் படுத்தப் பட உள்ள விவிபேட் (VVPAT – Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் – 1,20,807

கட்டாயம் வாக்கு அளிக்க சட்டம் இயற்றிய நாடுகள்:

அர்ஜென்டினா (1912 முதல்), ஆஸ்திரேலியா(1924 முதல்), பெல்ஜியம் (ஆண்களுக்கு 1892 முதல் பெண்களுக்கு 1949 முதல்), பிரேசில் (2016 முதல்), பல்கேரியா (2016 முதல்), சிப்ரஸ் (1960 முதல்), ஈக்வாடர் (1936 முதல்), எகிப்து (1956 முதல்), கிரீஸ் (1926 முதல்), பெரு (1933 முதல்) மற்றும் பல…

வாக்கு அளிக்காத அந்த நாட்டின் குடிமகன்களுக்கு நூதன தண்டனை வழங்கும் நாடுகள்:

பொலிவியாவில் ஓட்டு போடும் அந்த நாட்டின் வாக்காளர்களுக்கு, ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அதை காண்பித்தால் தான்,  வங்கியில், தங்களது சம்பளத்தை, பெற முடியும். ஒருவேளை ஓட்டு போடாதவர்கள், அந்த அட்டையை பெற இயலாது. எனவே, மூன்று மாத காலத்திற்கு, அவர்கள் தங்களுடைய மாத ஊதியத்தை பெற முடியாது.

சிங்கப்பூரில் ஓட்டு போடாதவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து உடனே நீக்கப்படும். பிறகு, அவர்கள் அதற்கான காரணத்தை கூறியதும், அது சரியா என்று ஆராயப்பட்டு, பின்னரே சேர்க்கப் படுவார்கள்.

பெல்ஜியம் நாட்டில், 15 வருடங்களில் தொடர்ந்து நான்கு தேர்தலில், வாக்கு அளிக்காமல் இருந்தால், அவர்கள் பொதுத் துறையில் வேலை பெற முடியாது.

பெரு நாட்டில் வாக்கு அளித்ததற்கான அடையாளத்தை காண்பித்தால் தான், அவர்கள், அரசின் சேவைகளை பெற முடியும்.

சுவிட்சர்லாந்து, சைப்ரஸ், அர்ஜென்டினா, பெரு போன்ற நாடுகளில் வாக்கு அளிக்காதவர்களுக்கு தண்டனையாக, சில தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு வாக்கும் ஏன் முக்கியம்?

1971 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட M.S. சிவசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிச கட்சி வேட்ளாளர் மத்தியாஸை விட 26 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பீகாரில் உள்ள ராஜ்மஹால் தொகுதியில், பாஜக வேட்பாளர் சோம் மராண்டி, வெறும் ஒன்பது வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2004 ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த A.R.கிருஷ்ண மூர்த்தி அவர்கள், காங்கிரஸ் வேட்பாளரான R துருவ நாராயணனை விட, ஓரே ஒரு ஓட்டு அதிகம் பெற்று, அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

2008 ஆம் ஆண்டு, ராஜஸ்தானில் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில், முதல்வராக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த C.P. ஜோஷி அவர்கள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சிங் சௌகானை விட, ஓரே ஒரு வாக்கு குறைவாக பெற்று, ஓரு ஓட்டு வித்தியாசத்தில்,  தோல்வி அடைந்தார்.

2014 ஆம் ஆண்டு லடாக்கில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பாஜக வேட்பாளர் வெறும் 36 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2018 ஆம் ஆண்டு, மிசோரமில் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில், மிசோரம் தேசிய முன்னணி வேட்பாளர் லால்சந்தமா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட, வெறும் மூன்று ஓட்டு அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.

எனவே தான், ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு வேட்பாளருக்கும், மிகவும் முக்கியமானதாக கருதப் படுகின்றது. நமது நாடு, நமக்கு, அனைத்து வளங்களையும் கொடுத்ததுடன், பல்வேறு சலுகைகளையும் நமக்கு வாரி வழங்கி உள்ளது. மற்ற நாடுகளில், ஒருவர், வாக்கு அளிக்கவில்லை என்றால், அவருக்கு சலுகைகள் பறிக்கப் படுவதுடன், அபராதமும் விதிக்கப் படுகின்றது. ஆனால், நமது நாட்டிலோ, அவ்வாறு அல்லாமல், தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ளாதவர்களுக்கு, எந்த வித இன்னல்களும், , நமது நாட்டின் அரசியல் சாசனம் ஏற்படுத்தவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயமாக வாக்கு அளிக்கும் சட்டம் உள்ள மாநிலங்கள்:

2009 ஆம் ஆண்டு குஜராத்திலும், 2015 ஆம் ஆண்டு கர்நாடகாவிலும்  உள்ளாட்சி, பஞ்சாயத்துத் தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு, அது நடைமுறையிலும் உள்ளது.

கட்டாயமாக வாக்கு அளிக்கும் சட்டம், நமது நாட்டில், அமல் படுத்தக் கோரி, தனி நபர் தீர்மானம் பல்வேறு முறை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டாலும், நடைமுறைச் சிக்கல் காரணமாக அது நிராகரிக்கப் பட்டது.

எது எப்படியாயினும், வாக்காளர்கள் மனது வைத்தால் தான், 100 சதவீதம் ஓட்டெடுப்பு  சாத்தியமாகும்.

100 சதவீதம் ஓட்டெடுப்பு அவசியமானதா.?

இந்தியா நாட்டின் எல்லா குடிமகனும், தன்னுடைய ஜனநாயக கடமையான, ஓட்டுப் போடும் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகவே, 18 வயது பூர்த்தி அடைந்த, அனைத்து இந்திய பிரஜைக்கும், வாக்கு அளிக்கும் உரிமைகளை, நமது நாடு நமக்கு தருகின்றது. அது நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பண ஆசை காட்டி, நியாயமாக பெற வேண்டிய ஓட்டை, பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில், சில அரசியல் கட்சிகள் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதை நாம் பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அதனைக் கட்டுப் படுத்த ஒரே வழி, 100% ஓட்டெடுப்பு என்பதை வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்.

சிலர் தங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்பதற்காகவே, ஓட்டுப் போடாமல் இருந்து விடுகின்றனர். அவர்களுக்கு “நோட்டா” (NOTA – None Of The Above) என்ற ஒரு முறையும் கொண்டு வரப் பட்டு உள்ளது.

ஆனாலும், நோட்டாவிற்கு போடுவதற்கு பதிலாக, தனக்கு யார் பிடித்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டைப் போட்டால், அந்த ஓட்டு, ஒரு நல்ல வேட்பாளர்களுக்கு, சென்று அடையும்.

சேற்றில் “தாமரை” முளைப்பது போல, எந்த ஒரு இடத்திலும், ஒரு நல்லது நிச்சயமாக இருக்கும். அது போல, நமக்கு பிடித்த வேட்பாளர்கள், நிச்சயம் எங்காவது இருப்பார்கள். ஒருவேளை அது கட்சியின் சார்பாக இல்லாமல் இருந்தாலும், சுயேச்சை சார்பாகவாவது நிச்சயமாக இருப்பார்கள். அவர்களை தேடி கண்டு பிடித்து ஓட்டளிக்க வேண்டும்.

நம்மை யார் ஆள வேண்டும்? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்! நம்மை ஆள்பவர்களுக்கே நமது ஓட்டு இருக்க வேண்டும். அதற்காக, நல்லவர்களை தேர்ந்து எடுக்க வேண்டியது, நமது ஒவ்வொருவரின் அத்தியாவசிய ஜனநாயக கடமைகளில் ஒன்றாகும்.

பொது வாழ்வும் தாமரையும்:

தாமரைப் பூவானது, தனக்கு தேவையான நீரை மட்டுமே, தன்னுடைய வேரின் மூலம், உறிஞ்சிக் கொள்ளும். தனது இதழில் தேவையின்றி நீர் இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளாது. அந்த நீரே உருண்டோடி விடும்.

தாமரைப் பூவைப் போலவே, அரசியல்வாதிகளும், இருக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

பல கோடி பணத்தை கண்டவுடன், மனம் மாறாமல், நாணயமாக, நேர்மையாக, பொது வாழ்வில் இருந்தால், தாமரைப் பூவைப் போல தனக்கு தேவையான சம்பளத்தை பெறுவது மட்டுமே, பழக்கமாகக் கொண்டு இருக்கும், நல்ல அரசியல்வாதிகளை மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

அப்படிப் பட்ட நல்ல வேட்பாளர்களை, தேர்ந்து எடுத்து, நமக்கு பிரதிநிதி ஆக்குவதன் மூலமாக, நம்முடைய அனைத்து கோரிக்கைகளும், நல்ல முறையில், நிச்சயமாக நிறைவேற்றப் படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு நமது ஓட்டு மிகவும் அவசியமாகும்.

நமக்கு நல்லது செய்யும் நபர்களை கண்டு பிடித்து…

அவரை தேர்ந்து எடுத்து…

அனைவரும் வாக்கு அளித்து…

வெற்றியடையச் செய்வோம்…

  • .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it