பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழகத்தில், தமிழர்கள், தொன்மை காலத்தில் இருந்தே, வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்களின் நாகரிகம், உலகின் மிக பழமையானது. எனினும், தமிழ்நாட்டிற்கு, சில ஆயிரம் ஆண்டுகள் வரலாறே, நம்மிடம் தற்போது கிடைத்து உள்ளது. பல்லவ அரசு, சேர, சோழ, பாண்டிய பேரரசு காலத்தில் இருந்து தான், முழுமையான வரலாறு உள்ளது.
சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, “தெற்கு தீபகற்ப பகுதி” முழுவதும், தங்கள் பேரரசை விரிவுபடுத்தி இருந்தனர்.
தமிழ் மன்னர்கள், தங்களுடைய ராஜ்ஜியத்தை எங்கு நிறுவினாலும், அங்கு ஏதேனும் ஒரு கோவிலை நிர்மாணம் செய்வதையே, தங்களுடைய பழக்கமாக கொண்டு இருப்பார்கள்.
சோழ வம்சத்தை சேர்ந்த சூர்யவர்மன், 12 ஆம் நூற்றாண்டிலேயே, உலகின் மிகப் பெரிய கோவிலான, “அங்கோர்வாட் ஆலயத்தை, கம்போடியா நாட்டில் கட்டினார். அங்கு, தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழி கல்வெட்டுகள், பெரிதும் காணப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புண்ணிய நீர் – கங்கை:
கண்ணகிக்கு கோவில் எழுப்ப நினைத்த சேரன் செங்குட்டுவன் மன்னர், கோவிலை நிறுவ, இமய மலையில் இருந்து கல்லை எடுத்துக் கொண்டு வந்து, அதை கங்கையில் நனைத்து, பிறகு அந்தப் புனிதக் கல்லைக் கொண்டு, கண்ணகிக்கு கோவில் கட்டி முடித்தார்.
ராஜேந்திர சோழ மன்னர், தன்னுடைய படைகளில் உள்ள ஆயுதத்திற்கு பூஜை செய்ய, கங்கையில் இருந்து நீரை எடுத்துக் கொண்டு வந்து, தெளித்து பூஜை செய்வார்கள் எனவும் வரலாற்று நூல்களில் இடம் பெற்று உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை, கட்டுவதற்கு முன்னர், சோழ வம்சத்தினர், கோவில் நிர்மாணம் செய்ய இருக்கும் இடத்தில், கங்கை நீரைக் கொண்டு வந்து தெளித்து, பூஜை செய்த பின்னரே, கோவில் கட்ட ஆரம்பித்தார்கள்.
இஸ்லாமிய படையெடுப்பு:
இஸ்லாமிய படையெடுப்புகள் மூலம், நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது போல, தமிழகத்திலும் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது.
நமது நாட்டைப் பிடிக்க வந்த, எந்த ஒரு இஸ்லாமிய மன்னரும், முதலில் கோவில்களை கொள்ளை அடிப்பதையே, வழக்கமாக கொண்டு இருந்தனர். அந்த அளவிற்கு கோவில்களில், விலை நிர்ணயம் செய்ய முடியாத நிறைய நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்ற பெரும் செல்வங்கள், கொட்டிக் கிடந்தது என்றால், அது மிகையல்ல.
ஆங்கிலேய படையெடுப்பு:
ஐரோப்பிய நாடுகளில் இருந்து போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய வந்தனர். அவர்களில் ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனியை மசூலிப்பட்டினம் என்ற இடத்தில், 1611 ஆம் ஆண்டு தொடங்கினார்கள். காலப் போக்கில், நமது நாட்டை பிடித்து, நமது மக்களை, அவர்களின் ஆளுகையின் கீழ், கொண்டு வந்து, நம்மை அடிமைப் படுத்தி, நம்முடைய சொத்துக்களை கொள்ளை அடித்தார்கள்.
கோவில்கள் – நல்ல நிலையில் உள்ளதா?:
பலருடைய தாக்குதலுக்குப் பிறகும், நம்முடைய கோவில்கள், இன்னும் நீடித்து நிலைத்து இருப்பதற்கு முக்கிய காரணம், ஆன்மீக பக்தர்களே. நம்முடைய மூதாதையர்கள் செய்த நித்திய பூஜைகளும், வழிபாடுகளும், இறைவன் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கைகளுமே, கோவில்கள், இன்னும் நீடித்து நிலைத்து இருப்பதற்கு, முக்கிய காரணியாக விளங்குகின்றது.
எனினும், அவ்வாறு போராடிப் பெற்ற கோவில்கள், தற்போது நல்ல நிலையில் உள்ளதா? என்பது மிகப் பெரும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
பல போராட்டங்கள் செய்து, விடுதலை அடைந்து, 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாட இருக்கும், இந்த தருணத்திலும், தமிழகத்தில், கோவில்களை அரசு நிர்வாகத்திடம் இருந்து மீட்டு, பக்தர்களே நிர்வகிக்க வேண்டி, தமிழக பக்தர்களும், சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும், பல சாதுக்கள், சந்நியாசிகளும் போராடி வருகின்றனர்.
ஏன் இந்த போராட்டம்?:
தமிழகத்தில் சுமார் 25 ஆயிரத்து 868 ஏக்கர் மதிப்புள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. அந்த நிலங்களின் மதிப்பு 10 ஆயிரம் கோடிக்கு மேலாக இருக்கும். அவை, மற்றவர்களுக்கு விற்கப் பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.
2018 ஆம் ஆண்டு, 9000 ஏக்கர் கோவில் நிலங்கள், பல்வேறு நபர்களால், ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் உலா வந்தன.
திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான 76 ஏக்கர் நிலங்கள், தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளாக காட்சி தருகின்றன. அதனுடைய விலை மதிப்பு 750 கோடிக்கு மேல் இருக்கும்.
சேலத்தில் 100 கோடிக்கும் மேலான மதிப்புள்ள கோவில் சொத்துக்கள், இந்து முன்னணியின் போராட்டத்திற்கு பிறகு, மீட்கப்பட்டது என பத்திரிகைகளில் செய்தி வந்தது.
டிசம்பர் 2020ஆம் ஆண்டு சென்னையில் 67 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக செய்திகள் உலா வந்தன.
கோவில்களுக்கு சொந்தமான 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள், தற்போது, பல்வேறு நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிலங்கள் மன்னர்களால், செல்வந்தர்களால், பல்வேறு பக்தர்களால் காணிக்கையாக, இறைவன் மேல் கொண்ட பக்தியால், கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்டது. ஆனால், அது இறைவனுக்கு போய் சேராமல், சில நபர்களுக்கு சென்று சேர்வது, தமிழக பக்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றது.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் உண்டியல் காணிக்கைத் தொகையில்…
25 – 40 சதவீதம் மாத சம்பளத்திற்கும்,
14 சதவீதம் நிர்வாக செலவுகளுக்கும்,
4 – 10 சதவீதம் ஆணையர் பொது நலத் திட்டங்களுக்கும்,
4 சதவீதம் தணிக்கை அலுவலர்களுக்கும்,
1 – 2 சதவீதம் இதர திருவிழா செலவுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த வகையில், 65 முதல் 70 சதவீதம் வரை, மற்ற செலவுகளுக்கு கோவிலின் உண்டியல் வருவாய் செலவிடப் படுகின்றது.
கோவில்களின் இன்றைய நிலை:
விளக்கு ஏற்ற முடியாமல், எண்ணெய் வாங்க கூட காசு இல்லாமல், நிறைய நிதிப் பற்றாக்குறையில், பல கோவில்கள் உள்ளது. அதை பார்க்கும் போது, பக்தர்கள் மிகவும் வேதனைக்கு ஆளாகின்றனர். கோவில் கட்டிய மன்னர்கள், எந்த காலத்திலும் கோவில்கள் வருவாயின்றி அவதிப் படக்கூடாது என்பதற்காகவே, நிறைய சொத்துக்களை கோவில் பெயரில் எழுதி வைத்து சென்றனர். அந்த வயல்கள், நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கோவிலை நிர்வகிக்கும் பொருட்டு, பல்வேறு விவசாய, தரிசு நிலங்களை, சேர்த்து வைத்து சென்றனர்.
காலப் போக்கில் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது, பல்வேறு இன்னல்களுக்கு, கோவில்கள் ஆளாகி உள்ளது. நல்ல நிலையில் இருக்க வேண்டிய கோவில்கள், கேட்பாரற்று இருக்கின்றன. பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களோ, மற்றவர்களால், அனுபவிக்கப் படுகின்றது. இதை எதிர்த்து கேட்க வேண்டிய அரசாங்கமோ, வேடிக்கை பார்ப்பது, மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது.
இவற்றை கவனத்தில் கொண்டு, கோவில் நிலங்களை, கோவில் சொத்துக்களை, இந்து கோவில்களை, பக்தர்களே நிர்வகிக்கும் பொருட்டு, அரசாங்கம் ஆலயத்தை விட்டு வெளியேறினால், இறைவன் மேல் பக்தி கொண்ட பக்தர்கள், மிகுந்த அக்கறையோடு, ஆலயத்தை நிர்வகிப்பதில், அதிக நேரமும், கவனமும் கொடுப்பார்கள். அதன் மூலம், உரிய மரியாதையும், முக்கியத்துவமும் கோவில்களிலுக்கு கொடுக்கப்பட்டு, நல்ல முறையில் ஆலயங்கள் பராமரிக்கப்படும் என்பது பக்தர்களின் எண்ணமாக உள்ளது.
அதற்காகவே, சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில், தமிழகத்தில், “அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு” என்ற கோஷத்துடன், பல்வேறு வழிகளில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பக்தர்களால், போராட்டம் செய்யப் படுகின்றது.
இந்த அழைப்பிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பல்வேறு திரை பிரபலங்களும், ஆளுமைகளும், “அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு” போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்துக்கள் மட்டுமே, “இந்து சமய அறநிலையத் துறை”யில் பணியாற்ற முடியும். ஆனால், மற்ற மதத்திற்கு மாறியவர்கள், இந்துவைப் போல பெயரை வைத்துக் கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையில் பணி புரிவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
இந்து மதம் கடைப் பிடிப்பவர்களே, இந்து மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களே, மிகுந்த பக்தியுடன் இந்துக் கோவில்களை நிர்வகிப்பார்கள். ஆனால் வேற்று மதத்தினர், எப்படி பக்தியுடன் செய்வார்கள்? என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது.
மற்ற மத வழிபாடுகளில் எவ்வாறு அரசு தலையிடுவது இல்லையோ, அது போலவே, இந்து சமய வழிபாடுகளிலும், கோவில்களை நிர்வகிப்பதிலும், அரசு தலையிடாமல், வெளியேறி, இந்து சமய பக்தர்களால், இந்து கோவில்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே, தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.
அதை அரசு செய்யுமா? காலம் பதில் சொல்லும்..!!
ஒன்று பட்ட இந்து சக்தி..! வெல்வது நிச்சயம்..!!
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai