16 செப்டம்பர், 1916 அன்று, தமிழ்நாட்டின் மதுரை மண்ணில் பிறந்து, தமிழ் மற்றும் பாரத தேசத்தின் பெருமைகளை, உலக சங்கீத அரங்கத்தில் புகழ் பெற செய்த, ‘குஞ்சம்மா’ என்ற கர்நாடக சங்கீத உலகின் ‘அரசி’, ஒரு சரித்திரம் படைக்க பிறந்தால், ஒரு சரித்திரமாக மாறினால்…
தாயிடம் பெற்ற ஆரம்ப சங்கீத கல்வி, அந்த சிறுமிக்கு ஆசீர்வாதமாக இருந்தது. தன் ஊர் மற்றும் தாயாரின் பெயரை, தன் பெயருடன் இணைத்துக் கொண்டு, ‘மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மியாக’ சங்கீத மேடை ஏறினார்.
கலைவாணியின் அருள் மிக்க, குரல் வளம் பெற்ற எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பதினோரு வயதிலேயே, தன் கானத்தால், சபையை கரகோஷம் நிறைய செய்து, சங்கீத உலகில், தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். கோவில்ளில் அரங்கேற்றம் செய்து, லண்டன் கார்னகி ஹால் (London Corneig Hall) வரை, பாடி இருக்கிறார்.
1940 ல், சுதந்திர போராட்ட வீரரும், பத்திரிகையாளரும், இசைக் கலைஞருமான தியாகராஜ சதாசிவ ஐயர், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியை மணந்தார்.
இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான, “பாரத ரத்னா” விருது, இசைக்காக முதன் முதலில் பெற்றவர் (1998), எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி. “பாரத விபூஷண்” விருது (1975), “பாரத் பூஷன்” விருது (1954), “சங்கீத நாடக அகாடமி” விருது (1956), “சங்கீத கலாநிதி” விருது (1968), “ராமன் மகசேசே” விருது (1974) போன்ற பல மதிப்பு மிக்க விருதுகளையும் “எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி” பெற்றார்.
“சங்கீத கலா சிகாமணி” விருது (1975), “காளிதாஸ் சம்மான்” விருது (1988) மற்றும் “தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி” விருதும் (1990) பெற்றார்.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ‘ஆஸ்தான வித்வான்’ ஆனார். இசையில், நிபுணத்துவம் பெற்றதற்காக, பல பல்கலைக்கழகங்கள், அவருக்கு கௌரவ பட்டங்களை வழங்கின.
1966 ல், இந்த கர்நாடக இசை தேவி – சுப்புலக்ஷ்மி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இசை நிகழ்ச்சியில் பாட அழைக்கப் பட்டார் என்பது, யாருக்கும் எளிதில் கிடைக்காத, அரிய வாய்ப்பு.
சுயநலமற்று, கலைக்காக தன்னையே அர்ப்பணித்து, கடும் பயிற்சிகளும் நேர்மையான முயற்சிகளும் எடுத்து, தன் குரல் வளத்தில் தெய்வீக உணர்வை வர செய்து, பல பக்தி பாடல்களை பாடி, கேட்போரின் உள்ளங்களில், தெய்வீக அனுபவத்தை தர செய்ய, வல்லமை கொண்டவர், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பாடி பதிவு செய்யப்பட்ட, ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’, மீராவின் பஜனை ‘ஹரி தும் ஹரோ’ மற்றும் கண்ணன் பாடல் ‘குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ பாடல்களை பற்றி சொல்வதென்றால், இறைவனின் திருவடிகளில், புஷ்பத்தை சமர்ப்பிக்கும் முக்கியத்துவத்தை போன்றதாகும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசத்தின் விடுதலைக்கான துடிப்புடன் இருந்த மக்களின் மனதில், தனது “வைஷ்ணவ ஜனதோ” போன்ற பாடல்கள் மூலமாக, பக்தி கலந்த உறுதியையும், வெற்றிக்கான நம்பிக்கையும் உணரச் செய்தார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி ஒரு முக்கியமான குரலாக மாறினார். சபர்மதி ஆஸ்ரமத்தில், அவரது பஜனைகள், தேசத்தின் மக்களை ஒன்றிணைத்தது. இசை மூலம், வடக்கு மற்றும் தெற்கு பாரதத்தை இணைத்தார். வட இந்தியர்கள், கர்நாடக சங்கீதத்தை கேட்டு, மகிழ செய்தது மட்டுமல்லாமல், தான் ஒரு தெற்கிந்தியராக இருந்தும், பண்டிட் நாராயண ராவ் வியாஸரிடம் பயிற்சி பெற்ற, “ஹிந்துஸ்தானி” சங்கீதமும் பாடி, பாரத தேசத்தின் கலைகளில், ஒற்றுமையை நிலை நாட்டி, இந்த சனாதன பூமியின் கலைகளை, பெருமை அடையச் செய்தார்.
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ஒரு தேசியக் குரலாக மாறினார். அந்த தெய்வீக குரல், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும், லட்சக் கணக்கான உள்ளங்களை, மெய் மறக்க செய்திருக்கிறது.
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்நாள் முழுவதிலும், பக்தியுடன் இறைவனின் நாமத்தையே பாடிக் கொண்டிருந்த, அந்த குரல் வளை, 11 டிசம்பர் 2004 அன்று, நிரந்தரமாக நின்று, தெய்வத்திற்கே சமர்ப்பணம் ஆகி விட்டது. ஆனால், அவரது குரல் அலைகள், இந்த பிரபஞ்சத்தில், என்றைக்கும் அழியாமல் இருக்கும். மக்கள் மனதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்ற மேதையின் நினைவு, மரியாதையுடன் நிற்கும். வீடுகளிலும், கோவில்களிலும் அவரது பாடல்கள், ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பாடல்கள், இசை வரலாற்றில் மென்மையான இடத்தில், நிரந்தமாக பொறிக்கப் பட்டுள்ளது.
- Dr.M. விஜயா