தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தகாரருமான துரைமுருகன் அவர்களின் பேச்சு, அருகில் இருக்கும் நபர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சில சமயங்களில் அமைந்து விடுவது உண்டு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் கண்டக்டர்கள் குறித்து துரைமுருகன் பேசிய பேச்சு தற்பொழுது விவாதத்திற்குறிய ஒன்றாக மாறியுள்ளது அது குறித்த செய்தியை பிரபல தினமலர் பத்திரிக்கை வெளியிட்டு உள்ளது.
அரசு டவுன் பஸ்களில், இலவச பயணம் செய்யும் பெண்களை, கண்டக்டர்கள் தரக்குறைவாகப் பேசினால் அவர்களைத் தாக்குங்கள் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக நகரப் பணிமனையில், காலை 5 மணி முதல் டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொ.மு.ச உள்பட அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.
தகவலறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார், உட்பட பல மூத்த அதிகாரிகள் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் பஸ்களை இயக்கத் தொடங்கினார். இப்போராட்டத்தால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து தனது நக்கல் பேச்சின் மூலமாக பலரின் உணர்வுகளை புண்படுத்தி வரும் அமைச்சர் மீது முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நன்றி ; தினமலர் ;