மேற்குவங்க சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு, பயங்கர வன்முறையை அரங்கேற்றியது திரிணாமுல் காங்கிரஸ். இக்கட்சியின் தொண்டர்கள் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மானப்பங்கப் படுத்தப்பட்டனர். பொது சொத்துக்களும் சூறையாடப்பட்டன. ஆனால், இதையெல்லாம் மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, தற்போது அம்மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தின் போக்டுய் என்ற கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விட்டனர். இச்சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் மேற்குவங்கத்தில் அரசியல் ரீதியாக பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதை கண்டித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொல்கத்தா உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைக் கூட்டம் நடந்தது. இதில், பிர்பூம் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், இது பிர்பூம் படுகொலை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த அக்கட்சியின் தலைமைக் கொறடா மனோஜ் திக்கா உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, மேற்குவங்கத்தில் ஜனநாயகம் செத்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.