தமிழகமும் மேற்குவங்கமும் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கிறது இரு வேறு சம்பவங்கள்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் அமைந்துள்ளது அலியா பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தராக இருப்பவர் முகமது அலி. இவர், தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் சிலரை கல்லூரியை விட்டு நீக்கி இருக்கிறார். இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு முன்னாள் தலைவர் கியாசுதீன் மோண்டல் என்பவரும் ஒருவர். இதனால் ஆத்திரமடைந்த கியாசுதீன் மோண்டல், வெளியேற்றப்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு நேராக, துணைவேந்தர் முகமது அலியின் அறைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் அவரை தாக்கவும் செய்திருக்கிறார்கள். இதை மாணவர்களில் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, அம்மாநில தலைமைச் செயலாளரை அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறார், மேற்குவங்க மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர். துணை வேந்தரை தாக்கியபோது, போலீஸுக்கு பலமுறை போன் செய்திருக்கிறார்கள். ஆனால், போலீஸ் கடைசி வரை வரவே இல்லை. சமீபகாலமாகவே மேற்குவங்கத்தில் வன்முறை தலைவிரித்து ஆடிவருகிறது. குறிப்பாக, மம்தா பானர்ஜி 3-வது முறையாக மீண்டும் வெற்றிபெற்றதும், அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் அராஜகம் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் எப்படி தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அராஜகமும், வன்முறையும் அதிகரித்து வருகிறதோ, அதேபோல மேற்குவங்கத்திலும் மம்தா ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வன்முறை உச்சத்தில் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தீவைத்தனர். இதில், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலத்தின் நிலை இப்படியென்றால், தமிழகத்தின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் ஆசிரிய, ஆசிரியைகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதும், மது அருந்திவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து அராஜகம் செய்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை கண்டித்த ஆசிரியையை ஒரு மாணவர் கத்தியால் மண்டையில் குத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான், கல்லூரி மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரி இருக்கிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே சீனியர், ஜூனியர் என்கிற அடிப்படையில் அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் நடந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையில் இரு தரப்பு மாணவர்களும் கோஷ்டி கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில், பலர் படுகாயமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இரு தரப்பினரையும் தடுக்க முயன்றனர். இதில், அவர்களுக்கும் அடியும் உதையும் பரிசாகக் கிடைத்ததுதான் மிச்சம். ஆக, மொத்தத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர்களாக இருப்பவர்களைப் பொறுத்தே, அம்மாநிலத்தின் செயல்பாடுகளும் இருக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.