பல தலைமுறைகளுக்குப் பிறகு, தனக்கு பெண் குழந்தை பிறந்ததால், அக்குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் வக்கீல் ஒருவர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவ்ன் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரது குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தையே பிறக்கவில்லையாம். எல்லோருக்குமே ஆண் குழந்தைகளாகவே பிறந்திருக்கிறது. இந்த சூழலில், விஷால் ஜரேகருக்கு கடந்தாண்டு திருமணமாகியது. இவரது மனைவி கர்ப்பம் தரித்த நிலையில், தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று கோயில் கோயிலாகச் சென்று வேண்டி இருக்கிறார்கள். அதேபோல, அவரது மொத்த குடும்பமும் பெண் குழந்தைக்காக தவமிருந்திருக்கிறது.
இந்த நிலையில், விஷாலின் மனைவிக்கு கடந்த ஜனவரி மாதம் பிரசவ வலி ஏற்படவே, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். அப்போதும், தங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று மனமுருக வேண்டியிருக்கிறார் விஷால். அவர் எதிர்பார்த்ததுபோலவே, அவரது மனைவிக்கு ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு அவரது மனைவி போசரி பகுதியிலுள்ள அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். அக்குழந்தைக்கு ராஜலட்சுமி என்று பெயர் சூட்டினார்கள். அப்பெண் குழந்தையை பார்க்க வேண்டும் என்று விஷாலின் மொத்த குடும்பமும் ஆவலுடன் இருந்தது. இதையடுத்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து போசாரியில் இருந்து ஷெல்காவ்னுக்கு தனது குழந்தையை அழைத்து வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால் ஜரேகர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறுகையில், “எங்களது மொத்த குடும்பத்திலும் பல தலைமுறைகளாக ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. இதனால், எனது மனைவி கர்ப்பம் தரித்ததும் எங்களுக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். அதன்படியே, எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆகவே, எங்களது மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று அழைத்து வர வேண்டும் என்று நினைத்தோம். எனவே, 1 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தேன். பின்னர், எனது மனைவியின் ஊரான போசாரியில் இருந்து எங்களது வீட்டுக்கு குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தோம்” என்றார்.
தாய், தந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குழந்தை ராஜலட்சுமியைக் காண கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.