ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்தில் சிக்கியவர்கள், நாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் மல்க கூறிய காட்சிகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் என்கிற மலைப் பகுதி இருக்கிறது. இங்குள்ள பாபா வைத்தியநாத் கோயிலிலுக்கு பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், இது சிறந்த சுற்றுலாத்தலம் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் செல்வது வழக்கம். இதற்காக, தமிழகத்தில் பழனி மலை முருகன் கோயிலுக்குச் செல்ல ரோப் கார் வசதி இருப்பது அங்கும் ரோப் கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இது சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 766 மீட்டர் நீளத்துக்கும், 392 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோப் கார் வழித்தடத்தில் 25 கேபிள் கார்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி 12 ரோப் கார்களில் 60 சுற்றுலாப் பயணிகள் சென்றிருக்கிறார்கள். அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பலரும் காயமடைந்தனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, ரோப் காரிலிருந்த ஒரு பெண் கீழே விழுந்து இறந்து விட்டனர். இதனால் ரோப் காரில் இறந்தவர்கள் பதட்டமடைந்தனர்.
எனினும், விமானப்படையினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் ரோப் கார்களில் சிக்கியவர்களை மீட்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 44 மணி நேரம் நடந்த மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மற்றவர்களையும் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்கப்பட்டவர்களில் காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் குடும்பத்துடன் சிக்கிக் கொண்ட வினய் குமார் தாஸ் என்பவர் கூறுகையில், “ரொம்ப நேரம் ரோப் காரிலேயே மாட்டிக்கொண்டோம். நாங்கள் தண்ணீர் குடித்து வெகு நேரமாகி விட்டது. எப்போது இங்கிருந்து செல்வோம் என்ற பயம் மிகுந்திருந்தது. இன்னும் ரொம்ப நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று நினைத்து, சிறுநீரை பாட்டில் சேமித்து கொண்டோம். வெகுநேரம் தண்ணீர் கிடைக்காமல் போனால், அதைக் குடிக்க பயன்படுத்தலாம் என்ற நிலைக்கு வந்தோம்” என்றார்.
மற்றொருவரான நமன் நிராஜ் கூறுகையில், “நான் நம்பிக்கையை இழந்து விட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பு கொள்கிறோம். நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. இந்திய விமானப்படை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் எங்களை மீட்க கடும் முயற்சிகளை எடுத்தன. எனது முழு குடும்பமும் மிகவும் பதட்டமாக இருந்தது. நாங்கள் அமைதியாகவும், இயல்பாகவும் இருக்க ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தோம். மீட்புக் குழுக்களுக்காகக் காத்திருந்தோம். எங்களைக் காப்பாற்றியதற்காக மீட்புக் குழுக்களுக்கு நன்றி” நிரஜ் என்றார் கண்ணீர் மல்க.