‘பீஸ்ட்’ படத்துக்கு கூட்டம் சேர்க்க படாத பாடுபட்டு வருகிறார்கள் விஜய் ரசிகர்கள் என்பதுதான் பரிதாபத்துக்குரிய விஷயம்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியாகி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. படத்தின் ட்ரைலர் படு மாஸாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல, காவி ஸ்கிரீனை கிழிப்பதுபோல காட்சி இருந்ததால் எதற்காக இந்த காட்சி என்கிற கேள்வியும் எழுந்தது. அதேசமயம், காமெடி நடிகர் யோகிபாபு நடித்த ‘கூர்கா’ படத்தின் மறு பதிப்புதான் பீஸ்ட் திரைப்படம் என்கிற விமர்சனங்களும் எழுந்தது. தவிர, இத்திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதால் குவைத் நாடு இத்திரைப்படத்துக்கு தடை விதித்தது. அதேபோல, கத்தார் நாடும் தடை விதித்தது. தொடர்ந்து, இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
எனினும், தடைகளை தாண்டி படம் கடந்த 13-ம் தேதி ரிலீஸானது. ஆனால், எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, படமும் படு மொக்கையாக இருப்பதாக அனைத்து விமர்சனங்களும் தெரிவித்தன. தவிர, படத்தின் முதல்நாள் மூன்றாவது காட்சியைப் பார்க்கவே கூட்டம் இல்லை. இதனால், படம் வணிக ரீதியில் படுதோல்வியைச் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, விஜய் ரசிகர்கள் படு அப்செட். குறிப்பாக, மறுநாளான ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ‘கே.ஜி.எஃப். 2’ படம் படு மாஸாக அமைந்து விட்டது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனையும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸையும் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், படமும் படு தோல்வியைச் சந்தித்ததால் விக்கித்துப் போனார்கள் விஜய் ரசிகர்கள். எனினும், தங்களது தலைவனின் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டுமே என்று புழுங்கினார்கள். விளைவு, பீஸ்ட் படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்தார்கள். அப்படியும் கூட்டம் வரவில்லை. எனவே, ஆதரவற்ற இல்லங்களில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து, தங்களது சொந்த செலவில் படத்தை ஒளிபரப்பு வருகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு விஜய் ரசிகர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது என்று உச் கொட்டுகிறார்கள் மக்கள்.