அஸ்ஸாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதோடு, பலத்து காற்றும் வீசி வருகிறது. அஸ்ஸாமில் ‘போர்டோசிலா’ என்று அழைக்கப்படும் பருவகால மழைதான் இது என்றாலும், நிகழாண்டு கூடுதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகள் பலத்த சேதமடைந்திருக்கின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. மேலும், மின் கம்பங்களும் பலத்த சேதத்துக்குள்ளாகி மின் கம்பிகள் ஆங்காங்கே அறுந்து விழுந்து கிடக்கின்றன.
இந்த மழை வெள்ளதித்ல டின்சுகியா மாவட்டத்தில் 3 பேரும், பக்ஸாவில் 2 பேரும், திப்ருகாரில் ஒருவரும், பிற இடங்களில் 2 சிறுவர்கள் உட்பட 8 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இத்தகவலை தெரிவித்திருக்கிறது. வியாழக்கிழமை முதல் வீசிவரும் இப்புயலில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நிறுவனங்கள் சேதமடைந்திருப்பதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.