காரைக்குடி அருகே கோயிலுக்குச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் சுதந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவர் தற்போது உயிருடன் இல்லை. இவரது மகள் சுகன்யா (வயது 28), தாய் புவனேஸ்வரியுடன் வசித்து வந்தார். சுகன்யா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், புளியங்குடியிருப்பு பகுதியிலுள்ள வெடத்தை அய்யனார் கோயில் திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவுக்குச் சென்ற சுகன்யா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தாய் புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, சுகன்யாவைக் காணவில்லை அவரது தாய் புவனேஸ்வரி சாக்கோட்டை போலீஸில் புகார் செய்தார். ஆனால், சம்பவம் நடந்த இடம் புதுக்கோட்டை எல்லை எனக் கூறி புகாரை வாங்க மறுத்து விட்டது போலீஸ். இதனிடையே, அப்பகுதியிலுள்ள முந்திரிக் காட்டில் பெண்ணின் பையும், செருப்பும் கிடப்பதாக ஊர் மக்கள் சொல்லவே, சம்பவ இடத்திற்கு புவனேஸ்வரியும், அவரது உறவினர்களும் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது, முந்திரிக் காட்டுக்கள் ஆடைகள் அலங்கோலமாகக் கிடக்க பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சுகன்யா இறந்து கிடந்தார்.
இதையடுத்து, மீண்டும் சாக்கோட்டை போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால், அப்போதும் எல்லைப் பிரச்னையைக் காரணம் காட்டி புகாரை வாங்க மறுத்து விட்டது போலீஸ். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், போலீஸை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் போலீஸார் சுகன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.