கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேலமுரியைச் சேர்ந்தவர் எஸ்.கே.ஸ்ரீனிவாசன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் ஏப்ரல் 16-ம் தேதி காலையில் தனது கடையில் இருந்தபோது, 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஸ்ரீனிவாசனை வெட்டிக் கொலை செய்தது. முதல்கட்ட விசாரணையில் இக்கொலையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) மற்றும் அதன் கிளை அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
காரணம், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சுபைர் என்பவர், ஏப்ரல் 15-ம் தேதி அதிகாலையில் தொழுகை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பியிருக்கிறார். அப்போது, காரில் பின்னால் வந்தவர்கள், சுபைர் பைக் மீது மோதி நிலைகுலையச் செய்து, அவர் கீழே விழுந்ததும் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்கள். இக்கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஏனெனில், 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சஞ்சித் என்பவர் இதேபோல காரில் வந்து இடித்து மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் சுபைருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆகவே, இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக சுபைர், அதே மாதிரி கொலை செய்யப்பட்டார்.
எனவே, சுபைர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஸ்ரீனிவாசனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், ஃபிரோஸ், பாசித் மற்றும் ரிஷில் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் சாக்ரே, “பாசித் மற்றும் ரிஷில் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமானவர்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இதில், முதலில் ஸ்ரீனிவாசனை கொலை செய்திருக்கிறார்கள். இதற்காக, 3 ஸ்கூட்டர்களில் ஆட்களும், ஆயுதங்களுடன் ஒரு சிவப்பு காரும் வந்திருக்கிறது. இக்கொலை தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள் மற்றும் பல தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.