ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால், ஹிஜாப் அணிய தடை விதித்தது மாநில அரசு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு, ‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் எனவும், இஸ்லாமிய சட்டத்தில் ஹிஜாப் கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை’ எனவும் உத்தரவிட்டது. இதனால், அடிப்படைவாதிகள் கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரம் அடைந்தனர்.
எனவே, இத்தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில், மார்ச் 17-ம் தேதி மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் ரஹமத்துல்லா பேசும்போது, ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதையடுத்து, மேற்படி ரஹமத்துல்லா, தவ்ஹீத் ஜமாஅத் மதுரை துணைச் செயலர் அசன் பாட்ஷா, மாவட்டச் செயலர் ஹபிபுல்லா ஆகியோர் மீது மத, இன விரோத உணர்ச்சிகளை துாண்ட முயற்சி செய்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
பின்னர், மார்ச் 19-ம் தேதி ரஹமத்துல்லா கைது செய்யப்பட்டார். அசன் பாட்ஷா, ஹபிபுல்லா ஆகியோர் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏப்ரல் 8-ம் தேதி உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. அதேபோல, கைது செய்யப்பட்ட ரஹமத்துல்லா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘மனுதாரர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். அதேபோல், எதிர்காலத்தில் இதே மாதிரி பேசமாட்டேன் என்று உத்தரவாதம் தாக்கல் செய்தால் பரிசீலிக்கலாம்’ என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, சில மணி நேரம் கழித்து மனுதாரர் தரப்பில் ஒரு உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மின்சாரம் தாக்கியதில் எனது மகன் இறந்து விட்டார். இதன் காரணமாக, மனக் குழப்பத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். எனது பேச்சை தவறாகப் புரிந்து கொண்டு உள்நோக்குடன் வழக்கு பதிந்துள்ளனர். எனினும், நிபந்தனையற்ற வகையில் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதை நிராகரித்த நீதிபதி, ‘தேவையற்ற கருத்துக்களை நீக்கிவிட்டு நிபந்தனையற்ற வகையில் மன்னிப்புக் கோருகிறேன் என்று நேரடியாக குறிப்பிட்டு உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்து விட்டார்.
Correct judgement…. Ur son died mean? U don’t know ur sis and ur wife between relationship or what?