சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மின்வாரிய ஊழியரின் திருமண பத்திரிக்கை.
தமிழகத்தில் தொடர் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் அணில்கள் தான் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கு, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் ஆளும் கட்சி மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.
இதனிடையே, இன்று வரை தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. தி.மு.க மாவட்ட கழகச் செயலாளரும் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் இதற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு, தேவையான மின்சாரம் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒருபக்கம் மின்வெட்டால் அவதி மறுபக்கம் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதனையடுத்து, மின்துறை அமைச்சரின் நிர்வாக திறமையின்மையை மையப்படுத்தி மீம்ஸ் கிரியேட்டர்கள் தி.மு.க.வை வறுத்தெடுத்து இருந்தனர். அந்தவகையில், செந்தில் பாலாஜி தற்பொழுது அணில் பாலாஜி என்று நெட்டிசன்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் வினோஜி என்பவர் மின்வெட்டையும், அணிலையும் மேற்கோள்காட்டி வித்தியாசமான முறையில் தனது திருமண பத்திரிக்கையை வெளியிட்டு உள்ளார். தற்பொழுது இந்த பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தி.மு.க அமைச்சரை தொடர்ந்து இப்படியா? புண்படுத்துவது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.